Tuesday, January 12, 2016

அனுபவம் என்பது யாதெனக் கேட்பின்

அனுபவம் என்பது யாதெனக் கேட்பின்  டாக்டர் பாலசாண்டில்யன்
பேயு பேயுனு சொன்னப்ப பேயாமப் பேயாப் பேஞ்சுது பெரியமழை. யாரும் இதற்கு முன் இப்படி பார்க்கலை. இது மாதிரி கேக்கலை. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி நடக்கும் போது மக்கள், மாக்கள், அரசு, அதிகாரிகள் யார் தான் என்ன செய்ய முடியும்?

ஒரு பெரிய வித்தியாசம் இந்த மழை சீசனில், ஐந்து முறை கனமழை வந்தது. நீர் தேக்கம் தெருக்களில் இருந்தது. ஆனால் வெள்ளம் இல்லை. பள்ளம் நிச்சயம் இருந்தது வீதிகளில். பல முறை அலுவலகம் சென்றவர்கள் தாமதமாக வீடு திரும்பினர். பெருஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் உண்டானது. தெரு ஓர வியாபாரிகளுக்கு மாபெரும் நஷ்டம் ஏற்பட்டது. பள்ளிகள் மழைக்கு ஒதுங்கின. மக்கள் தங்கும் விடுதிகள் ஆகின. ஆனால் ஏற்கனவே பள்ளிகளில் அத்தியாவசியமான கழிப்பறை மற்றும் குடிநீர் கிடையாது என்பதை சொல்லவும் வேண்டுமோ?

திரும்பப் திரும்ப பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டு இந்தக் கல்வி ஆண்டில் மட்டும் 25 நாட்கள் விடுமுறை விடப் பட்டுள்ளன. இன்னும் திறக்கப்படவில்லை. முடிக்க வேண்டிய போர்ஷன் நிறைய நிறைய. பிள்ளைகளுக்கு படிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய நிறைய. அரை இறுதி தேர்வே நடைபெறவில்லை. கல்வி ஆண்டினை முடிக்க வேண்டும். வழக்கம் போல் பொதுத் தேர்வு நடத்தி, பேப்பர் திருத்தி, ரிசல்ட் அறிவித்து, அப்பப்பா நினைத்தாலே தலை சுற்றும் சம்பந்தப்பட்ட கல்வித் துறைக்கு, ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கு, பெற்றோர்களுக்கு. இதனை அடுத்து மாநில தேர்தல் வேலையும் இந்த ஆசிரியர் கூட்டமே பணி ஆற்ற வேண்டும்

விடுமுறையே எடுக்க முடியாது தொடர்ந்து பணி ஆற்றும் கூட்டம் என்று பார்க்கும் போது மருத்துவமனை, தபால் ஆபிஸ், போக்குவரத்து துறை நண்பர்கள், மின்சார ஊழியர்கள், ஓட்டுனர்கள், சிறு வியாபாரிகள், அரசுப் பணியாளர்கள், துப்பரவுப் பணியாளர்கள், ரயில் ஓட்டுனர்கள், ஹோட்டல் ஊழியர்கள், பால் நிறுவனத்தினர், ஊடகத் துறை நண்பர்கள், நாளிதழ் ஊழியர்கள், சில பல தயாரிப்புத் துறை நிறுவன ஊழியர்கள் என்று ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது. பாவம் என்று மூன்று வார்த்தைகளில் முடிக்க முடியாது இவர்கள் ஊழியத்தை. இவர்களில் இந்த மாதம் ஆண்டின் இறுதி என்பதால் ஐடி ஊழியர்களும் வேலைக்குப் பயந்து தினம் தினம் பணிக்குச் சென்றனர்.

