Wednesday, June 30, 2021

நீங்கா நினைவலைகள் - 6

 நீங்கா நினைவலைகள் - 6

- பாலசாண்டில்யன் 

இந்த புதிய தொடர் தொடங்கி 5 நாட்கள் அதாவது 5 அத்தியாயங்கள் ஓடி விட்டன.

அருமையான ஊர் குளித்தலையில்  (அது நகரமும் அல்ல கிராமமும் அல்ல - அழகிய டவுன்). காவிரி நதி ஓடினாலும் எனக்கு நீச்சல் தெரியாது என்பதால் காவிரியில் குளிக்க என்னை அனுப்ப மாட்டார்கள் வீட்டில். என்றாவது மாசி மகம், முடவனுக்கு முழுக்கு, ஆடிப் பெருக்கு என்று சில தினங்களில் பாட்டியுடன் போய் வருவது உண்டு. ஆனால் வாரம் ஒரு முறை கடம்பவனேஸ்வரர் கோவிலுக்கு போவேன். மிகவும் அழகான கோவில். சிறப்பான பிரகாரம். பக்தி மணம் கமழும். அதே போல டியூஷன் போகும் போது ராஜேந்திரன் சார் வீட்டிற்கு அருகே இருந்த குளித்தலை மாரியம்மன் கோவிலுக்கு கட்டாயம் போவேன். ஆடி மாசம் அமர்க்களப்படும். வருடத்தில் ஒரு நாள் தேரும் உண்டு.

அதே போல குளித்தலையில் இருந்த பொழுது மறக்க முடியாதது பஸ் ஸ்டாண்டில் இருந்த சங்கர் கபே ஹோட்டல். (இன்னும் இருக்கிறது என்று தான் நினைக்கிறேன்) அண்ணாச்சி மளிகை கடைக்குப் போய் வீட்டுக்கு சாமான் வாங்கிக் கொடுக்கும் போது அஞ்சு பைசா பத்து பைசா சில்லறை கிடைத்தால் எனது பாட்டி அதனை எனக்கு உண்டியல் ஒன்று  கொடுத்து அதில் சேமிக்க சொல்லுவார். ஓரிரு முறை  நான் அப்படி செய்யாமல், அந்தக் காசை எடுத்துக் கொண்டு ஒரு நப்பாசையில் சங்கர் கபேக்குள் நுழைந்து தோசை அல்லது பூரி சாப்பிட்டு இருக்கிறேன்.  சட்டை பாக்கெட்டை தொட்டு தொட்டுப் பார்த்துக் கொள்ளுவேன் அந்தக் காசு இருக்கிறதா என்று. பெரியவர் என்னை ஏற இறங்கிப் பார்த்து என்ன சாப்பிடுகிறாய் என்று கேட்டால் விலைப்பட்டியல் பார்த்து விட்டு 'ஒரு தோசை'  என்பேன். வேற என்றால் பில் என்பேன். அது மட்டுமா? யாராவது தெரிந்தவர் கண்ணில் மாட்டக்கூடாதே என்று தலை குனிந்து உட்காருவேன். வாழை இலையில் அந்த தோசையை கொணர்ந்து பெரியவர் வைப்பார். அப்போது இலையே தோசை சூட்டில் பச்சை நிறம் மாறி வெந்து இருக்கும். அதன் மணம் ருசியைக் கூட்டும். தோசை மீது சாம்பார் மற்றும் சட்னி சில பல கரண்டிகள் அபிஷேகம் செய்த பிறகு அதன் ருசி வார்த்தையில் சொல்ல முடியாது. அப்படித் தான் அந்த பூரி மசாலாவும். அந்த ருசி மணம் நான் இதுவரை வேறு எங்கும் பார்க்கவில்லை என்பதை நீங்கள் நம்பித் தான் ஆக வேண்டும்.

நான் எட்டாம் வகுப்பும் ஒன்பதாம் வகுப்பும் குளித்தலை அரசினர் ஆண்கள் பள்ளியில் முடித்து விட்டேன். எனது கல்வியில் முன்னேற்றம் குறைந்து வருவதை அம்மா உணர்ந்து கொண்டார். அது பற்றி அப்பாவிடமும் விவாதம் நடந்தது. அப்போது என் அறிவுக்கு அது எட்டவில்லை என்றாலும், நிச்சயம் அப்போது எனது விளையாட்டுத்தனம், கல்வியில் கவனிமின்மை, இலக்கு பற்றி அறியாமை, எடுத்துச் சொல்ல யாரும் அருகில் இல்லை
எனும் நிலை, செல்லம் கொடுக்கும் பாட்டிகள், பள்ளிக்கு அருகே இருந்த செல்ல மிராசுதார் மாமா, வளர் சூழல், பள்ளியிலும் உடன் படிப்பவர்களின் ஆர்வமின்மை என்று பல காரணங்கள் பட்டியல் இட்டாலும், எனது கவனமின்மை என்பதே உண்மை. அது எங்கே எனக்குப் புரிந்தது ?

