Tuesday, November 17, 2015

பாட்டும் பாவமும் - Music yesterday/today

பாட்டும் பாவமும் (An exclusive article by me - pls read if you find time)
- டாக்டர் பாலசாண்டில்யன்
(Poet, Writer, Author, Singer, Composer, Music Lover, Lyricist)
Mobile: 9840027810
CEO, www.visionunlimited.in
balasandilyan@yahoo.com
ஒவ்வொரு இந்திய மொழிக்கும் ஓர் அடையாளம் உண்டு. சமஸ்க்ருதம் எனும் வடமொழி தத்துவங்களை, மலையாளம் மற்றும் பெங்காலி மொழி இலக்கியத்தை, மராத்தி மொழி நாடகத்தை, தெலுங்கு இசையை, தமிழ் பக்தியை எடுத்துரைக்கும் என்பார்கள் அறிஞர்கள்.
இசை எனும் போது பல்வேறு கவிஞர்கள், பாடலாசிரியர்கள், பல்வேறு மொழிகளில் பலவேறு தருணங்களில் பாடல்கள் புனைந்துள்ளனர்.
பாடல்கள் எனும் போது பிறப்பு முதல் இறப்பு வரை பல சூழல்களுக்கு ஏற்றவாறு புனையப்படுகின்றன. தாலாட்டு, துதி, பக்திப் பாடல், பாராட்டுப் பாடல், ஒப்பாரி, நாடகப் பாடல், நடனப் பாடல் - குறிப்பாக பதம், கீதம், தில்லானா, என்றெல்லாம் இருக்கின்றன.
ஒவ்வொரு பாட்டும் ஒரு குறிப்பிட்ட பாவத்தை (Bhavam) வெளிபடுத்தும் விதமாக இருக்கிறது - அதாவது அன்பை, பக்தியை, காதலை, இறைஞ்சுதலை, அழகுணர்வை, நளினத்தை, வேண்டுதலை, பாராட்டுதலை வெளிபடுத்துகின்றது.
நடனப் பாடல்களில் குறிப்பாக நவரசம் எனும் பல்வேறு உணர்ச்சிகள் சொல்லப் படுகின்றன. அதாவது, கருணை, அன்பு மற்றும் மகிழ்ச்சி, வீரம், நகைச்சுவை, கோபம், பயம், ஆச்சரியம், சாந்தி அல்லது சமாதானம் என்பவையே ஆகும்.
காதல் எனப்படும் ஸ்ரிங்கார பாவத்தில் தான் எத்தனை வகைகள் - மகிழ்ச்சி, ஆனந்தம், ஈர்ப்பு, ஆராதனை, பாலுணர்வு, பக்தி என்றெல்லாம் சொல்ல முடியும். அவற்றைப் பாடும் ராகங்கள் அந்தப் பாடலின் பாவத்தை இன்னும் மேலோங்கச் செய்யும் - குறிப்பாக எந்த வேளையில் என்ன ராகம் பாட வேண்டும் என்று கூட பெரியோர்கள் நிர்ணயித்தார்கள். அதே போல எந்த பாவத்திற்கு என்ன ராகம் என்றும் நிச்சயித்தார்கள். அதி காலையில் பூபாளம், காலையில் ஆகிர் பைரவி, தோடி, மதியத்தில் காபி, பாகேஸ்வரி, மாலையில் யமுனா கல்யாணி, பீம்ப்ளாஸ், இரவில் துர்கா, தேஷ்., பெஹாக் நள்ளிரவில் காபி, அசாவேரி, பைரவி போன்ற ராகங்கள் பாடப்பட்டன. அதிலும் தட்பவெட்ப நிலைகளுக்குக் கூட ராகங்கள் தேர்வு செய்யப்பட்டன. மழை பெய்ய அமிர்தவர்ஷிணி, மழை பெய்யும் போது தீபக், மேக் போன்ற ராகங்கள், பருவக் காலத்தில் ஹிந்தோளம், குளிர் காலத்தில் பைரவி எனப் பிரித்தார்கள்.
பாவம் இல்லாமல் பக்தி இல்லை. பக்தி இல்லாமல் பாவம் இல்லை என்று தனது பாடல்களில் வெளிக்காட்டியவர் சந்த் கபீர், துக்காராம் போன்றவர்கள்.
புரிந்து கொள்வதற்காக சில உதாரணங்கள் இதோ இங்கே :
பல மராத்தி அபங்கங்களில் இறைவனை ஒரு முதலாளி என்றும் தன்னை அவர் அடிமை என்றும் வர்ணிப்பது இருந்தது. (மை குலாம் தேரோ)
பல ஹிந்தி மற்றும் போஜ்புரி மொழிப் பாடல்களில் "எனக்கு தரிசனம் கொடு, என்னை ஏற்றுக் கொள், என்னைக் கரை சேர் ( கிஸ் விது ஜாவும் பார் முராரே) என்று எழுதினர்.