மீண்டும் மழை வருமா ? என்ன ஆகும் என்ற அச்சத்தோடு மக்கள் இருக்கும் போது தான் கொற்றலை எனப்படும் பேரிடர் சம்பவம் நடந்தது. கடல் மூலம் வந்த சுனாமி ஒரு மணி நேரத்தில் வந்து லட்சம் பேரைத் தனது வசம் அள்ளிச் சென்றது. ஆனால் வானத்தில் இருந்து வந்த இந்த ஒரு மாமழை விடாது கொட்டித் தீர்த்து கோபத்துடன் தனது கணக்கைத் தீர்க்க வந்தது. ஏரி, கிணறு, குளங்கள் என்று நிரம்பாத இடங்கள் இல்லை. இதில் தாழ்வான பல குடியிருப்பு பகுதிகளும் அடக்கம். இம்முறை பாவம் இவர்கள் என்று ஏழை பாழை மக்கள் என்று உச்சு கொட்டும் நடுத்தர, மற்றும் உயர் நடுத்தர மக்கள் வெறும் டிவி பார்த்து பரிதாபப் படாமல், வேடிக்கை பார்ப்பவர்களாக இல்லாமல் வேதனை அனுபவிப்பவர்களாக மாறியது யாரும் கனவிலும் நினைத்துப் பார்த்திடாத ஒன்று

அதிகாலை நேரம் திடீர் கூச்சல் அக்கம் பக்கத்தில். அரைத் தூக்கத்தில் எழுந்து போய் கொட்டும் மழையில் குடையுடன் முட்டிக்கால் நீரில் வெளியே வந்து பார்த்தால், வீதியில் ஆடிப் பெருக்கு சமயத்தில் காவிரி ஓடுவது போல் வெள்ள நீர் போய்க் கொண்டிருந்தது. அப்போது அதன் வீரியம் தாக்கம் வேகம் வேடிக்கை பார்த்த எனக்கும் எங்கள் அக்கம் பக்க வீட்டாருக்கும் நிச்சயம் புரியவில்லை

தண்ணீரில் மரக் கட்டில், ஒரு மாருதி கார், குப்பைத் தொட்டி வண்டிகள், சைக்கிள்  என்று போய்க் கொண்டிருக்கும் போது மாடி வீட்டு சீமான்கள் தமது வீட்டின் குப்பை கூளங்கள், பழைய மெத்தை தலையணை, கிழிந்த துணிமணிகள், பிளாஸ்டிக் பொருட்கள், நாப்கின்கள் என்று வர்ணிக்க முடியாத பலவற்றை போட்டு அவை மிதந்து அடித்துச் செல்வதை வேடிக்கை பார்த்த வண்ணம். சிலர் மொபைல் போனில் வீடியோவும், செல்பியும் எடுத்துக் கொண்டு இருந்தனர். மணி ஆக ஆக, கரண்ட் போய் விட்டது என்ற சிறுவர்களின் அறிவிப்பு சத்தம் கேட்டது

அப்போது தெரியவில்லை நாம் வெளி உலகத்தோடு இருக்கும் தொடர்பினை இழக்கப் போகிறோம் என்று. மொபைல் போனில் சார்ஜ் குறைய ஆரம்பித்தது. பசி, பகலிலேயே இருட்டு என்று ஆன போது வெள்ளத்தின் உயரம் மிக அதிகம் ஆனது. நம் வீட்டிற்குள் வராது என்று இருந்த பலர் உள்ளே ஓடினர். மழை நின்று தான் இருந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி என்ன என்ன பொருள் எடுத்து பாதுகாக்க முடியுமோ அவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் போதே அந்த விபரீதம் தொடங்கி விட்டது. கக்கூஸ் வழியாக, வாசல் வழியாக என்று நாலாப் புறமும் தண்ணீர் வீட்டிற்குள் நுழைய எல்லோர் கண்ணிலும் ஒரு பயம் நுழைந்து கொண்டது

மாடி வீட்டிற்கு ஓடினோம். இரவெல்லாம் தூக்கம் இல்லை. நெட்வொர்க், கரண்ட் இல்லை. பக்கத்து பிளாட் மாமி சாப்பாடு கொடுக்க ஏதோ சாப்பிட்டோம் என்று பேர் பண்ணி விட்டு பயத்தை கட்டிப் பிடித்துக் கொண்டு படுத்தோம்.

