மான்களின் மனநிலை
- டாக்டர் பாலசாண்டில்யன்
குடும்பத்தோடு வெகுநாள் கழித்து ஒரு திரைப்படம் காணச் சென்றனர் எனது நண்பரும் அவர் இல்லத்தாரும். படம் தொடங்கப் போகிறது. விளம்பரம் திரையில் ஓடிக் கொண்டு இருக்கிறது. தியேட்டரில் இவர்களைத் தவிர யாருமே இல்லை பால்கனியில். எனது நண்பரின் மகன் பால்கனி வழியாக கீழே எட்டிப் பார்த்தான். என்ன ஆச்சரியம். அங்கும் யாருமே இல்லை. என்ன வினோதம். நமது குடும்பம் மட்டும் பார்க்கும் படமா? தப்பு பண்ணி விட்டோமா அப்பா? என்று கேட்டான்.
அட ஒரு ஹோம் தியேட்டர் மாதிரி நமக்கு மட்டும் ஒரு படம். யாரும் இல்லை நம்மை தொந்தரவு செய்ய என்று நினைக்கத் தோன்றவில்லை. ஏன் ஏனில் எப்போதும் முதல் சீன் அல்லது டைட்டில் போடும் போதே விசில் சத்தம் வரும். ஹீரோ அறிமுகம் போது கைதட்டல் மற்றும் விசில் சத்தம் கேட்கவும் வேண்டுமோ? அப்படித் தானே பழகி விட்டோம்...!!
படம் முடிந்து வீடு திரும்பியதும் எனக்கு போன் போட்டு புலம்பி விட்டான் என் நண்பன். ச ...என்னப்பா இது போல இதற்கு முன்பு பார்த்ததில்லை. யாருமே இல்லாத ஒரு தியேட்டரில் எப்படி படம் பார்ப்பது, பயந்து தான் போய் விட்டேன். கொஞ்சம் குழப்பமும் தான். நாம் வேறு படம் போய் இருக்கலாமே என்று. படம் நன்றாகத் தான் இருந்தது. ரசித்து பார்க்கும் மனம் சற்றும் இல்லை. இதை மான்கள் அல்லது மந்தை மனநிலை தான் என்று சொல்லலாம்.
விலங்குகள் மட்டும் கூட்டம் கூட்டமாக இருப்பதில்லை. மனிதர்களும் தான். கூடி வாழும் இனமல்லவா நாம்? மக்களோடு மக்களாக இருக்கவே பெரும்பாலும் விரும்புகிறோம். சுற்றி இருப்பவர்கள் நமக்கு முன்பின் தெரியாத அந்நியர்கள் என்றாலும் அந்த ஒரு கூட்டத்தையே மனம் நாடுகிறது. இது தான் நமது இயல்பு.
இந்த மனோபாவம் தியேட்டரில் மட்டுமல்ல. நாம் செல்லும் பிற இடங்களிலும் தான். உணவு உண்ண ஹோட்டல்கள் சென்றாலும், காலியாக இருக்கும் இடம் சென்று விட்டால், உணவு இங்கு நன்றாக இருக்காதோ, சேவை நன்றாக இருக்காதோ? ஏன் இங்கு கூட்டம் இல்லை. அப்படியே சாப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் நன்றாக இருந்தாலும் நேற்று சமைத்ததோ இன்று சமைத்ததோ என்ற சந்தேகமும் கூடவே வருகிறது.
மாறாக வேறு ஒரு ஹோட்டல் போகிறோம். அங்கு கூட்டம் அலை மோதுகிறது. நமது பெயர் கொடுத்து அரை மணி நேரம் கழித்து உள்ளே அழைக்கிறார்கள். வந்து ஆர்டர் எடுக்க மேலும் இருபது நிமிடம். எல்லோரும் நிறைய கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள். நமக்கும் வருகிறது. பசியோடு உணவில் கை வைத்து ஒரு வாய் உண்டு பார்த்தால் ருசி ரொம்ப சுமார். நமது மனதில் கேட்கும் குரல், "வாயில் வைக்க வணங்கலை...எப்படி தான் இவ்வளவு கூட்டம் வருகிறதோ? விலையும் அதிகம், வந்தால் காத்திருக்கும் நேரமும் அதிகம். ஒன்றும் புரியவில்லையே!" கதவு அருகில், ஏன் கை அலம்பும் வாஷ் பேசின் அருகில் இடம் கொடுத்தால் கூட அமர்ந்து கொள்ளுகிற கூட்டம் பார்த்து குழம்பித் தான் போகிறோம்.
