Monday, June 28, 2021

நீங்கா நினைவலைகள் - 4

 நீங்கா நினைவலைகள் - 4

- பாலசாண்டில்யன்
இன்று மதிப்பெண் பெற்று நிற்கும் மாணவர்களை உருவாக்கும் ஒரு தொழிற்சாலை போல இல்லை நான் படித்த ஸ்ரீ சாரதா நடுநிலைப் பள்ளி. முதல் எட்டு வகுப்பு வரை அந்த அடித்தளம் என்கிற பேஸ்மென்ட் மிக ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். அப்படிப்பட்ட ஒரு பள்ளிக்கூடம் அது என்றால் மிகையல்ல.
அந்த வகையில் அங்கே படித்த ஒவ்வொரு மாணவ மாணவியரும் படிப்பைத் தாண்டி பாட்டு, ஸ்லோகம், கைத்தொழில், ஒழுக்கம், வாழ்வியல் மதிப்பீடுகள் சொல்லும் நல்லொழுக்க விஷயங்கள், பெற்றோரை மதித்தல் என்று பல விஷயங்கள் கற்றுக் கொண்டனர். அங்கே பணி புரிந்த ஆசிரியர்கள் எல்லோருமே தமது பணியை ஒரு தவமாக நினைத்துப் பணியாற்றினர்.
பிள்ளைகள் மீது கனிவு, பரிவு, கருணை மற்றும் கண்டிப்பு என்று இருந்தனர் என்பது இன்று நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கும்.
எனது பயிற்சி வகுப்புகளில் (ஜிஎம், வங்கி மேலாளர், நிறுவன அதிகாரி, அரசு அதிகாரி என்று பலருக்கு) நான் வழக்கமாக ஒரு கேள்வி கேட்பது உண்டு. மிக எளிதான கேள்வி. "வெண்டைக்காய் கால் கிலோ நான்கு ரூபாய், 450 கிராம் என்ன விலை ?" நூற்றுக்கு 98 பேர் தவறான விடை தந்தனர். வெகு சிலரே 7 ரூபாய் 20 பைசா என்ற சரியான விடை தந்தனர். நான் பெற்ற பயிற்சி அப்படி.
காரணம், எங்கள் ஆசிரியர் அந்த மனக்கணக்கை மிகச் சிறப்பாக சொல்லித் தந்தனர். வாய்ப்பாடு எல்லோருக்குமே தலை கீழ்ப் பாடம். எல்லோரின் கையெழுத்தும் முத்து முத்தாக இருக்கும். அதற்கான தனிப் பயிற்சி, மற்றும் போட்டிகள் வைத்து அதனை மேம்படுத்துவர்.
இங்கே மிக முக்கியமான ஒரு ஆசிரியர் பற்றி சொல்லியே ஆக வேண்டும் (பாட்டு வாத்தியார் என்றே எல்லோரும் சொல்லுவர் - அவரின் உண்மையான பெயர் வரதாச்சாரியார் என்று எனக்கும் பல நாள் தெரியாது.) கட்டுக்குடுமி, மிடுக்கான நடை, ஜிப்பா, அங்கவஸ்திரம், பஞ்சகச்சம், நெற்றியில் திருநாமம் என்று அவர் வந்து நின்றாலே பக்தி பயம் மரியாதை எல்லாமே தோன்றும்.
அது மட்டுமா? அவர் வியாழன் அன்று சவரம் செய்து பளபள என்று வருவார். அன்று சற்று அதிக கோபத்துடன் இருப்பார். கையில் ஒரு குச்சி அதனை சீவி வைத்திருப்பார். கேள்விகள் கேட்பார். பதில் சொல்லாதவர்கள் கையைத் திருப்பச் செய்து மணிக்கட்டில் தக்க சன்மானம் தருவார். சில நேரம் காதைப் பிடித்து திருகுவார். பெண் குழந்தைகளை அவர் அடிக்க மாட்டார். (அதற்கேற்றவாறு அவர்களும் எந்த கேள்விக்கும் முழிக்க மாட்டார்கள், அது வேறு விஷயம்).
அவரைப் போலவே மறக்க முடியாத சில ஆசிரியர்கள் திரு பாபு, திரு கண்ணன், திருமதி கமலா, திருமதி வசந்தி, திரு ராமமூர்த்தி ஆகியோர்.
பகட்டாக இல்லை என்றாலும் பலரை பட்டை தீட்டிய வைரமாக மாற்றிய ஓர் அலாதிப் பள்ளிக்கூடம். எப்படியும் 9 வது படிக்க எல்லோரும் வேறு பள்ளிக்கு போய்த்தான் ஆக வேண்டும். ஏனெனில் அங்கு 8 ஆம் வகுப்பு வரை தான். நான் அங்கே படித்தது 7 ஆம் வகுப்பு வரை தான்.