சீக்கிரமே விடிந்தது பொழுது. இருண்டது வீடும், மனதும், எதிர்காலமும். கீழே இறங்கிப் பார்த்தால் எல்லாப் பொருளும் (தனித் தனி பட்டியல் தேவை இல்லை) மிதந்த வண்ணம். வெளியே ஏக கூச்சல். கையில் ஒரு குச்சியுடன் எல்லோரும் போவதைப் பார்த்து விட்டு நானும் போனேன் பால் வாங்க. அப்போது தான் தெரிந்தது பால் கிடைக்கவில்லை என்று. பல தெருக்கள் கடந்து நடந்து போனேன், எங்கள் வீட்டிற்கும் எதிர் வீட்டு 95 வயது தாத்தா பாட்டிக்கும் சேர்த்து இரண்டு மணி நேரம் வரிசையில் நின்று ஒரு பாக்கெட் 150 ரூபாய் கொடுத்து வாங்கினேன். ஒலிம்பிக் தங்க மெடல் வாங்கியது போல் தோன்ற நடக்க ஆரம்பித்தேன். மெயின் ரோட்டில் ஆயிரக் கணக்கானோர் தத்துப் பித்து போல் வாடிய முகத்தோடு நடந்து கொண்டிருந்தனர். 4 மெழுகுவர்த்தி 500 ரூபாய் அதுவும் வாங்கினேன். ஹிந்து பேப்பர் எதிர் வீட்டு தாத்தாவிற்கு வேண்டும் என்று வரிசை கட்டி அதிக பணம் கொடுத்து வீடு வந்து சேர்ந்தேன். இன்னும் ப்ரெட், பிஸ்கட் எல்லாம் தேவை. மீண்டும் போனேன் மகளுடன். ஆனால் பல கடைகள் அடைக்கப் பட்டன. ஓரிரு கடைகளில் ரங்கநாதன் தெருக் கூட்டம். ப்ரெட், பிஸ்கட், காண்டில், தோசை மாவு மட்டும் இல்லை என்று முதலாளி சத்தமாக சொன்னார்

பேப்பர் பார்த்த போது வெளசரவக்கம், விருகம்பாக்கம், வடபழனி, கே கே நகர், அசோக் நகர், ஜாபர்க்கன்பெட், மாம்பலம், தி நகர், வேளச்சேரி, பள்ளிக்கரணை, முடிச்சூர், தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர் என்று எல்லா இடங்களும் வெள்ளம் என்று அறிந்த போது தொண்டை அடைத்தது. உறவினர்கள் நண்பர்கள் பத்திரமா என்று அறியமுடியவில்லை. போன் வேலை செய்யவில்லை, டிவி இல்லை, கரண்ட் இல்லை, நெட்வொர்க் இல்லை. போவோர் வருவோர் போட்ட பிட் தாங்க முடியவில்லை. இங்கே இப்படி. அங்கே அப்படி. முதல் மாடி போச்சு, இரண்டாம் மாடி போச்சு, என்றும், எல்லா சப்வேக்களும் மூடியது. போக வழி இல்லை - மக்களும் தண்ணீரும் என்றனர். மக்கள் நிருபர்கள் ஆக மாறினர். கடைக் காரர்கள் கொள்ளைக் காரர்கள் ஆகினர். அக்கம் பக்கத்தினர் நெருக்கமான உறவினர் ஆகினர். வீட்டு மனிதர்கள் போன், டிவி இல்லாத நிலையில் மனம் விட்டுப் பேசினர். இருப்பினும் நமக்கு நெருக்கமானவர்களின் ஷேம லாபம் தெரியவில்லை. மனம் பதறியது. அப்போது அங்கே இவர் இறந்தார். அவர் இறந்தார் என்ற செய்தி வேறு

