Tuesday, June 29, 2021

நீங்கா நினைவலைகள் - 5

நீங்கா நினைவலைகள் - 5
- பாலசாண்டில்யன் 

குளித்தலை என்றாலே அகண்ட காவிரி ஓடும் அருமையான ஊர். முசிறிக்கு அந்தக் கரை. நான் அங்கே படிக்கப் போன சமயம் 1970 களில் முசிறி செல்ல காவிரியில் நீர் இல்லாத பொழுது மணலில் இறங்கி நடப்பர். ஆடி மாசம் மற்றும் நிறைய தண்ணீர் வரும் போது பரிசலில் ஏறி அக்கரைக்கு செல்லுவார்கள். சுமார் 2 கி மி தூரத்தைக் கடக்க பின்னாளில் தந்தை பெரியார் பாலம் கட்டப்பட்டது. அதில் பயணம் செய்யும் போது காவிரியின் அழகு அப்படியே கண்ணில் தாண்டவம் ஆடும். இது தமிழகத்தின் மிக நீளமான பாலங்களில் ஒன்று. 

தவிர, மாரியம்மன் கோவில், திருச்சி ஒன்றரை மணி நேரம். இந்தப் பக்கம் கரூர் ஒன்றரை மணி நேரம். மூன்று தியேட்டர்கள். ஸ்டேஷன் அருகே ஒரே ஒரு கடைவீதி. காவிரிக்கரையில் கடம்பவனேஸ்வரர் கோவில். 

நிறைய பேர் (ஆண் பெண் இருபாலரும்) காலையில் சென்று நதியில் நீராடி, கோவிலுக்கு போய் சுவாமி தரிசனம் செய்து, நெற்றி நிறைய விபூதியுடன், ஒரு குடத்தில் வீட்டுக்கு தண்ணீர் கொண்டு வருவர். துணியும் அங்கேயே தோய்த்து தோளில் போட்டுக் கொண்டு வருவர். தெருவில் காலை நேரத்தில் வாழைக்காய், வாழைப்பூ, வாழை இலை, வாழைப்பழம், இதர தோட்டத்து காய்கறிகள் விற்பனைக்கு நினைத்தே பார்க்க முடியாத விலைக்கு வரும். மாலையில் மணி அய்யர் வண்டியில் போண்டா, மிக்ஸர், பக்கோடா என்று மணக்கும். 

திருமணத்திற்கு முன்பு என் அம்மாவும் இதே ஊரில் அரசினர் பெண்கள் மகளிர் பள்ளியில் எஸ் எஸ் எல் சி வரை சிறப்புத் தமிழ் எடுத்துப் படித்தார். அவரும் மிகச் சிறந்த கவிஞர். பாடலாசிரியர்.

வீட்டிலோ முற்றம், தாவாரம், திண்ணை, கொல்லைப்புறம், தோட்டம் என்று நாலு முறை நடந்தாலே நேரமும் சக்தியும் போய் விடும். மொட்டை மாடியும் உண்டு. வாசல் திண்ணை தாண்டினால் என் பாட்டியின் அலறல் சத்தம் காதைப் பிளக்கும். வாசலில் பம்பரம், கிட்டிப்புள், கோலி, கிரிக்கெட் என்று நிறைய பேர் ஆடுவார்கள். அவர்களோடு சேரக்கூடாது என்று கட்டளை இருக்கும். சில சமயம் மட்டும் எதிர் வீட்டு பண்ணை வீட்டுக்கு சென்று சற்று விளையாட அனுமதி உண்டு. சுப்பாளு பாட்டி பேரன் என்று சொன்னாலே சில பிள்ளைகள் நாலு அடி தள்ளி நிற்பர். பாட்டி அவ்வளவு டெரர். என் அப்பாவை ஊரே மாப்பிள்ளை என்று அழைத்துக் கொண்டாடும். 

பல பேர்  வாசலில் அமர்ந்து வெற்றிலை போட்டு நாள் முழுதுமே அரட்டைக் கச்சேரி நடத்துவர். எல்லோருக்கும் எல்லோர் வீட்டிலும் நடப்பதும் எப்படியோ தெரிந்திருக்கும். சில நேரம் மாட்டு வண்டி, குதிரை வண்டி சத்தம் கேட்கும். சினிமா தியேட்டர்கள் தனி மாட்டு வண்டியில் மேளதாளத்தோடு படம் பற்றிய நோட்டிஸை விசிறி அடித்த படி செல்லுவர். புன்னகை, நவாப் நாற்காலி, கந்தன் கருணை, எதிர்நீச்சல், என்று மிகவும் தேர்வு செய்த படங்களுக்கு எங்கள் தெரு முக்கில் இருந்த தியேட்டரில் சென்று அனைவரும் பார்ப்பதுண்டு. அம்மா நிச்சயம் வர மாட்டார். 10, 30, 60 பைசாவில் டிக்கெட் என்று தான் நினைவு. 

