Tuesday, November 17, 2015

Parenting 2

சிறப்புக் குழந்தைளை செவ்வனே பராமரிப்பது  எப்படி ?
டாக்டர் பாலசாண்டில்யன்
மனநல ஆலோசகர்   M - 9840027810

சிறப்புக் குழந்தைகள் என்று சொல்லக் கூடிய மன நலம் குன்றிய குழந்தைகள் பிறப்பதன் காரணம் என்ன ? அப்படிப் பிறந்தால் அவர்களை பேணிக் காப்பது எப்படி எனும் கவலை நிறைய பெற்றோருக்கு உண்டு.

பல சமயங்களில் பிரசவத்தின் போதே பிரச்சனை தொடங்கி விடுகிறது. கரு உருவாகும் போதே உள்ள சிக்கல் மற்றும் RH இரத்த வகை ஒவ்வாமை போன்ற காரணங்கள் பலருக்குப் புரிவதில்லை.

தேவை அற்ற மருந்து எடுத்துக் கொள்ளல், கருத்தடை செய்யும் முயற்சியில் சிக்கல், மற்றும் தாய் (சதவீதம் மிகக் குறைவு என்றாலும்) மது அருந்துதல், குழந்தை பிறக்கும் போது போதிய ஆக்சிஜென் இல்லாது போவது, கக்குவான் இருமல், அம்மை போட்டுதல், மூளை காய்ச்சல் வருவதால், உணவில் விஷம் கலந்து விட்டால் - அம்மா அல்லது குழந்தையின், அயோடின் குறைபாடு, ஊட்ட சத்து குறைபாடு மேலும் இன்னும் சில பல விளங்காத அறிவுக்குப் புலப்படாத காரணங்கள் பல - என்று மன நலம் குன்றிய குழந்தைகள் பிறப்பிற்கு காரணங்கள் எனச் சொல்லலாம்.

மன நலம் குன்றிய குழந்தைகள் நிலை என்பது ஒரு வாழ்நாள் பிரச்சனை எனபதை முதலில் பெற்றோர் மற்றோர் புரிந்து கொள்ளல் அவசியம். பொதுவாக பிறப்பின் போதோ பிறந்த பிறகோ ஏற்படுவது என்றாலும் இந்த நிலையைக் கண்டறிவது பெரும்பாலும் சில வருடங்களுக்கு பிறகே என்பது தான் இன்றைய சூழலில் உண்மை. மிதமான மூளை அல்லது அறிவு வளர்ச்சி இருக்கும் இந்தக் குழந்தைகளை சில தெரபி வழியாக, சிறப்பு பள்ளி மூலமாக ஓரளவுக்கு தான் சரி செய்யலாம்.

பெற்றோர்க்கு இடையே யாரால் இந்த நிலை என்ற வாக்கு வாதம் சண்டை நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது பல இல்லங்களில். ஒருவருக்கொருவர் குற்றம் சாற்றிக் கொள்வதும் இயல்பு தான் என்றாலும் அடுத்த குழந்தை எப்படி பிறக்கும் என்ற கவலை தான் மிகப் பெரியது. மேலும் இந்தக் குழந்தையை யார் எப்படி கவனிப்பது என்பதிலும் சச்சரவு நிலவுகிறது. குடும்ப உறுப்பினர்கள் இந்தக் குழந்தைகளை ஏற்காத போது ஏற்படும் மன வருத்தம் கொடுமை. அதில் இருந்து மீண்டு வருவது தான் பெற்றோருக்கு மிகப் பெரிய சவால். முதல் அல்லது அடுத்த குழந்தை இந்தக் குழந்தை மீது பரிவு காட்டாத சுயநலச்  சிக்கலும் உண்டு...!!

இங்கே தான் ஆரம்பிக்கிறது பெற்றோரின் சரியான முடிவு, மனப்பாங்கு, உறுதியான நிலை. இது நம் குழந்தை. இது தான் அதன் நிலை. இப்போது என்ன செய்யலாம் என்று தீர்க்கமான காலத்தின் அருமை கருதி எடுக்கும் சில செயல்பாடுகள் அந்தக் குழந்தையின் வாழ்க்கை நிலையைச் சற்று மாற்றி அமைக்கும்.