பண்ணை வீட்டு பசங்கள், வக்கீல் வீட்டு பையன் சுரேஷ் எல்லோரும் காலை ட்ரெயின் பிடித்து திருச்சி ஈ ஆர் ஹை ஸ்கூலில் படித்தனர். என்னையும் அங்கே சேர்க்க எனது அப்பா பெரிய மனது பண்ணி எப்படியோ ஏற்பாடு செய்தார். வீட்டில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் நடந்து போய் குளித்தலை டு திருச்சி ட்ரெயினில் போக வேண்டும். அப்பா ரயில்வே ஆஃபீசர் என்பதால் எனக்கு இலவச முதல் வகுப்பு பாஸ் வாங்கிக் கொடுத்தார். அதிலே கூட்டம் குறைவாக இருக்கும், நான் படித்துக் கொண்டே போகலாம் என்று அவர் நினைத்தார். கோட்டை ஸ்டேஷனில் இறங்கி மீண்டும் சிந்தாமணி வரை நடந்தே சென்றால் தான் நேரத்திற்கு பள்ளி சென்று அடைய முடியும். "வானோர் வணங்கும் அன்னையே" பாட்டு சில நேரம் கேட் நெருங்கும் போதே கேட்கும். அதாவது நான் லேட். "சார் சாரி சார் என்று தலை குனிந்து வகுப்பில் நுழைவேன்" சில நேரம் முட்டி போட்டு விட்டு நுழைவேன். 

அம்மா எனக்கு இரண்டு டிபன் பாக்ஸ் கட்டித் தருவார். திரும்பி வரும் போது இரவு 7.45 ஆகி விடும் என்பதால். மிக நல்ல பள்ளிக்கூடம். ரொம்ப உயர் தரமான கல்வி. அருமையான ஆசிரியர்கள். (தற்போதும் மிகச் சிறந்த உரைகள், உபன்யாசங்கள் நிகழ்த்தி வருகிற புலவர் திரு ராமமூர்த்தி சார் தான் தமிழ்த் துறை தலைவர் - அப்போது அவருக்கு என்னை, எனக்கு அவரை அவ்வளவு பழக்கம் இல்லை - இப்போது தினம் வாட்ஸாப்பில் அவரது உரைகளை எனக்கு அனுப்புகிறார்). இருந்தாலும் நான் அதற்கு ஈடு கொடுக்க வேண்டுமே. 

எனக்கு முதல் வகுப்பு பாஸ் இருந்தாலும், எனது அஹ்ரகார நண்பர்கள் கணேஷ், பட்டாபி, சுரேஷ் இவர்கள் எல்லோரும் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்த காரணத்தால் அதிக நாள் நான் அவர்களுடன் ஏறிக்கொண்டு அரட்டை, பாட்டு என்று கும்மாளமாக செல்லுவேன். இருந்தாலும் எனது பூஞ்சை உடலுக்கு இந்த இரு நேர நீண்ட பயணம்,காலை மாலை இரு நேர நீண்ட நடை, பிறகு படிப்பில் போட்டி எல்லாவற்றையும் தாக்கு பிடிக்க முடியவில்லை. குளித்தலை பள்ளியில் பீஸ் கிடையாது. ஆனால் திருச்சி பள்ளிக்கு உண்டு. அங்கே படித்தால் 11 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் சேரலாம். ஆனால் முடியவில்லேயே. மீண்டும் வீட்டில் பேச்சு, போராட்டம், விவாதம். என் மீது பாவ புண்ணியம் பார்த்து எனது மிராசுதார் மாமா தயவுடன் மீண்டும் குளித்தலை பள்ளிக்கே டிசியுடன் வந்து பத்தாம் வகுப்பை நான்கு மாதங்கள் மட்டும் திருச்சியில் படித்து விட்டு தொடர்ந்தேன். பிறகென்ன? பழைய குருடி கதவை திறடி தான். 

எனது உறவினர் மறைந்த திரு பாலசுப்ரமணியன் சார் அங்கே ஆங்கிலம், வரலாறு, மற்றும் பூகோளம் எடுத்துக் கொண்டு இருந்தார். பள்ளிக்கு சரியாக அடுத்த வீடு. எனக்கு பிரத்யேக டியூஷன் ஆங்கில க்ராமர்க்கு எடுத்தார். தப்பு செய்தால் சிரித்துக் கொண்டே தலையில் செல்லமாக கொட்டுவார். அதனால் நான் ஆங்கிலத்தில் எப்போதும் 90 க்கும் அதிக மதிப்பெண் எடுப்பேன். கணக்கு படிக்க ராஜேந்திரன் சார் வீட்டுக்கு டியூஷன் போனேன். பள்ளி ஏ எச் ஹெம் திரு ரகோத்தமன் சார் என்னை அழைத்து ஆங்கிலம் பேப்பரை (எட்டு ஒன்பது வகுப்பு பரிட்சைத் தாள்களை திருத்தச் சொல்லி அழைப்பார்.) இப்போதும் படிப்பில் எனக்கு அதிக ஆர்வம் வந்து விட்டது என்று சொல்லி விட முடியாது. 

கடைத்தெருவில் வசித்து வந்த எனது பள்ளி நண்பன் வெங்கடேசன் (பின்னாளில் எனது சென்னை கல்லூரியில் கூட சேர்ந்து படித்தான், இன்றும் பல டிவி சேனல்களில் பாடி வருகிறான் - நண்பர் நரசிம்மன் தயவால் நீண்ட நாட்களுக்கு பிறகு தொடர்பு கொண்டு தொலைபேசினேன்) அவர்களோடு சேர்ந்து பாட்டுப்போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி இவற்றில் சேர்ந்து ஏதாவது ஒரு பரிசு வாங்குவேன். இந்த சின்ன சின்ன வெற்றிகளில் மகிழ்ந்து போன நான் படிப்பில் கவனம் செலுத்தி நல்ல மார்க் எடுக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளவில்லை. 

அதற்கான விளைவுகளை பின்னாளில் அனுபவித்து அறிந்தேன். மேலும் சொல்லுவேன் யதார்த்தமான பல விஷயங்களை.

நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும். 

No comments:

Post a Comment