Saturday, June 26, 2021

நீங்கா நினைவலைகள் - பகுதி 1

 நீங்கா நினைவலைகள் - பாலசாண்டில்யன்

இது ஒரு புதிய பகுதி. வாழ்க்கையில் சில விஷயங்கள் நம்மால் மறக்க முடியாது. அப்படிப்பட்ட பகிரக்கூடியவற்றை இந்த பகுதியில் தினம் ஒன்றாக பகிரலாம் என்று நினைக்கிறேன். கூடிய வரை படித்தால் சுவையாக இருக்கும் படி எழுதிட முயற்சிக்கிறேன்.
நெடுநாள் தேங்கிய நீரில் படிந்த பாசியை போல மனதின் ஆழத்தில் நின்றுவிட்ட நினைவலைகள் எப்போதும் ஈரமிக்கதாக அப்படியே தன் இருப்பை காட்டிக் கொண்டிருக்கின்றன.
நான் படித்த பள்ளி சென்னை மேற்கு மாம்பலம் ஈஸ்வரன் கோவில் தெரு அருகே (தற்போது இருக்கும் மாட்லி சப்வே நடுவே) திரு வெங்கட்ராமன் மற்றும் திரு பூவராகவன் அவர்களால் 1936 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மிகவும் தரமான ஸ்ரீ சாரதா நடுநிலைப் பள்ளி. இதன் தாளாளர் திரு வெங்கட்ராமன் அவர்கள், இதன் தலைமை ஆசிரியர் திரு பூவராகவன் அவர்கள், உதவி தலைமை ஆசிரியர் திரு ஸ்ரீனிவாசன் (எனது நண்பன் திரு எதிராஜன் அவர்களின் தந்தை). சென்ற ஆண்டு இந்தப் பள்ளி தமது 83வது ஆண்டு விழாவை கொண்டாடினார்கள் என்று நியூஸ் டுடே பார்த்து தெரிந்து கொண்டேன்.
இந்தப் பள்ளியில் நான் 1964 முதல் 1971 வரை பயின்றேன். அங்கே படித்து வளர்ந்து மிகப் பெரிய பதவிகளில் அமர்ந்தவர்களில் எனது நண்பர்கள் திரு எதிராஜன் மற்றும் கிரிதரன் இன்றும் என்னோடு தொடர்பில் இருக்கின்றனர். அது மட்டுமா ? அங்கே படித்த எனது உறவினர்களும் இன்று பெரிய பதவிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர்.
இந்த பள்ளியில் ஆசிரியர் ஆண்கள் என்றால் அவர்கள் ஜிப்பா பஞ்சகச்சம் மற்றும் அங்கவஸ்திரம் அணிந்து இருப்பர். திருமணம் ஆன ஆசிரியர்கள் என்றால் பெரும்பாலும் மடிசார் அணிந்து இருப்பர்.
நெற்றியில் பொட்டு இல்லாமல் குழந்தைகள் பள்ளிக்கு வரக்கூடாது. தினமும் பள்ளி மைதானத்தில் நின்று சாரதா ஸ்லோகம் சொல்ல வேண்டும். வகுப்பறைகள் எல்லாமே கூரை நெய்த ஒன்று. கட்டிடம் இல்லை. ஆண்கள் மற்றும் பெண்கள் படிக்கும் கோ எட் பள்ளி தான் அது. தமிழ் மீடியம் தான். பிள்ளைகள் அமர பெஞ்ச் தான் இருக்கும்.
ஆசிரியர்கள் எல்லோருமே நமது உறவினர் போல அக்கறையுடன் இருப்பர். நாங்கள் சுமார் ஏழெட்டு உறவினர் ஒன்றாக (கிட்டத்தட்ட சம வயதினர்) படித்தோம். அவரவர் வீட்டில் இருந்து கட்டிக்கொண்டு போன சாப்பாட்டை மைதானத்தில் வட்டமாக அமர்ந்து ஒருவருக்கொருவர் சாப்பாட்டை பகிர்ந்து நிலாச்சோறு போல தினம் தினம் சாப்பிடுவோம்.
என் அம்மா சில நேரம் எனக்குப் பிடித்த சேமியா உப்புமா செய்து மதிய உணவாக அனுப்புவார். தொட்டுக்கொள்ள சர்க்கரை. ஒரு நாள் காலை வகுப்பு முடிந்ததும் மதிய உணவுக்கான மணி அடித்தது. நான் வழக்கம் போல ஆசையாக ஓடிப்போய் எனது டிபன் டப்பாவை (அது ஒரு தூக்கு) எடுத்தேன். அது கனம் இல்லாமல் காலியாக இருந்தது. கவலையுடன் திறந்து பார்த்தேன். எனக்கு ஏமாற்றம். அதில் நான் ஆசையாக எதிர்பார்த்த சேமியா உப்புமா இல்லை. எல்லாம் காலி.
நான் சாப்பிடப் போகாமல் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் பாக்கெட் மணி கிடையாது. எனது உறவினர்கள் எனக்காக காத்திருந்து விட்டு அவரவர் வகுப்புக்கு சென்று விட்டனர். அப்போது அங்கே நுழைந்த எனது ஆசிரியை சரோஜா நான் அழுது கொண்டிருப்பதைப் பார்த்து விவரம் கேட்டார். நான் எனது டப்பா காலியான விஷயம் சொன்னேன்.
உடனே சற்றும் தயங்காமல் ஆபீஸ் பியூனை அழைத்து தனது பர்சில் இருந்து பணம் கொடுத்து எனக்கு அருகில் இருந்த உடுப்பி ஹோட்டலில் இருந்து இரண்டு இட்லி வாங்கி வரச்சொல்லி எனது கண்ணீரை துடைத்து விட்டார். ஒரு அம்மாவைப் போல எனது கண்ணீர் துடைத்த சரோஜா டீச்சர் இப்போது உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் அவரை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன் மிகுந்த நன்றியுடன்.
நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்.

No comments:

Post a Comment