எனது வாழ்வில் அது முக்கியமானதொரு கட்டம். மிகப்பெரிய ட்விஸ்ட் அண்ட் டர்ன் (மாற்ற முடியாத திருப்பம் ஏற்பட்ட தருணம்) அது. எனது அப்பா ரயில்வேயில் பணி புரிந்த காரணத்தால் பணி மாற்றம் ஏற்படும் வேலை. அவருக்கு திருச்சிக்கு மாற்றல் ஆனது. எனது இரண்டாவது தங்கைக்கு ஒரு வயது இருக்கும். அப்பா, அம்மா, நான், தவிர இரண்டு தங்கை, ஒரு தம்பி என்று இத்தனை பேர் திருச்சி சென்று குடி இருப்பது என்பது பொருளாதார ரீதியாக முடியாது என்று அந்த மனப்போராட்ட நிலை. எனது அம்மா வழிப் பாட்டிக்கு (தாத்தா வீடு) குளித்தலை வைகைநல்லூர் அஹ்ரகாரத்தில் மிகப்பெரிய வீடு சும்மா தான் கிடந்தது. அங்கே எனது பெரிய பாட்டிகள் இருவர் மட்டுமே தனியாக இருந்தனர்.
அங்கே குடி போவது என்று முடிவானது. நாங்கள் அனைவரும் குளித்தலைக்கு மாறினோம்.அந்த வீட்டில் 13 அறைகள். சில திருமணங்கள் அங்கு நடந்துள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். திருவீதி முதல் பின்னால் தோப்பு தாண்டி வாய்க்கால் வரை தாத்தா வீடு. சின்ன குச்சு வீட்டில் இருந்து பழகிய எங்களுக்கு அது புதுசாக இருந்தது.
அப்பா தினமும் காலை 7.30 மணிக்கு ரயில் பிடித்து திருச்சி சென்று இரவு வீடு திரும்புவார். என்னை அரசினர் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பில் சேர்த்தார். வீட்டில் இருந்து சுமார் 40 நிமிடம் நடந்தால் தான் பள்ளிக்கு போய்ச் சேர முடியும். தம்பி தங்கைகள் வீட்டின் அருகில் இருந்த சிறிய நடுநிலைப் பள்ளியில் சேர்த்தார்.
நகரத்திற்கும் கிராமத்திற்கும் உள்ள அந்த மாறுதல் எனக்கு பெரிய அதிர்ச்சியாக புதிதாக இருந்தது. அந்தப் பள்ளியில் ஆண்கள் மட்டுமே இருந்தனர். பல ஆசிரியர்கள் - அப்படிச் சொல்ல கஷ்டமாக இருந்தாலும் - கூலிக்கு மாரடிக்கும் வேலையே பார்த்தனர். லைப்ரரி, லாபரட்டரி லாவடரி (நூலகம், நல்ல கழிவறை, குடிநீர், மற்றும் ஆய்வகம்) ஏதும் இல்லாத பள்ளி. பிள்ளைகள் பெரும்பாலும் ஏழை மாணவர்கள். நிறைய நேரம் தமது தந்தைக்கு உதவிட விவசாயம் பார்க்க விடுமுறை எடுத்துக் கொள்ளுவர்.
சிலர் வாலிபால், கபடி, பாஸ்கெட் பால் விளையாட்டில் சிறந்து விளங்கி அவற்றில் கவனம் செலுத்தினர். சிலர் NCC யில் சேர்ந்து உடல் ரீதியான பயிற்சி பெற்று பின்னாளில் போலீஸ் மற்றும் மிலிட்டரியில் சேர ஆர்வம் கொண்டவர்களாக இருந்தனர். தற்போது குளித்தலை தொகுதியில் திமுக MLA வாக தேர்வாகி இருக்கும் திரு மாணிக்கம் அவர்கள் எனது வகுப்புத் தோழன். இன்றும் பலரோடு தொடர்பில் இருக்கும் நண்பர் திரு நரசிம்மன் (குளித்தலையில் அப்போது சப் மாஜிஸ்ட்ரெட் ஆக இருந்த திரு ராமச்சந்திரன் அவர்களின் மகன்) சொல்லித் தான் எனக்குத் தெரியும்.
எனக்கு பிடித்த ஒரு விஷயம் ஒன்று அங்கே இருந்தது. பள்ளிக்கு இரண்டு வீடு தாண்டி எனது மாமா வீடு இருந்தது. மதிய சாப்பாடு அவர்கள் வீட்டில். அங்கே சாவித்திரி மாமியின்
அருமையான
சுவையான சாப்பாடு. கையில் டிபன் டப்பா தூக்க வேண்டாம்.
மற்றபடி அந்த நான்கு வருடங்கள் (8, 9,10, 11 வகுப்பு - அதாவது எஸ் எஸ் எல் சி வரை) எனது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது என்று மேலும் சொல்லுவேன்.
நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்.

No comments:

Post a Comment