இந்தக் குழந்தைகளை சிறப்புக் குழந்தைகள் என்று சொல்லுவது உண்டு. ஏன் எனில் இவர்கள் தமது கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள் என்பதால். எத்தனையோ சிறப்புக் குழந்தைகள் கைத்திறன் சில கற்றுக் கொள்கிறார்கள், பாடுகிறார்கள், கைவினைப் பொருட்கள்
தயாரிக்கிறார்கள். சில சிறப்பு பயிற்சிகள் வழங்கும் மையங்களை கண்டுபிடுத்து அவர்களுக்கு பின்னாளில் ஓரளவு சுயமாய் வாழும் நிலை ஏற்படுத்துதல் பெற்றோரின் கடமை.

மிகவும் பின் தங்கிய ஊர்களில் இந்தக் குழந்தைகளை பராமரித்து பயிற்சி தரும் அமைப்புகள் இருப்பதில்லை எனும் போது பெற்றோர் மிகவும் சிரமப் படுகிறார்கள். நகரத்தில் இதற்கான நல்ல பயிற்சி மையங்கள் உள்ளன. அங்கே பிரத்யேகமான பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் நிறைய இருக்கின்றனர்.

இந்தக் குழந்தைகள் அதிகம் எடை போட்டு விடாமல் இருக்கவும்,  நகம் பல் இவை குறித்த கண்காணிப்பும் அவசியம் ஆகிறது. மேலும் பெண் குழந்தைகள் என்றால் பருவ வயது சிக்கல்களை பார்த்துப் பார்த்து உதவ வேண்டிய நிர்பந்தமும் இருக்கிறது.

என்ன இருந்தாலும் இவர்கள் கடைசி வரை பெற்றோருக்கு ஒரு பாரமாகத்தான் இருக்கிறார்கள். இருக்கும் வரை அவர்களை பரிவுடன், கனிவுடன், பொறுமையுடன் காத்து கவனித்து வளர்த்தல் ஒரு போராட்டம் என்றாலும் சில பெற்றோர்கள் அந்த காரியத்தை செவ்வனே செய்கிறார்கள்.

சிலர் இந்த மாதிரி குழந்தைகள் பிறந்தவுடன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு கண் காணாத அநாதை இல்லங்களில் விட்டு விடுகின்றனர். அங்கே அவர்கள் நிலை நிச்சயம் மோசம் தான். என்ன இருந்தாலும் பெற்றவர் பார்த்துக் கொள்வதற்கும் மற்றவர் பார்த்துக் கொள்வதற்கும் வித்தியாசம் உண்டு தானே. அப்படிப்பட்ட பெற்றோர் கடைசி வரை குற்ற உணர்வோடு தான் வாழ்கிறார்கள். 

உலகில் தோன்றி விட்ட இந்தக் குழந்தைகளுக்கும் உயிர் பிரியும் வரை வாழும் உரிமை உள்ளது என்பதை உணர்ந்து கண்ணும் கருத்துமாக அவர்களை கடைசி வரை பாதுகாத்து கரை தேற்றுவது கடமை என்பதை உணர்தல் நல்லது. 

மனநலம் குன்றிய (MR) சிறப்புக் குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர் தாண்டி மன நல ஆலோசகர்கள், சிறப்பு பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்ட், திறன் பயிற்சியாளர்கள், நரம்பியல் நிபுணர்கள், மன நல மருத்துவர்கள், தன்னல ஆர்வலர்கள் இவர்களின் பங்கு மகத்தான ஒன்று என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட்டு அவர்களை

மனதார பாராட்ட வேண்டும். இவர்கள் அனைவரும் சேர்ந்து தான் இந்தக் குழந்தைகளை இவ்வுலகின் பிரஜைகள் கணக்கில் சேர்த்திட உதவுகின்றனர். ஆகவே பெற்றோர்கள், தாம் மட்டுமே போராடுவதாக நினைத்தல் அவசியம் இல்லை. 

No comments:

Post a Comment