Monday, June 28, 2021

நீங்கா நினைவலைகள் - 3

 நீங்கா நினைவலைகள் - 3

- பாலசாண்டில்யன்
ஒரே பில்டிங்கில் அந்தக்கால ஸ்டோர் போல உறவினர் எல்லோரும் நாங்கள் ஒரு ஒரு போர்ஷனில் குடி இருந்தோம். எப்போதும் செம்ம ஜாலி தான். காமன் ஏரியாவில் கொட்டம் அடிப்போம். பள்ளிக்கூடம் போகும் போது கழுதை பொதி சுமக்கிற மாதிரி தூக்க முடியாமல் புஸ்தகம், நோட்டு, ஸ்கேல், தக்கிளி, சோத்து மூட்டை, தண்ணி பாட்டில் என்று ஒன்றாக கிளம்புவோம் ஒரு நான்கைந்து பேர்.
பிறகு ஆடி அசைந்து பக்கத்தில் இருக்கும் இன்னொரு காலனி போய் அங்கிருந்து இன்னும் இரண்டு உறவினர்களை சேர்த்துக் கொண்டு ஆமை வேகத்தில் அரட்டை கச்சேரியோடு ஒரு பதினைஞ்சு இருபது நிமிஷத்தில் பள்ளிக்கூடம் போய் சேருவோம். போறது தான் சேர்ந்து. திரும்பி வரும் போது பெரும்பாலும் சங்கம் பிரிஞ்சிடும்.
இந்த சம்பவத்தை இன்று நினைத்தாலும் மனக்குலை நடுங்கிப் போகும். 2015 ல் வந்த மழை வெள்ளம் போல அடிக்கடி வராது என்றாலும், அந்த சமயம் அப்படி ஒரு பேய் மழை, புயல் எல்லாமே. இந்த பாழும் பள்ளிக்கூடம் முதலிலேயே லீவு விடாது. அங்கே போன பிறகு திடீர்னு லாங் பெல் அடிச்சு எல்லாரும் போயிட்டு நாளைக்கு வாங்க என்று அனுப்பி விட்டார்கள். என்னிடம் ரெயின் கோட், குடை இதெல்லாம் கிடையாது. புஸ்தக மூட்டையை தலை மீது வைத்துக் கொண்டு வரும் வழியெல்லாம் தண்ணீர், அந்த முழங்கால் தண்ணீரில் நீந்தி மிதந்து கண்ணுக்குள் தண்ணீர் புக, டிரெஸ் முழுக்க நனைந்து, உதடு நடுங்க வந்து கொண்டிருந்தேன்.
எங்கள் தெருவின் இரண்டு பக்கமும் கோட்டை அகழி போல சாக்கடை நீர் போக வாய்க்கால் வெட்டி விட்டிருப்பார்கள். இன்னும் சுமார் இருபது வீடு தாண்டி ஆக வேண்டும் எங்கள் வீடு சேர. அப்போது திடீர் காற்று. என்னால் சமாளிக்க முடியவில்லை. என்னை அப்படியே கொண்டு அந்த வாய்க்காலில் தள்ளியது காற்று. தெருவில் பெரிய நடமாட்டம் இல்லை. நான் மிகவும் உயரக் குறைவு. ஒல்லிக் குச்சி. நடுங்கும் குளிரில் பேய் மழையில் அந்தக் குழியில் எனக்கு பேச்சு நின்று போனது. ஹெல்ப் என்றெல்லாம் கத்த தோன்றவில்லை. அவ்வளவு தான் முடிந்தது என்று பயம் தொற்றிக் கொண்டது. தெய்வம் போல அந்த நேரம் போஸ்ட்மேன் ஒருவர் மெதுவாக நடந்து வந்தார். அவரே என்னை பார்த்து விட்டார். என்னை அப்படியே லாவகமாக தூக்கி எடுத்து ரோட்டில் விட்டார். பிறகு அழுது கொண்டே வீடு வந்து சேர்ந்தேன். புத்தகம் எல்லாம் நனைந்து விட்டன. வாசலிலேயே காத்திருந்தார் என் அம்மா.
