Wednesday, July 13, 2022

அனந்தம் - ஜீ டிவி டெலி சீரியல்

 அனந்தம் - ஜீ டிவி டெலி சீரியல் - இயக்கம் வி பிரியா

மகிழ்ச்சி புதைந்திருக்கும் வீடு - முக்கிய பாத்திரமாக இருப்பது - அனந்தம் எனும் வீடு. இந்த சீரியலில் காதல், சோகம், துரோகம், வெற்றி, சிரிப்பு, திகில், துணிவு என்று அந்த வீட்டில் குடியிருக்கும் பல குடும்பங்களின் கதைத் தொகுப்பாக இருக்கிறது.
நாம் இருக்கும் வீட்டின் அக்கம்பக்க வீடுகளில் பல்வேறு குடும்பங்கள் வந்து குடியேறும் போது பலவிதமான கதாபாத்திரங்களை நாம் பார்த்திருப்போம். அவர்கள் வாழ்க்கை சூழல், பின்னணி, வாழ்க்கை அணுகுமுறை, குடும்பத்தார் மத்தியில் நடக்கும் பல உணர்ச்சிகரமான சம்பவங்கள் நிச்சயம் கவனித்திருப்போம்.
அப்படிப்பட்ட ஒன்றை இந்த சீரியல் காட்டுகிறது.
முக்கிய கதாபாத்திரம் வெங்கடேசன் (பிரகாஷ் ராஜ்) - நிச்சயம் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கும் அளவிற்கு ஒரு பர்பார்மன்ஸ். அதே போல இதில் இன்னொரு முக்கிய கதாபாத்திரம் அனந்த் (சம்பத் ராஜ்), தவிர ஜான் விஜய், விவேக் ராஜகோபால், சம்யுக்தா (பிக் பாஸ் புகழ்), வினோத் கிஷன், இந்திரஜா, விவேக் பிரசன்னா, வினோதினி, அஞ்சலி ராவ், மாதுரி, அர்விந்த் சுந்தர் போன்று பல கலைஞர்கள் மிகவும் உயிரோட்டமாக நடித்து உள்ளனர்.
மணி ரத்தினம் அவர்களின் உதவியாளராக இருந்த வி பிரியா அவர்கள்
தான் இயக்கம். மொத்தம் 8 அத்தியாயங்கள். ஒன்றுக்கு ஒன்று பிணைப்புடன் வருகிறது. இதில் நடித்துள்ள சிலர் நாம் பல்வேறு படங்களில் வில்லன் பாத்திரத்தில் அல்லது போலீஸ் பாத்திரத்தில் பார்த்து இருக்கிறோம். ஆனால் இதில் அவர்கள் நடிப்பு வேற லெவல். குறிப்பாக வினோத் கிஷன், விவேக் ராஜகோபால் மற்றும் வினோதினி மிகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
பாத்திரப்படைப்பு, கதையம்சம், வசனங்கள், நடிப்பு, கவிதை போன்ற கதை நகர்வு, முழுக்க முழுக்க பாரதியார் பாடல்கள் என்று நம்மை சுண்டி இழுக்கும் ஒரு சீரியல். அதில் சைந்தவி பிரகாஷ் பாடி இருக்கும் 'நின்னைச் சரணடைந்தேன்' பாடல் நமது மனதை உருக்கி விடும்.
பார்வையற்ற ஒரு பெண்மணி படும் அவஸ்தை, குழந்தை பாலியல் வன்கொடுமை, விவாகரத்து, விசித்திரமான ஜோடிகள், இளைய ஆண்கள் இருவரின் உறவுமுறை, வயதான பெண்மணி ஒருவருடன் இளையவர் ஒருவரின் உறவுமுறை, ஒவ்வொரு பகுதியுடன் இணைப்பு, சில பகுதிகளின் தொகுப்பு எல்லாமே மிகவும் ஜாக்கிரதையாக கையாண்டு இருக்கிறார்கள்.
வக்கிரம், ஆபாசம் எதுவுமே கிடையாது.
ஒவ்வொரு பகுதி பார்க்கும் பொழுதும் அவர்கள் நமது வாழ்வின் ஓர் அங்கமாக மாறுவது போல நமக்கு தோன்றுவது மிகவும் அழகு, நேர்த்தி மற்றும் அரிதான ஒன்று எனலாம்.
உணர்ச்சி கொந்தளிப்பு மிக்க சில காட்சிகளில் மிக அனாயாசமாக நடித்துள்ளனர் பிரகாஷ் ராஜ் மற்றும் சம்பத் ராஜ்.
அந்த வீட்டின் நினைவுகள் மற்றும் மர்மங்கள் நம்மை ஒவ்வொரு பாகத்திலும் கட்டிப் போடுகின்றன.
சினிமா கதைகளில் வினோதமான உறவுகளின் உணர்வுபூர்வமான சித்தரிப்புகளில் 'அனந்தம்' மிகவும் முக்கியமான ஒன்று என்று சொன்னால் அது மிகையாகாது.
ஆங்கில 'சப் டைட்டிலை' தாங்கி வருகிற இந்த டெலிசீரியல் நிச்சயம் காண்பவர்களுக்கு நல்ல அனுபவத்தை, ஆனந்தத்தை, வியப்பை, புதிய ஆச்சரியங்களை தருகிறது என்பதே உண்மை.
என்னைப் போன்ற எழுத்தாளர்களுக்கு சற்று பொறாமை ஊட்டுகிற அளவிற்கு மிகவும் அற்புதமான கதையோட்டம். நான் வியந்து போனேன் என்பது நிதர்சனம். பாருங்கள் உங்களுக்கும் அப்படி ஓர் ஆனந்தம் மற்றும் அனுபவம் கிடைக்கும்.

No comments:

Post a Comment