Wednesday, January 13, 2016

மனதில் நீங்கா இடம்

மனதில் நீங்கா இடம்
- டாக்டர் பாலசாண்டில்யன்


அகமும் முகமும் சில விஷயங்களால் மகிழ்ந்து போய் மனதில் ஒரு நீங்கா நல்ல பதிவை ஏற்படுத்துகின்றன. அதனை பர்ச்ட் இம்ப்ரெஷன் என்கிறோம். அப்படி மற்றவரை மகிழ்விக்க, அவர் மனதில் பதிய சில முக்கிய யோசனைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. முயன்று பாருங்கள். மாற்றம் புரியும்

உங்கள் உணர்ச்சிகளை சரியாகக் கையாளுங்கள். குறிப்பாக மூட் அவுட் ஆகிடும் பழக்கத்தை, மற்றவருக்கு மூஞ்சியைக் காட்டும் பழக்கத்தை கைவிட வேண்டும். கையைக் காட்டுவது வாழ்த்து. தலையைக் காட்டுவது மதிப்பு. மூஞ்சியைக் காட்டுவது அவமதிப்பு.

எப்போதும் பிறரைப்  புரிந்து கொள்ளுதல், அவரிடத்தில் நம்மை வைத்துப் பார்த்தல், உதவுதல் எல்லாமே நெருக்கத்தை ஏற்படுத்தி இறுக்கத்தை குறைக்கும்.

எப்போதும் உங்கள் மீது தான் கவனம் இருக்க வேண்டும் என்று எண்ணாமல், செயல்பாட்டினை வித்தியாசமாக செய்யும் போது அனைவரின் கவனமும் தானாகவே நம் மீது திரும்பும். உலகம் உங்களை விரும்பும்

குற்றம், குறை சொல்லுவதைத் தவிர்த்து, அந்த நேரத்தை சுய ஆய்வு செய்து உங்களை மேம்படுத்தி அடுத்த நிலைக்கு தள்ள முடியுமா என்று பாருங்கள்.

பாராட்டுதல், உற்சாகப்படுத்துதல் இரண்டும் மிக நல்ல குணங்கள். மனதார பிறரைப் பாராட்டினால் அது உங்களுக்கே திரும்பி வரும்.

மற்றவரை விட நாம் ஒரு படி மேலே என்று நிருபிக்கும் எண்ணம் வேண்டாம். உங்கள் செயலினை திறம்பட, நேர்த்தியாகச் செய்யுங்கள். உங்கள் சிறப்பை மற்றவர் கண்டறியட்டும்.

 எவர் மீதும், எல்லா செயல் மீதும் விருப்பம் மற்றும் ஆர்வம் காட்டுதல் மிக அவசியம்

ஒத்துழைப்பு, உதவி, தாராள குணம், ஈகை இவை எல்லாம் உங்களை நிச்சயம் உயர்த்தும் குணங்கள் தான்; சந்தேகம் வேண்டாம்.

எப்போதும் மகிழ்ச்சியாக, மலர்ச்சியாக முகத்தை (அகத்தை) வைத்துக் கொள்ளுங்கள்.அதற்கு தன்னம்பிக்கை, ஆற்றல் வளர்த்துக் கொள்ளுதல் தேவை.

எதுவும் எதிர்பாராத உண்மை அன்பு வைத்தால் உங்களை அனைவரும் நேயத்தோடு விரும்புவர், அன்பு செலுத்துவர்.

பிறரைக் காணும் போதும் பழகும் போதும் மலர்ச்சி இருக்கட்டும். பேசும் போது நல்லுறுதி மற்றும் நேர்மறை சிந்தனை மேலோங்கி இருக்கட்டும்.

எல்லோரிடமும் இனிமையாக இருங்கள். பரிவும் கனிவும் பாவம் அல்ல, தீங்கும் அல்ல. எரிச்சல், வெறுப்பு இவை தான் தீங்கு.

பின்னால் பேசுவது மனிதம் அல்ல. முன்னால் பணிவு, பின்னால் கனிவு மட்டுமே நல்லது. பலர் முன்பு பாராட்டும், தனியாக இருக்கும் போது திருத்திக் கொள்ள வேண்டிய குறைகள் சொல்லுவது யாவரும் விரும்புவர்.

மேற்சொன்னவை எல்லாம் விதிகள் அல்ல. விரும்பத்தக்கவை மட்டுமே. உங்களது சொந்த நல்லெண்ணங்களை நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். உங்களை நீங்களே கண்ணாடியில் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டு சுய ஆய்வு செய்து (தலை கலைந்தால் சரி செய்து கொள்வது போல்) திருத்திக் கொள்ளுங்கள். எவ்வளவுக்கெவ்வளவு நம்மை நாமே கண்காணித்துத் திருத்திக் கொள்கிறோமோ அவ்வளவு பிறர் நம்மை குற்றம் சொல்லாது இருப்பர்.

 உங்களை மகிழ்வோடு உற்சாகமாக வைத்துக் கொள்வது எப்படி என்று தனியான புத்தகம் ஒன்றும் இல்லை. உங்களுக்கு அப்படி விளக்கி வழிகாட்டும் என நிச்சயம் ஒன்று உண்டு என்றால் அது தான் உங்கள் 'மனம்'. 

"மனம் விரும்புதே உங்களை. பிறர் மனம் திரும்புதே உங்கள் மீது" என்று ஆன பின்பு நீங்கா இடம் நிச்சயம் உங்களுக்கு உண்டு இவ்வுலகில்


No comments:

Post a Comment