இது இப்படி இருக்கட்டும். நான் பள்ளி படிக்கும் போது "ஹிந்தி ஒழிக" போராட்டம் நடந்தது. குறிப்பாக ஒரு கூட்டம் எங்கள் பள்ளிக்கூடம் வாசலில், அதாவது மாம்பலம் லெவல் கிராஸ் கேட் அருகே நின்று கொண்டு பெரிய கோஷம். பயந்து போன எங்கள் ஆசிரியர்கள் எங்களை எல்லாம் உடனே கிளம்புங்கள் என்று அனுப்பி விட்டனர். வெளியே வந்தால் ரயில் மீது கல்லெறி சம்பவங்கள். போலீஸ் அடிதடி என்று ஒரே அமர்க்களம். யார் எங்கே என்று தெரியாமல் தலை தெறிக்க ஓடி காசி விஸ்வநாதர் கோவில் சந்தில் நுழைந்து எங்கள் வீடு நோக்கி நகர்ந்து பத்திரமாக வந்து சேர்ந்தேன். இன்றும் அது மறக்க முடியவில்லை. பிறகு சில வருடங்கள் கழித்து ஹிந்தி பிரசார் சபா வகுப்பில் (கோதண்டராமர் தெருவில்) கற்றுக் கொண்டது வேறு கதை. ப்ராத்மிக், மத்யமா, ராஷ்ட்ரபாஷா என்று மூன்று பரீட்சை தேர்வு பெற்றேன். கிரிதர் போன்ற எனது நண்பர்கள் பிரவீன் வரைக்கும் படித்தார்கள்.
சில மாதங்கள் கழித்து லெவல் கிராஸ் கேட்டுக்கு அந்தப் பக்கம் (இப்போது இருக்கும் ஜெயின் மகளிர் கல்லூரி அருகே) திடீர் பிள்ளையார் முந்தைய நாள் நள்ளிரவில் தோன்றி அவர் பால் குடிக்கிறார் என்று ஒரே அமர்க்களம். அது வரை அந்த கேட் கிராஸ் செய்து போனதே இல்லை. நான் எனது கசின் மற்றும் சில நண்பர்கள் ஒரு சில ஆசிரியர்கள் எல்லோரும் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து அங்கே போய் அந்த பிள்ளையாரை ஒரு வழியாகப் பார்த்தோம். அப்போது டிவி கிடையாது. இந்த முகநூல் வாட்சாப் கிடையாது. வாய் வழித் தகவல் மற்றும் செய்தித் தாள், தவிர ரேடியோ செய்தி தான். எப்படித் தான் அப்படி ஒரு கூட்டம் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து குவிந்தனரோ ..!
வீட்டுக்கு வந்து அம்மாவிடம் அந்த அதிசயத்தை சொன்னேன். அவருக்கு அது பற்றி தெரியவில்லை. அவருக்கு எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. "என்ன லெவல் கிராஸ் கேட் தாண்டி போனாயா ? அப்பாவுக்கு தெரிந்தால் கொலையே பண்ணிடுவா! ஏண்டா இப்படி பண்றே ?!" கத்தித் தீர்த்து விட்டார். மாலை அப்பா வந்ததும் தானும் அந்தப் பிள்ளையாரை பார்த்த செய்தியை சொன்னார். அப்பாடா நாமும் சொன்னால் ஒன்றும் நடக்காது என்று நினைத்து சொன்னேன். அவ்வளவு தான். அங்கே பல பூஜைகள் அர்ச்சனைகள் நடந்தது மட்டுமல்ல.
எங்கள் மற்ற கூட்டாளிகளையும் கூப்பிட்டு அப்பா விசாரித்தார் "நீயும் போனாயா டா" என்று. அவர்கள் இல்லை என்றும் ஆமாம் என்றும் இரண்டும் கெட்டானாக மண்டையை ஆட்டினார்கள். பிறகு "இனிமே இந்த கேட் கிராஸ் பண்ணுற வேலை வெச்சுண்டே அவ்வளவு தான் எனக்கு கெட்ட கோபம் வரும் ஹும்" என்று உறுமினார் அப்பா. இன்னும் கெட்ட கோபம் வருமா ? இதை விடவா ? எப்படி கேட்பது ? அப்போதெல்லாம் அவர் புலி. நான் நடுங்கும் சுண்டெலி. விடுங்க ...இன்னும் எவ்வளவோ இருக்கு..
நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்.

No comments:

Post a Comment