அருகில் உள்ள ஆஸ்பத்திரிகள் மூடின சேவை ஆற்றமுடியாத நிலையில். எப்படியோ நீந்திக் கொண்டு எனது மைத்துனர்கள் மூவர் கைகளில் பற்பல மூட்டைகளுடன் வந்து எங்களைப் பார்த்து கட்டிப் பிடித்து கண்ணீர் விட்டனர். நாங்களும் மனம் உருகி அழுதோம். நீங்கள் உயிரோடு இருக்கிறீர்களே என்றனர்.
வீட்டிற்குள் நுழைய முடியவில்லை. 'எல்லாம்' கலந்த புண்ணிய நீர் துர்வாசம் தாங்க முடியவில்லை. இருப்பினும் என்ன என்ன போயிற்று, இன்னும் என்ன காப்பாற்ற முடியும் என்று செயல்பட்டுவிட்டு வாசலில் உட்கார்ந்து சிற்றுண்டி கொண்டோம். வீட்டைப் பூட்ட முடியவில்லை. இருப்பினும் ஏதோ அழுத்தி சாத்தி விட்டு மைத்துனர் காரில்  (இல்லை மோட்டார் வைத்த போட்) ஏறி மனமே இல்லாமல் வீடு துறந்து புறப்பட்டோம் அகதிகள் போல. ஏற்கனவே 5 நாட்கள் குளிக்கவில்லை. துணி மாற்றவில்லை. குறைவாக சாப்பிட்டு, குறைவாக நீர் குடித்ததால் கழிவறை கூட சரியாக போகவில்லை என்ற நிலையில் புறப்பட்டோம்

ஒரு கட்டம் தாண்டிய பிறகு உலகமே வேறு. கரண்ட் இருக்கிறது. வெளிச்சம் இருக்கிறது. அங்கே அவர் வீட்டில் நுழைந்ததும் மொபைல் போன்களை சார்ஜில் போட்டோம். பாதி சார்ஜ் ஆகும் போதே சத்தம் தாங்க முடியவில்லை. அத்தனை செய்திகள். அழைப்புகள். மணி ஆயிற்று. டிவி பார்த்த போது, சீ...நமது இழப்பு ஒரு இழப்பா? இங்கே பார் மக்களை எவ்வளவு அல்லல் படுகிறார்கள் என்று புரிந்தது. முக்கிய நபர்கள் போனை அழைத்து நாங்கள் பத்திரம் என்று சொன்னோம். நள்ளிரவைத் தாண்டிய நேரம். தூக்கமே வரவில்லை. பயம், வெறுமை தான் இருந்தது. இருப்பினும் மனம் பிரார்த்தனையில் ஈடுபட்டது. இவ்வளவு கருணையா இறைவா எங்கள் மீது? நஷ்டம் பொருளுக்கு தானே/ பிழைத்த நிலையில் நாங்கள் நல்லபடி. வேறு என்ன வேண்டும். எல்லாமே இழந்தாலும் நம்பிக்கை மீதி இருந்தது

காலை டிவி பார்த்த போது ஒரே கூச்சல், அழுகை, கூக்குரல், விவாதங்கள் ஒரு புறம், மறுபுறம் மக்களைப் பாதுகாத்து காப்பாற்றும் ஏராளமான இளைஞர்கள், தன்னார்வ தொண்டர்கள், உணவுப் பொட்டலங்கள், தண்ணீர், உடை, பாய், போர்வைகளுடன் வண்டிகள் கேரளா, கர்நாடகா என்று எங்கிருந்தோ வந்த வண்ணம் போன வண்ணம் இருந்ததைக் காண முடிந்தது. இப்போது போன் மட்டுமா புல் சார்ஜ், நாங்களும் தான். ஓலா அழைத்த போது அதிர்ஷ்ட வசமாக ஒரு காப் கிடைக்க மீண்டும் வீடு வந்து சேர்ந்தோம்.


இனி நாம் கவலைப் பட வேண்டிய தேவை இல்லை. எல்லோருக்கும் இழப்பு. நமக்கும் இழப்பு என்ற நினைப்போடு புறப்பட்டேன். வீதிகளில் வெள்ளம் ஓரளவுக்கு வடிந்து இருந்தது

இறந்து போய் தகனம் செய்ய முடியாத எனது ஆசான் திரு டாக்டர் விக்கிரமன் ஐயா உடலைப் பார்த்து விட்டு, குடும்பத்தாரோடு பேசி ஆறுதல் சொல்லி விட்டு, சிறு சிறு உதவிகள் செய்து விட்டு புறப்பட்டேன்.- எங்கள் ஏரியாவில் இருக்கும் இன்னும் சில மிக வயதானவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று காண. டிவி நடிகர் எஸ் வி எஸ் குமார், பிரிகேடியர் துர்காபாய், சாந்தா வரதராஜன் என்று பலரைப் பார்த்து நலம் விசாரித்து விட்டுத் திரும்பும் போது அந்த முதியோர்களின் கண்ணீர் மனம் பொறுக்க வில்லை.

