Thursday, July 21, 2022

மாமனிதன்

 மாமனிதன் 

யுவன் ஷங்கர் ராஜாவின் தயாரிப்பில் திரு சீனு ராமசாமி அவர்களின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, லலிதா, குரு சோமசுந்தரம் மற்றும் ஷாஜி சென் நடித்த ப(பா)டம்.

மலையாளம் மற்றும் வங்க மொழிகளில் தான் யதார்த்தமான படங்கள் வருகின்றன என்று அங்கலாய்த்துக் கொள்ளும் நபர்களுக்கு பதில் சொல்லும் சீனு ராமசாமியின் படம் இது. ராதாகிருஷ்ணன் மற்றும் சாவித்திரி படும் சிரமங்கள் நாம் அன்றாட வாழ்வில் காண்கிற ஒரு விஷயம் தான். 

கனவு, கடன், கடமை மூன்றும் ஒரு மனிதனை அழுத்தும் போது நேர்மையாக வாழ்ந்து வளர்ந்து பழகிய யாருமே ஒரு சின்ன கவன ஈர்ப்பு அல்லது சலனத்துக்கு ஆட்படுவது  சகஜம் தானே. 

அப்படிப்பட்ட ஒரு சமயம் புதிய மனிதன், சூழல், பிரச்சனை எந்த அளவுக்கு ஒருவனை புயல் போல திசை மாற்றுகிறது என்பதை பெரிய ஆர்ப்பாட்டம், வசன அமர்க்களங்கள், பாட்டு, கூத்து, நடனம், சண்டை, காமெடி எதுவுமே இல்லாமல் சொல்லி இருப்பது இந்த படத்தின் மாபெரும் புதுமை, வெற்றி யுக்தி.

காண்பவர் மனதை உலுக்கும் ஒரு வாழ்க்கைச் சம்பவம் வரலாற்றுச் சம்பவமாக மாறுகிறது. 

எனது தாத்தா பர்மாவில் வேலை பார்த்து, போர் மூண்ட பொழுது பெரும்பாலான பொருட்களை அங்கேயே விட்டு விட்டு மனைவி மகளுடன் நடந்தே கல்கத்தா வந்து பிறகு குளித்தலை என்ற ஒரு டவுனில் செட்டில் ஆகி வீடு வாசல் நிலம் வாங்கி, சிலரை நம்பி ஏமாந்து பிறகு ஒரே பெண்ணுக்கு திருமணம் கூட செய்யாது இறந்து போன கதையை எனது பாட்டி சொல்லிக் கேட்டிருக்கிறேன். 

பிறகு நானே வீட்டுச் சூழலை சமாளிக்க மும்பை மற்றும் மஸ்கட் சென்று அல்லல் பட்டு பணம் அனுப்பினேன்.

அது போல நம் ஒவ்வொருவர் வாழ்விலும் இருக்கும் சூழலை நினைவூட்டும் இராதாகிருஷ்ணன் பாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்தும் நபர் கலைஞர் விஜய சேதுபதி மட்டுமே. வேறு யாராவது இப்படிப்பட்ட ஹீரோயிசம் இல்லாத ஒரு பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளுவார்களா என்பது சந்தேகம். முழுக்க தன்னை இயக்குனர் வசம் ஒப்படைத்து மிகச் சீரிய பெர்பார்மன்ஸ் கொடுத்துள்ள விஜய் சேதுபதி அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும். 

அதே போல 'களத்தில் மாதவனாக' வருகிற ரியல் எஸ்டேட் அதிபர் ஷாஜி அவர்களின் நடிப்பு நிச்சயம் நம்மை கவர்கிறது. லலிதா பாட்டி அண்மையில் தான் வீட்ல விசேஷம் படத்தில் பார்த்தோம். ஆனால் இந்தப் படத்தில் அவரின் நடிப்பு மிகவும் யதார்த்தம், அற்புதம்.

காயத்ரி அவர்களையும், குரு சோமசுந்தரத்தையும் (மின்னல் முரளி பேமஸ்) நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். ஏமாற்றுபவன் ஒருவன் இருக்கிறான் என்றால், நிச்சயம் மிகவும் நேர்மையான ஒருவனுக்கு நேர்மையான நண்பன் கிடைப்பான் என்கிற உண்மை இதில் சொல்லப்படுகிறது.

கேரளாவில் பாத்ரூம் கழுவுகிற காட்சி, காசியில் சாதாரண உணவு பரிமாறுகிற நபரை நடிக்கும் காட்சி மனதை உருக்குகிறது. விஜய் சேதுபதி ஐந்துக்கு நான்கரை மதிப்பெண் வாங்கி விடுகிறார். 

படத்தில் இசைஞானி மற்றும் யுவன் இன்னும் கூட மனதில் நின்று போகிற ஓரிரு பாடல்கள் கொடுத்திருக்கலாம் என்ற ஆதங்கம் வருகிறது. என்ன செய்ய. இயக்குனர் டிமாண்ட் செய்து வாங்கவில்லையோ...படம் நிச்சயம் நல்ல பாடல்கள் பெற வல்லவை தான்.

நேர்மை மற்றும் ஒழுக்கம் உள்ள மனிதன் ஒவ்வொருவரும் மாமனிதனாக மதிக்கப்படுவதில்லை. மேலும் மேலும் அவஸ்தைக்கு தான் உள்ளாகிறான். இங்கே இராதாகிருஷ்ணன் மாமனிதன் ஆவது அவனின் நல்ல எண்ணங்களால் தான் (குட் இண்டென்ஷன்).

இதுவரை பார்க்கவில்லை என்றால் கட்டாயம் பாருங்கள். நிச்சயம் பிடிக்கும். மசாலா, ஹீரோயிசம், காதல், காமெடி, சண்டை, கனவு பாட்டு எதுவுமே இல்லை ஆனாலும் பார்ப்பேன் என்று முடிவெடுங்கள்.  

No comments:

Post a Comment