வர்ணாஸ்ரமம் - ஒரு பக்க கதை
டாக்டர் பாலசாண்டில்யன்
9840027810
ஸ்ருதி வருண் இருவருக்கும் நிச்சயம் ஆனது சற்று நம்ப முடியாத விஷயம் தான். பெண் பார்க்கும் படலம் நடந்து கிட்டத்தட்ட ஒரு நான்கைந்து மாதங்கள் இருவரும் பழகிப் பார்ப்பதாக முடிவு செய்தனர்.
தினமும் மாலையில் மால், சப்வே, ஐஸ் கிரீம் பார்லர், பார்க் பீச் என்று பல இடங்களில் அமர்ந்து பேசி விவாதித்து பின்னர் ஒரு வழியாக இருவரும் நிச்சயதார்த்தம் செய்ய அவரவர் வீட்டில் சொன்னார்கள்.
ஸ்ருதி ஒரு ஐடி கம்பெனியில் பெரிய போஸ்ட். வருண் சிஏ மற்றும் லா படித்து விட்டு சுயமாக ஒரு கம்பெனி நடத்தும் குறுந்தொழில் அதிபர். இருவருமே வீட்டுக்கு ஒரே குழந்தைகள். அவர்களுக்குள் ஒற்றுமை குறைவு. வேற்றுமை தான் அதிகம். அதுவே அவர்கள் இருவரும் இணைவதற்கு காரணம் என்பது கூட ஒரு விதத்தில் ஆச்சரியம் தான்.
அடுத்த வாரம் திருமணம். ஸ்ருதியிடம் இருந்து ஒரு போன் வந்தது வருணுக்கு. "வருண் ஒங்கூட கொஞ்சம் அர்ஜென்ட்டா பேசணும், வழக்கமா நாம மீட் பண்ற ஸ்பாட்டுக்கு வந்திடு". திருமணப் பத்திரிகையில் விட்டுப் போனவர்கள் பெயர் எழுதிக் கொண்டு இருந்தவன் திடீரென்று வெளியே புறப்பட்டதை கண்டு வருண் அம்மா சற்று குழம்பித் தான் போனாள்.
என்னப்பா ஏதாவது பிரச்சனையா என்று ஆரம்பிப்பதற்குள் வருண் தனது பைக் எடுத்து பறந்து போனான்.
திரும்பி வந்தான் அரை மணி நேரத்தில். முகத்தில் எந்தவித ஒரு மாற்றமும் இல்லை. இருப்பினும், "அம்மா எனது திருமணம் நடக்காது, அப்பாவிடம் நீ தான் சொல்லணும், காரணம் ஏதும் கேட்காதே" என்றான். வருணின் அம்மா சற்று பேய் அறைந்தது போல ஆனாள்.
வருண் ஒரு முதியோர் இல்லத்தில் டிரஸ்டி. அங்கே புதிதாக ஒரு வயதான ஜோடியை கொண்டு வந்து சேர்த்து விஐபி ரூம் ஒன்று ஏற்பாடு செய்து விட்டு கிளம்பினான். அங்கே மேனேஜரும் எந்த விவரமும் கேட்கவில்லை.
எல்லாமே வருண் ஸ்ருதி சந்திப்பில் நடந்த விஷயம் தான். ஸ்ருதி சொன்னாள்,"வருண் என்னை ஒரு முக்கிய ப்ராஜெக்ட் விஷயமாக ஆறேழு மாதங்களுக்கு ஆஸ்திரேலியா போகச் சொல்லுகிறார்கள். ஆகவே நமக்கு திருமணம் ஆன அடுத்த இரண்டு நாட்களில் நான் கிளம்ப வேண்டும். நீ உனது வீட்டில் இருக்காமல் எனது வீட்டில் தங்கி எனது அம்மா அப்பாவை பார்த்துக் கொள்ள வேண்டும்" என்றாள்.
வருண் வெகு நிதானமாக சொன்னான், "நாம் நல்ல நண்பர்களாக இருப்போம், இந்த திருமணம் நடக்காது. ஆனால் நீ கவலைப்படாமல் வெளிநாடு போய் வா, உனது அம்மா அப்பாவை நான் பார்த்துக் கொள்கிறேன்". ஸ்ருதி ஷாக் ஆகி விடவில்லை. சற்றும் அவளுக்கு சுருதி இறங்கவில்லை. தாங்க்யூ என்று புறப்பட்டு சென்றாள்.
அவளுக்குமே வருண் நடத்தும் முதியோர் இல்லம் பற்றி தெரியாது.
கடைசி வரை எதனால் திருமணம் நின்று போனது என்று வருண் யாரிடமும் சொல்லவில்லை. அதற்காக வருத்தப்படவுமில்லை. அவன் சிறு வயது முதலே எதற்கும் சந்தோஷமோ வருத்தமோ கொள்ளாத ஒரு சந்நியாசி போலத்தான். அவன் படித்த ராமகிருஷ்ணா ஆஸ்ரமத்தில் அவன் கற்றுக் கொண்டது அது தான்.
திருமணம் நின்று போன விவரம் புரியாத ஸ்ருதியின் பெற்றோர் எத்தனை கேட்டும் வருண் எந்த விவரமும் சொல்லவில்லை.
ஸ்ருதி பேதம் நடந்தது. ஆஸ்திரேலியா போன மூன்று மாதங்களில் வருணுக்கு ஒரு போட்டோ வாட்ஸ்ஆப்பில் வந்தது. அவளின் திருமண போட்டோ தான் அது.
வழக்கம் போல அதையும் யாரிடமும் சொல்லவில்லை வருண்.
No comments:
Post a Comment