Sunday, January 27, 2013

Kamal Haasan a living legend



கமல் ஒரு வாழும் சகாப்தம்
டாக்டர்
பாலசாண்டில்யன் 
சச்சின் அவர்கள் கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய சாதனையாளர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக அதே துறையில் இருந்து  சாதித்துக் கொண்டிருப்பவர்

இசை ஞானி அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத் துறையில் மிகப் பெரிய சாதனை படைத்தது வருபவர்பாடல் எழுதுவது, இசை அமைப்பது, சிம்போனி  ,ரீ ரெக்கார்டிங்,  நொடேஷன் எழுதுவது என பல்வேறு திறமைகளை வெளிபடுத்தியவர்

டாக்டர் பாலமுரளிக்ருஷ்ணா அவர்கள் பாடுவது தவிர, வயோலா, தபலா, புல்லாங்குழல், என பல வாத்தியங்கள் வாசிப்பது, இசை அமைப்பது, புதிய ராகங்கள் கண்டு பிடிப்பது, தில்லானா புனைவது, தமிழ் தெலுங்கு வடமொழி இவற்றில் பல சாகித்யங்கள் எழுதியது என 76 ஆண்டுகளாக சாதனை படைத்து வரும் ஒரு வாழும் இசை வரலாறு என்றால் மிகையாகாது.

அந்த வரிசையில் கலைஞானி கமல்ஹாசன் அவர்களை பற்றி சிந்தித்து பார்த்தால் அவர் ஒரு நடிகர், கவிஞர், பாடகர், இசைஅமைப்பாளர், நடன கலைஞர், நடன ஆசிரியர், தொழில் நுட்ப நிபுணர், கதாசிரியர், எழுத்தாளர், எடிட்டர்,புகைப்பட நிபுணர், இயக்குனர், தயாரிப்பாளர், மிருதங்க கலைஞர், சிலம்ப கலைஞர், நகைச் சுவை வல்லுநர், தமிழ் (கோவை, மதுரை, சென்னை, இலங்கை என வட்டார வாரியாக) ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகள் அறிந்தவர்.

சிவாஜி, MGR, நாகேஷ், கலைவாணர், மனோரமா, ஜெமினி, சாவித்திரி என்று வரலாறு படைத்தவர்களோடு பணியாற்றியவர்.

TKS, பாலமுரளி சார், இசைஞானி, KB, சுஜாதா, ப்ரிஜு மகாராஜ், என்று இவருக்கு பல குருமார்கள் உண்டு.

கமல் சாருக்கு கர்வம் உண்டு. அதனால் தான் அவருக்கு மேலும் மேலும் கஷ்டங்கள் வருகிறது என்று பலர் சொல்கின்றனர்.

கொஞ்சம் விஷயம் தெரிந்தவருக்கே கர்வம் இருக்கும் போது பாரதியார் சொல்லும் ஞானச்செருக்கு கமல் சாருக்கு ஏன் இருக்க கூடாது?
அவர் வாழும் போதே ஒரு வரலாறு. ஒரு வியத்தகு சகாப்தம். உலக நாடுகளே இவரது திறமைகளை கண்டு வியக்கிறது. இவரது சமூக, கலை அக்கறை மற்றும் திறமை

கண்டு மயங்காதவர் கிடையாது. இவருடன் பணி புரிய வேண்டும் என்று ஆசைப் படாதவரே கிடையாது எனலாம்.

இவரது பறந்து விரிந்த திறமைக்கு ஆஸ்கர் விருது கூட சிறியது தான்.
கூடவே இருக்கும் ஒருவரை பற்றி நாம் புரிந்து கொள்ள மாட்டோம். அது ஒரு சாபக் கேடு. அவரை மதிக்க மாட்டோம்.

மாபெரும் கலைஞர் நாம் வாழும் காலத்தில் பிறந்து நம்மோடு வாழ்ந்து கொண்டு இருப்பது நாம் செய்த பாக்கியம்.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக  கலைத் துறையில் பல சாதனைகள் படைத்த கமல் சாருக்கு எப்போதும் நல்லதே நடக்க வேண்டும் என்று நினைப்போம், மனதார வாழ்த்துவோம்.

இருக்கும் போது பாராட்டாது போற்றாது, ஆதரிக்காது, விரோதமாக பார்த்து விட்டு பின்னாளில் சிலை வைத்தும் பயனில்லை.

நமது நாடு பெற்ற...குறிப்பாக தமிழகம் பெற்ற இந்த கலைஞானியை துணை நின்று போற்றுவது நமது ஒவ்வொருவரின் கடமை என்பதை அறிவோம்.

No comments:

Post a Comment