Sunday, June 27, 2021

நீங்கா நினைவலைகள் - 2

 நீங்கா நினைவலைகள் - 2

- பாலசாண்டில்யன்
சில நினைவுகள் அவ்வளவு முக்கியமானதாக இருக்காது. இருந்தாலும் அது நமது நெஞ்சை விட்டு அகலாது.
நான் படித்த சாரதா நடுநிலைப் பள்ளியில் உணவு நேரத்தில் எப்போதும் சாப்பிட்டு முடிந்த பிறகு எனது வகுப்பு இருந்த முதல் மாடியில் என் வகுப்புக்கு அடுத்த அறை. அங்கு சில ஆசிரியர்கள் அமர்ந்து சின்ன அரட்டை அடித்துக் கொண்டு இருப்பார்கள். அதற்கு அடுத்த அறையில் எனது மிகவும் பிடித்த ஆசிரியர் விட்டல் ராவ் சார் படுத்து சற்று ஓய்வு எடுப்பார். என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும். "வா பாலு" என்று என்னை அழைத்து அவர் வயிறு மீது உட்காரச் சொல்லி ஏதாவது சின்ன பாட்டு பாடச்சொல்லி கேட்பார். மதிய நேர மணி அடித்ததும் நான் எனது வகுப்புக்கு விரைவேன். விட்டல் ராவ் சாரின் அந்த அன்புக்கு அடுத்த நாள் நான் காத்திருப்பேன். என்னுடைய நெருங்கிய உறவினர் போன்ற உணர்வைத் தந்தவர் அவர்.
இன்னொரு விஷயம் இங்கே சொல்லியே ஆக வேண்டும். இப்போதெல்லாம் பெரிய பள்ளிகளின் முன்பு பேக்கரி, ஜூஸ் மற்றும் ஐஸ் கிரீம் கடைகள் உள்ளன. சில சமயம் பள்ளிகளிலேயே கான்டீன் வைத்திருக்கிறார்கள். அன்று அப்படி இல்லை. அங்கே படிக்கும் பிள்ளைகள் எல்லோருமே நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள் தான். அதற்கேற்ற சில விஷயங்கள் எப்படியோ மதிய சாப்பாட்டு இடைவெளி நேரத்தில் சில திடீர் தெருவோர கடைகள் முளைத்திருக்கும். அங்கே வேர்க்கடலை, கொடுக்காப்புளி, இலந்தைப்பழம், பால் ஐஸ், மிளகாய் பொடி உப்பு தடவிய கிளி மூக்கு மாங்கா பத்தைகள், மிட்டாய்கள், கடலை மிட்டாய், தவிர கையில் கடிகாரம் போல கட்டி விடும் (மூங்கில் கம்பு ஒன்றில் இருந்து ஜவ்வு போல பிடித்து இழுத்து அறுத்து ) ஒரு விதமான மிட்டாய் எல்லாம் விற்பர். என்னிடம் கையில் காசு இருக்காது. ரொம்ப அரிதாக என் வகுப்புத் தோழர்கள் பால் ஐஸ் வாங்கித் தருவார்கள்.
எனக்கு மிகவும் பிடித்தது பால் ஐஸ் மற்றும் அந்த கடிகார ஜவ்வு மிட்டாய். ஒரு நாள் வீட்டை விட்டு கிளம்பும் போது கீழே ஒரு பத்து பைசா காசு கிடைத்தது. கீழே கிடக்கும் காசை எடுக்கக் கூடாது என்று எனது பாட்டி சொல்லுவது உண்டு. இருந்தாலும், ஏதோ தவிர்க்க முடியாத அந்த ஆசையில் எடுத்து விட்டேன். காலை வகுப்பு எப்போது முடியும். தெருவைத் தாண்டி இந்த பத்து காசை வைத்து பால் ஐஸ் வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆவலில் அந்த நாள் முழுதும் படிப்பில் கவனமே செல்லவில்லை. அந்த நேரமும் வந்தது, நானும் வேகமாக