இதற்கிடையே டிவி மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் பார்த்த கேட்ட விஷயங்கள் நிச்சயம் மனதுக்குள் ஒரு குப்பை லாரியை இறக்கி விட்டது போல் ஆயிற்று. அத்தனை ஏகத்தாளம், விமர்சனம், ப்ளேம் கேம், வேண்டாத பழி சுமத்தல்கள், ஜோக்குகள், வீடியோக்கள், புரளிகள், ரமணன் போல அடுத்து வருமா என்ற யூகங்கள் சீ சீ என்று ஆகும் போது, சில நண்பர்கள் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் என்பதால் அவர்கள் க்ரூப்பில் விடுமுறை விடலாமா, வீட்டிற்க்கு ஊழியர்களை அனுப்பலாமா, எந்த ரூட்டில் மழை வெள்ளம் இல்லை, எங்கு இன்னும் மழை பெய்கிறது போன்ற தகவல்கள் விவாதப் பொருள் ஆனது.

Relief, Restore, Rehabilitate என்ற அடிப்படையில் போக முடியாமல், கிட்டத்தட்ட 17 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் இருக்கிறார்கள் - உயிரோடு - பாதுகாப்போடு - ஆனால் அரை வயிற்றோடு, முழு பீதியோடு, குளிக்காமல், உடை மாற்றாமல் என்கிற செய்தி ஒரு பக்கம் வர ஆரம்பிக்கும் போதும், நிவாரணப் பொருட்கள் குவிந்த வண்ணம் இருந்தன. முகநூலில் மழை கவிதை நின்று, மழைக் கவலை கூட நின்று, ஒவ்வொருவரும் எங்களிடம் இவ்வளவு உணவு இருக்கிறது, யாருக்கு வேண்டும், இங்கே அணுகவும் என்றெல்லாம் வர ஆரம்பித்தது

உணவு தவிர மக்களுக்கு தேவைப்பட்ட உடை, போர்வை, மருத்துவ சேவை, குடிநீர், என்று மக்கள் பல திசைகளில் திரட்ட ஆரம்பித்தனர். அவற்றை கொண்டு தேவைப்பட்ட இடங்களுக்கு கொண்டு சென்றனர். இந்த சேவையில் நடிகர்கள், தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள், வியாபார நிறுவனங்கள், காவல் துறை, அரசியல் கட்சி உறுப்பினர்கள் என்று எல்லோரும் இறங்கி வேலை செய்தனர். சிலர் கடமையோடு, சிலர் கனிவோடு, சிலர் விளம்பரம் பெறும் எண்ணத்தோடு, சிலர் ஆதாயம் தேடும் நினைவோடு. இருப்பினும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய என்பதே இங்கு முக்கியம் ஆனது

அடுத்து தொடங்கியது என்ன என்ன பொருட்கள் சேதம் ஆனது, எவ்வளவு பேர் உயிர் இழந்தனர், எத்தனை பேர் பணம், பொருள், உடை, உணவு நன்கொடை கொடுத்தனர் என்கிற பட்டியல் வெளிவரத் தொடங்கியது. பிரபலங்கள், நடிகர்கள், தொழில் அதிபர்கள், நல்ல உள்ளம் படைத்த தனி நபர்கள் என்று தனிப்பட்ட முறையிலும் அரசு மூலமும் தமது நிதி உதவிகளைக் குவிக்க ஆரம்பித்தனர்

பிரதமர், முதல்வர், அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் வருகை புரிந்து நிலைமை தனை கணிக்க ஆரம்பித்தனர். இன்னும் எங்கே மழை பொழிகின்றது, இன்னும் மழை சென்னையில் வருமா? ஏன் இந்த வெள்ள சேதம் ஏற்பட்டது, நீர்நிலைகள் எப்படி சரியாக பராமரிக்கப்படவில்லை, அடுத்த மாநிலங்கள் எவ்வளவு உதவினர் போன்ற செய்திகள் முன்னிலை வகித்தன