என்னவோ இருக்கிறது இந்த ஹோட்டலில். அது தான் இவ்வளவு கூட்டம் என்று விளக்கம் தரும் இளைய தலைமுறை. நாம் போன நேரம் தவறாக இருக்கலாம். அல்லது நாம் ஆர்டர் செய்த உணவு அயிட்டம் தவறாக இருக்கலாம். அதற்கு தான் பெரும்பாலான மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று பார்த்து அதையே நாமும் ஆர்டர் செய்ய வேண்டும் எனும் வேறு ஒரு இளைஞர்.
அதெல்லாம் இல்லை நான் ஏற்கனவே நெட்டில் மக்கள் போட்டுள்ள கமெண்ட் பார்த்து விட்டுத் தான் இங்கு உங்களை கூட்டி வந்தேன். இப்போது இந்த ஹோட்டல் தான் ட்ரெண்டிங். போன வாரம் கூட என் பிரென்ட் பிறந்த நாள் இங்கு நடந்தது. பேஸ்புக்கில் எவ்வளவு போட்டோ தெரியுமா? இது இன்னொரு குரல்.
இன்னொரு விஷயம் கவனிக்க நேர்ந்தது. விடுமுறைக்கு ஊர் செல்வது. அங்கு தங்கும் விடுதி அல்லது ஹோட்டல் சாய்ஸ். அது மட்டுமா? அங்கு வருபவர்கள் எல்லோரும் பெரிய மனிதர்கள். நாம் எல்லோருமே ஜீன்ஸ் டிஷர்ட் எடுத்துக் கொள்ளுவோம். அங்கு வருபவர்கள் அப்படித் தான் வருவார்கள். அப்படி இல்லை என்றால் குர்தா பைஜாமா போடலாம். சும்மா புடவை வேட்டி என்று எடுத்துக் கொள்ளாதீர்கள்.- இது வேறு ஒரு வீட்டில் அலசப்படும் விஷயம்.
ஆக இந்த மான் அல்லது மந்தை மனநிலை தான் ஐபிஎல் டிக்கெட் வாங்குவது, பிள்ளையை சிங்கப்பூரில் படிக்க வைப்பது, ஹனிமூனுக்கு மாலத்தீவு செல்வது, ஏன் திருமணத்தையே அந்தமானில் வைப்பது, நீட் எழுதச் சொல்லி மகனை தொந்தரவு செய்வது, கொஞ்சம் கால் வலித்தாலும் குறிப்பிட்ட ஒரு ஹாஸ்பிடல் செல்வது, மனக் குழப்பம் என்றால் அந்த சாமியாரிடம் செல்வது ...இப்படித் தான் எல்லோருமே ஒரு சின்னத்தில் ஓட்டு போட்டு அதே ஆசாமியை ஆட்சிக்கு கொணர்வது எல்லாமே.
இந்த மந்தை நிலை சற்று மந்த நிலை கூடத்தான். கூட்டம் அதிகமாக அதிகமாக மூளை ஸ்தம்பித்து போய் யோசிப்பதையே நிறுத்தி விடுகிறது. சுய சிந்தனை, சொந்த கருத்து இவை எல்லாம் இன்றைய காலகட்டத்தில் கொஞ்சம் புதிது தான்.
என்ன நான் தனியாக ஏதாவது பிதற்றுகிறேனா ...இல்லை மக்கள் கருத்தைத் தான் மனக் குரலைத் தான் சொல்கிறேனா? எழுதும் போது சுற்றுமுற்றும் பார்க்கிறேன். நான் மட்டுமே இருக்கிறேன். என்ன படித்து விட்டு லைக் அல்லது கமெண்ட் போடுவீர்களா? பார்க்கலாம் போஸ்ட் போட்டு விட்டு. சும்மா சொல்லி வைக்கிறேன் தாங்க்ஸ் என்று.
No comments:
Post a Comment