வட்ட நிலா சோற்றை முடித்துக் கொண்டு விட்டல்ராவ் சாரைக் கூட பார்க்கப் போகாமல் தெருவை கிராஸ் செய்து ஓடிப் போய் பால் ஐஸ் வாங்கி சாப்பிட ஆரம்பித்தேன். உடல் நடுங்குகிறது எனக்கு. எனது உறவினர்கள் யாரேனும் (அதே பள்ளியில் படிப்பவர்கள் தான் நேற்றே சொன்னது போல) பார்த்து விடப் போகிறார்கள் என்று. அந்த ஐஸ் நிச்சயம் ருசியாகவே இல்லை என்று இங்கே சொல்லவும் வேண்டுமோ ?
எனது வகுப்பு ஜி செக்ஷன். ராமமூர்த்தி சார் பையன் பாஸ்கர், ஜி ஆர் கிருஷ்ணமூர்த்தி, வசந்தி, சாந்தி, எஸ் பி உஷா இப்படி எல்லோருமே அதி புத்திசாலிகள். நானும் எப்படியும் முதல் ஐந்து ரேங்க் வாங்கி விடுவேன். போட்டி எல்லாமே இவர்களோடு தான். இவர்கள் பேரெல்லாம் எனது அப்பாவுக்கு அத்துப்படி. எனக்கு ஒவ்வொரு முறை பரீட்சை நடக்கும் போதெல்லாம் மூன்று முறை அர்ச்சனை அல்லது அடி விழும். எப்படி என்கிறீர்களா? முதலில் பரீட்சை முடிந்த அன்று "இன்று எப்படி எழுதி இருக்கிறாய்?" என்ற கேள்வி எழும். நானும் நல்லா தான் எழுதி இருக்கேன். உன் கண்ணே சரியில்லையே, மார்க் வரட்டும் இருக்கு உனக்கு என்பார். அதற்கு அடுத்தபடி மார்க் பேப்பர் ஒவ்வொன்றாக வெளியாகும். அதிலும் அப்பா கையெழுத்து போட வேண்டும்.
அப்போது மேலே சொன்ன ஒவ்வொருவர் பேரையும் சொல்லி அவன் எவ்வளவு, அவள் எவ்வளவு என்று கேட்டு உரிய தண்டனை கிடைக்கும். எனது மார்க் என்னவோ 97 அல்லது 98 என்று தான் இருக்கும். மீதி இரண்டு மார்க் எங்கே என்று கேட்பார் அப்பா. மூன்றாவது கட்டம் ப்ரோக்ரஸ் கார்டு வாங்கி வரும் ஒன்று. அதில் அந்த ரேங்க் என்ற ஒரு எழவு இருக்கும். மூன்று அல்லது நான்கு என்று இருந்தால், "போன முறை இரண்டாவது எடுத்தாய், பாருடி உன் பிள்ளையின் கழுதை தேஞ்சு கட்டெறும்பான கதையை. இதோ பாரு இந்த நான்காவது ரேங்க்குக்கு நான் கையெழுத்து போட மாட்டேன். உன் அம்மா கிட்ட வாங்கிக்கோ." அம்மாவும் போடலாம். இருந்தாலும் அப்பா போடணுமே.
நானும் அம்மாவைப் பார்த்து கண்ணால் கெஞ்சுவேன். வெச்சுட்டு போ நிச்சயாமாக உங்கப்பா கையெழுத்து போட்டுடுவார் என்பார். அதே போல மாலையில் வந்து பார்த்தால் அதில் அவரின் அழகான கையெழுத்து இருக்கும் (அவரின் கையெழுத்து மிகவும் அழகாக இருக்கும்). ஆக எப்போதுமே ஒரு அழுத்தம் முதல் இரண்டு அல்லது குறைந்த பட்சம் மூன்றாவது ரேங்க் எடுத்தே ஆக வேண்டும் என்று. அதனால் படிப்பைத் தவிர வேறு எதிலும் மனம் லயிக்காது. இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. நாளை தவறாமல் படியுங்கள்.
நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்.

No comments:

Post a Comment