அதுவே கர்நாடக சங்கீதத்திற்கு மிக முக்கியப் பங்காற்றிய தியாகராஜ சுவாமிகள் இறைவனைப் போற்றும் (தெலியலேது ராமா பக்தி மார்கமூலு)கீதங்களே அதிகம் எழுதினார். கன்னடத்தில் புரந்தரதாசர் நான் ஒரு வறியவன் என்னைக் கரையேற்று (நானேக்க படவனு நானேக்க பரதேசி) என்று எழுதினார்.
பக்தி இசையில் ஜெயதேவர், பத்ராசல ராமதாசர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தர், அப்பர், அன்னமாச்சாரியார், மாரிமுத்துப் பிள்ளை, நாராயண தீர்த்தர், ஆண்டாள் நாச்சியார்,இவர்களின் பங்கு அளப்பரியது எனலாம்.
ஆழ்வார்கள், நாயன்மார்கள், அருணகிரிநாதர், ஆண்டாள் இவர்களின் பாசுரங்கள் பக்தி ரசம் சொட்டக் கூடியவை. பின்னாளில் தமிழில் மகாகவி பாரதி, கோபாலக்ருஷ்ண பாரதி, சுத்தானந்த பாரதி, முத்துத்தாண்டவர் போன்றவர்களின் பக்தி கீதங்கள் மிகப் பிரபலமாயின. குறிப்பாக சிவன், அம்பாள் பற்றிய பாடல்கள் புனைந்த பாபநாசம் சிவன் பாடல்கள் மிக மிக இனிமை வாய்ந்தவை. பக்தி பாவம் மிஞ்சுபவை. குறிப்பாக, ‘சிவபெருமான் கிருபை வேண்டும்’, ‘காண வேண்டாமோ’, ‘என்னைக் காப்பது ஒரு பாரமா’, ‘மனதிற்கு உகந்தது முருகன் ரூபம்’, ‘கருணைத் தெய்வமே’ போன்ற பாடல்கள் கேட்கக் கேட்க சுகமானவை.
பக்தி கீதம் என்றால் நம் மனதில் நீங்காது இருப்பது எம் எஸ் அம்மா அவர்கள். அதன் பிறகு தேச பக்திப் பாடல்கள் என்றால் டி கே பட்டம்மாள் அவர்கள் தான் நினைவிற்கு வருவார். பக்தி பாவம் நிறைந்த இசை எனும் போது சூலமங்கலம் சகோதரிகள், எம் எஸ் ஷீலா, சிதம்பரம் ஜெயராமன், எஸ் பி பீ, ஜேசுதாஸ், நாகூர் ஹனிபா, டி கே ஜெயராமன், இவர்களையும் நம்மால் மறக்க முடியாது. பாகவதர், டி எம் எஸ், சீர்காழி கோவிந்தராஜன் , மதுரை சோமு, கே பி சுந்தராம்பாள், இவர்கள் பாமரர்களைக் கவர்ந்து விளங்கினர். சம காலத்தில் சுதா ரகுநாதன், பாம்பே ஜெயஸ்ரீ, டி எம் கிருஷ்ணா, சஞ்சய் சுப்ரமணியம், நித்யஸ்ரீ ஆகியோர் எல்லோரையும் பக்தி கீதம் கேட்கச் செய்பவர்கள் எனலாம்.
அதே போல் தில்லானா பாடல்களைப் பிரபலமாக ஆக்கிய இசை வல்லுனர்கள் என்றால் லால்குடி ஜெயராமன் அவர்களும் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்களும் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்களது படைப்பு இல்லாமல் பாட்டுக் கச்சேரியும் இல்லை, நாட்டியமும் இல்லை.
பல புதிய பக்தி ராகங்கள் கண்டுபிடித்து தமிழ், வடமொழி, தெலுங்கு இவற்றில் பாடல் புனைந்தவர் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள்.
வடமொழியில் சமகாலத்தில் பக்தி இசையைப் பரப்பியவர்கள் திரு அனுப் ஜலோடா மற்றும் அனுராதா படுவால் எனலாம்.
அதிலும் காதல் கீதமான கஜல் பாடல்களைப் பாடி மனம் கவர்ந்தவர்கள் குலாம் அலி, ஜகஜீத் சிங், பி பீ ஸ்ரீனிவாஸ், ஹரிஹரன், பூபிந்தர், அனுப் ஜலோடா, பங்கஜ் உதாஸ், பினாஜ் மசானி, ஆகியோர் எனலாம்.