என்னுடைய அத்தை பையன் சேகர் இனி அரைக்கால் நிஜார் அணிவதில்லை என்று முடிவெடுத்து அவனுடைய சட்டை நிஜார் பலவற்றை (பர்மா பெட்டி நிறைய சுமார் 40 செட் என்று சொல்லலாம்) கொண்டு வந்து கொடுத்து விட்டான். (என் தாத்தா நாராயண அய்யர் பர்மாவில் வேலை பார்த்து சண்டையின் பொழுது ஊர் திரும்பி அங்கே வீடு வாங்கி செட்டில் ஆகி சீக்கிரமே இறந்தும் போனவர். நான் அவரைப் பார்த்தது இல்லை. ஆனாலும் பர்மா நாராயண அய்யர் பேரன் என்று பேர் உண்டு) பள்ளியில் யூனிபார்ம் கிடையாது. கலர் ட்ரெஸ் தான். ஆகவே, நான் நேற்று போட்டதை இன்று போட மாட்டேன். தினம் ஒன்றாக மிடுக்குடன் வண்ணமயமாக படு ஸ்டைலாக போவேன். எல்லோரும் நிச்சயம் எனது ட்ரெஸ் பற்றி ஒரு முறையாவது பேசுவார்கள். ட்ரெஸ் மட்டும் தான் பண்ணை வீட்டைப் போல. உள்ளே என்ன என்று எனக்குத் தெரியுமே. தெருவிலும் நாங்கள் மெட்ராசில் இருந்து வந்ததால், என் அப்பா ரயில்வேயில் என்ஜினீயர் என்பதாலும் ஏக மரியாதை. அப்பாவுக்கு பர்ஸ்ட் கிளாஸ் பாஸ் என்பதால் அவர் ட்ரெயின் முதல் வகுப்பில் பயணம் செய்வார். அவர் எப்போதுமே மிடுக்காக ஆடை உடுத்துவார்.

மெட்ராஸ் வாழக்கையை விட குளித்தலை வாழ்க்கை நிச்சயம் மாறி இருந்தது. 
நான் பள்ளிக்கூடம் போகிற வழியில் தான் போலீஸ் ஸ்டேஷன், தபால் ஆபீஸ், கோர்ட் எல்லாமே. அந்த கோர்ட் குவாட்டர்ஸில் தான் என் தோழன் நரசிம்மன் வீடு. தினமும் நான் அவன் வீட்டுக்கு போய் காத்திருப்பேன். அவன் சந்தனப் பொட்டு அணிந்து, பருப்பு சாதம் மிளகாய் பொடி தொட்டு சாப்பிட்டு விட்டு என்னுடன் சேர்ந்து நடையைக் கட்டுவான். அவன் தான் சாரி அவர் தான் எங்கள் வகுப்பின் அறிவாளி. தொடர்ந்து அதிக மார்க் எடுத்து முதல் ரேங்க் வாங்குகிறவன். (இப்போது அவர்  பெங்களூரில் இருக்கிறார் - அண்மையில் அவரது 60 ஆம் கல்யாணத்திற்கு - கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடந்த ஒன்று - நானும் எனது மனைவியும் சென்று வந்தோம். 

நான் கொஞ்சம் கொஞ்சமாக அறிவு மந்தமாகி வருவதை எனது மார்க் லிஸ்ட் எடுத்துச் சொன்னது. காரணம், இந்த பம்பரம், கோலி, கிரிக்கெட், பாட்டிக்கு டிமிக்கி கொடுத்து விட்டு எதிர் வீட்டுக்கு ஓடி விடுவது என்று ரொம்ப மாறி இருந்தேன். அப்பாவுக்கு முழுமையாக இவை எல்லாம் தெரியா விட்டாலும் மார்க் லிஸ்ட் காட்டிக் கொடுத்து விடுமே. அவருக்கு வாரக் கடைசியில் நேரம் கிடைக்கும் போது நிச்சயம் என்னை மந்திரிச்சு விபூதி இட்டு வேப்பிலை சொருகுவார். நடுவே என் பாட்டி "குழந்தையை அடிக்காதிங்கோ..நல்லா படிப்பான், மாறி வந்திருக்கான் இல்லியா, நான் பாத்துக்குறேன்" என்று காப்பாற்றுவார். அதையும் மீறி முதுகு பழுப்பது உண்டு.  நான் மெட்ராஸ் பையன் என்ற திமிர் எனக்குள் எனக்கு தெரியாமல் இருந்தது. அதற்கு மெத்தனம் என்றும் சொல்லலாம். அந்த மெத்தனம் என்னை கணக்கு, அறிவியல் மற்றும் ஆங்கிலம் கிராமர் வகுப்புகளுக்கு டியூஷன் போக வைத்தது. 

கொஞ்சம் கொஞ்சமாக எனது விளையாட்டு நேரம் குறைய ஆரம்பித்தது. இருந்தாலும் மார்க் என்னவோ ஆங்கிலம், கணக்கு இவற்றில் நிறைய இருக்கும். மீதி பாடங்களில் படு சுமார். பத்தாம் வகுப்பில் இவன் என்ன செய்யப் போகிறான் என்ற கவலை அம்மா அப்பாவிற்கு தொற்றிக் கொண்டது. அது எனக்கு கொஞ்சமும் இருந்ததா என்று நினைவு இல்லை. 

நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்.

No comments:

Post a Comment