Wednesday, July 13, 2022

RRR v/s Vikram:

 RRR v/s Vikram:

முதலிலேயே சொல்லி விடுகிறேன் நான் கமல் சாரின் பெரிய பெரிய விசிறி.
பதினாறு வயதினிலே, நிழல் நிஜமாகிறது, நாயகன், மரோசரித்ரா, எக் துஜே கே லியே, சாகர சங்கமம், மன்மதலீலை, சத்யா, காக்கி சட்டை, பின்னர் தெனாலி, பஞ்ச தந்திரம், காதலா காதலா, வசூல்ராஜா, அவ்வை சண்முகி, அபூர்வ சகோதரர்கள், உன்னால் முடியும் தம்பி, அன்பே சிவம், பாபநாசம், உத்தம வில்லன் என்று பல்வேறு படங்களை வெறி கொண்டு பலமுறை பார்த்தவன் நான்.
ஆனால் எனக்கு இரண்டு மூன்று முறை பார்த்தும் புரியாமல் போனவை ஹே ராம், விஸ்வரூபம், மும்பை எக்ஸ்பிரஸ், போன்ற படங்கள்.
அதைவிட கோடிக் கணக்கில் வசூல் செய்த அண்மைப் படம் 'விக்ரம்' எனக்கு பெரிய ஏமாற்றம். ஆங்காங்கே கமல் சாரின் நடிப்பு மிகவும் சிறப்பு... பத்தல பத்தல பாடல் உட்பட.
பகத் பாசில் நடிப்பு அருமை. மற்றபடி விஜய்சேதுபதி, சூர்யா போன்ற கலைஞர்கள் இதே போன்ற நடிப்பை இதற்கு முன்னர் கூட வழங்கி விட்டனர்.
பற்பல விமர்சனங்கள் படித்து விட்டு பெரிய எதிர்பார்ப்பில் உட்கார்ந்து பார்த்து பெருத்த ஏமாற்றம் அடைந்தேன். (ரஜினி சாரின் காலா போல இது எனக்கு செட் ஆகலை.)
300+ கொலை நடக்கின்றது. அவ்வளவு வன்முறை. மணிரத்னம் படத்தை தூக்கி சாப்பிடும் அளவு படத்தில் இருட்டு. அய்யோ நல்ல வேளை தியேட்டர் போய் சில ஆயிரம் இழக்கவில்லை.
ஆஹா ஓஹோ என்று சொல்ல சில விஷயங்கள்: இந்த வயதில் கமல் சாரின் ரிஸ்க் கலந்த நடிப்பு, தோனி போல தன்னை பின்னிறுத்தி மற்ற நடிகர்களுக்கு முக்கியத்துவம் தந்த பெருந்தன்மை, வயதிற்கேற்ற பாத்திரம்.
எல்லாம் தாண்டி எனக்கு புரியல படம். பிரம்மாண்டமான படம். இருந்தாலும் ஏதோ மிஸ்ஸிங்...
இரண்டு நாட்கள் கழித்து RRR பார்த்து முடித்த பின்னர் ஏறிய புருவங்கள் இறங்க மறுத்தன. பீரியட் படம் என்றாலும் படத்தின் பிரம்மாண்டம், நடிகர்களின் சண்டைக் காட்சிகள், செட் அமர்க்களம்... கடைசி முப்பது நிமிடங்கள் சீட் நுனியில்... அது தான் படத்தின் வெற்றி. தேச பக்தியை மனதில் விதைத்த காட்சிகள். கூடவே பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் இந்திய சுதந்திர போராட்டம் இருந்தது போல இந்த கதையில் இராமாயண காட்சிகள் இருந்தது தெலுங்கு படங்கள் நமது கலாச்சாரத்தை தூக்கி நிறுத்துகின்றன என்பதற்கு சாட்சி...சில காட்சிகள். நிச்சயமாக நான் வியந்து பாராட்டும் படம் இதுவே (ஒப்பீடு சரியில்லை என்றாலும்) விக்ரம் அல்ல...
சாரி இது எனது அபிப்பிராயம். பின்னூட்டத்தில் பலர் திட்டலாம். பிளாக் செய்யலாம். சே இவ்வளவு தானா உங்கள் சினிமா அறிவு என்று கைகொட்டி சிரிக்கலாம்.
பரவாயில்லை. துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே...
நிச்சயமாக கமல்ஹாசன் இந்த வெற்றி களிப்பில் அடுத்த படம் நல்லதாக, பலரின் பாராட்டை இன்னும் பெறுவதாக தருவார் என்று அவரின் பரம ரசிகனாக நம்புகிறேன். விரும்புகிறேன்.

No comments:

Post a Comment