வடநாட்டில் பண்டிட் சிவக்குமார் சர்மா, ஹரிப்ரசாத் சௌராஸியா, பீம் சென் ஜோஷி, பண்டிட் மிஸ்மில்லா கான், உஸ்தாத் அம்ஜத் அலி கான், பண்டிட் ஜஸ்ராஜ், பேகம் பர்வீன் சுல்தானா, ஜாகிர் ஹுசைன், கிஷோரி அமோன்கர் இவர்களது இசைச் சேவை மறக்க முடியாது.
இப்போது அதிகமாக நம்மிடையே வடமொழிப் பாடல்களை பிரபலமாக்கும் இசைக் கலைஞர்கள் அருணா சாய்ராம், ரஞ்சனி காயத்ரி சகோதரிகள் மற்றும் ஓ எஸ் அருண் ஆகியோர்.
இசைக் கருவிகள் மூலம் பக்தி பாவத்தை உண்டாக்கியவர்கள் பலர். அதில் அண்மையில் எல்லோருக்கும் பரிச்சயம் ஆனவர்கள் காத்ரி கோபால்நாத், மறைந்த மேதை மாண்டொலின் ஸ்ரீநிவாஸ் மற்றும் ராஜேஷ் வைத்யா ஆகியோர்.
பக்தி இசையை சினிமாவில் கொண்டு வந்து கொடுத்தவர்கள் பலர். அவர்களுள் முக்கியமாக கே வீ மகாதேவன், மெல்லிசை மன்னர் எம் எஸ் வீ , இசைஞானி இளையராஜா, மற்றும் குன்னக்குடி வைத்யநாதன், மெல்லிசை மூலம் பக்தி பாவத்தை பாமரர்களுக்கும் கொண்டு சேர்த்தவர்கள் என்றால் எல் வைத்தியநாதன், எல் சுப்ரமணியன், எல் கிருஷ்ணன், தேவா, வீரமணி ஆகியோர் எனலாம்.
இந்தப் பட்டியலில் பலரின் பேர் விடுபட்டுப் போய் இருக்கலாம். அறியாமை தான் என்று மன்னித்து விட்டு விடுங்கள்.
சில இசைக் கலைஞர்கள் ராகத்திற்கு, தாளத்திற்கு, ஸ்வரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர் (ஜி என் பீ, , செம்மங்குடிஸ்ரீனிவாச ஐயர் , அரியக்குடி, மதுரை மணி, எம் எல் வீ, மதுரை சேஷகோபாலன்
கே வீ நாராயணசுவாமி போன்றோர்). சிலர் பாவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் எஸ் ராமநாதன், லால்குடி, மகாராஜபுரம் மற்றும் பாலமுரளி அவர்கள் எனலாம்.
பாட்டும் பாவமும் கலந்தே இருக்கிறது நிலவும் வானும் போல. இசையை நடனத்தை ரசிக்கும் ஒவ்வொருவரும் அதனைப் புரிந்து கொண்டு ரசிக்க வேண்டும். யார் பாடுகிறார்கள், எந்த மொழியில் பாடுகிறார்கள் என்பதை விட மனதை வருடும் படி எப்படிப் பாடுகிறார்கள் என்று உணர்ந்து இசையை ரசிக்க வேண்டும். ரசிகமணி என்பவர் அக்காலத்தில் மிகப் பிரபலம் எனலாம். இசையில் குறை நிறைகள் தாண்டி பாடல் வரிகளுக்குள் ஊடுருவி ரசித்தல் அவசியம். பஜனைப் பாடல்கள் மூலம் எல்லோரையும் கவர்ந்தவர் சுவாமி ஹரிதாஸ் கிரி அவர்கள். இப்போது உடையாளூர் கல்யாணராமன் போன்ற இளைய தலைமுறையினர் மக்களிடம் அப்படிப்பட்ட பக்தி இசையை கொண்டு சேர்க்கின்றனர் எனலாம்.
தேவாரம், பாசுரம் என்று கோவில்களில் பாடப்படும் இவற்றையும் மக்கள் கூர்ந்து கவனித்து ரசிக்க வேண்டும். பாவத்தோடு கூடிய பாட்டு பல்லாண்டு வாழும் என்பது உறுதி. இசைக்கு மயங்காதவர் இல்லை. இசையால் நோய் குணமாகிறது. இசை மன அழுத்தம் நீக்கிறது. இசை மனதிற்கு இதம் தருகிறது. இசைக்கு இசைவோம் தலையாட்டி, கை தட்டி, கண் மூடி, மனம் லயித்து.
இசையும், இசை மற்றும் நடனக் கலைஞர்கள் வாழ்க என்று போற்றுவோம். அடுத்த தலைமுறைக்கு அதனைக் கொண்டு சேர்ப்போம்

No comments:

Post a Comment