இன்னும் சில இடங்களில் தண்ணீர் வடியவில்லை, சாலைகளில் திடீர் பள்ளங்கள் தோற்றம், போக்குவரத்து நெரிசல், எங்கு இன்னும் மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற செய்தி முக்கியம் ஆனது. ஆனால் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் போது முதலில் முண்டி அடித்து வாங்கியது அதிகம் பாதிக்காதவர்களே என்று காணும் போது கோபம் வந்தது. அதிலும் எனக்கு வரவில்லை உனக்கு வரவில்லை என்று புலம்பல் வேறு. அடித்துப் பிடுங்குவது, அள்ளிக் கொண்டு ஓடுவது என்று மக்களின் அரக்க குணங்களை வெளிப்படுத்தியது. பாதிக்காத மாடி வீட்டு ஜனங்கள் கர்வத்தோடு சிலர், ஏதோ அவர்களும் கஷ்டப்பட்டது போல போன் செய்து புலம்புவது எல்லாம் பார்த்த போது சிரிப்பு தான் வந்தது

வெளியூர் சாலைகளில் சுங்க வரி ரத்து ஆனது. நிறைய பேர் வெளியூர் கிளம்பினர். மூன்று மாவட்டங்களில் பஸ்ஸில் செல்ல அரசு இலவசம் என்று அறிவித்தது. கரண்ட் வராத மக்கள் ஆங்காங்கே மறியல் செய்த போது சில துணிச்சல் அதிகாரிகள் உங்கள் தெருவில் தண்ணீர் வடிந்தால் தான் மின்சாரம் தருவோம் என்று உறுதியாக சொன்ன போது சில இடங்களில் அது அரசியல் ஆக்கப்பட்டு சில பிரபல தலைவர்கள் வலம் வந்து குரல் கொடுத்தனர். ஆக்கப் பொறுத்த மக்கள் ஆறப் பொறுக்காமல் கொதித்து எழுந்தது காண முடிந்தது

கடைகள் திறந்தன. பொருட்கள் வர ஆரம்பித்தன. சில கடைகளில் வீண் ஆன பொருட்களை வெளியில் வீசி எறிந்தனர். சில VIP க்கள் இறந்த செய்தி ஒரு பக்கம். காய் கறி விலை அடாவடியாக விற்றது சற்று மனமிறங்கி விலை தலை தாழ்த்தியது. உறவினர்கள் வந்து பார்வை இட்டனர். சிலர் உதவி வேண்டுமா என்று தொலை பேசினர். நண்பர்கள் நலம் விசாரித்து தமது கதைகளையும் பகிர்ந்து கொண்டனர். ரேஷன் கடைகள் எல்லாம் காலியாக காட்சி தந்தது. பொருட்கள் எல்லாம் சேதம், சர்வ நாசம்மக்கள் அலுவலகம் போக ஆரம்பித்தனர். இதெல்லாம் வீட்டை சுத்தம் செய்து, பல உடைமைகளை - தமது கனவுகளை குப்பையாக - நாற்றம் கொண்ட சத்தையாக விட்டு எறிந்தனர். வயிறு எரிந்தது. இருந்தும் என்ன பயன்

தெருக்களில் இன்னும் குப்பை அள்ளப் படவில்லை. எங்கே கொண்டு கொட்டுவது? யார் அவற்றை அள்ளுவது? டன் கணக்கில் குப்பை ஒவ்வொரு தெருவிலும் - அவை குப்பை கூளம் அல்ல - படுத்து இருந்த கட்டில், மெத்தை, தலையணை, நாற்காலி, பெட்டி, பீரோ என்று பார்த்து பார்த்து ஆசையாக வாங்கியவை - நாற்றம் அடங்கவில்லை. மன ஆற்றாமையும் தான். இந்த நிலையில் தொற்று நோய் வராமல் தடுக்க அங்கங்கே மருத்தவ முகாம்கள், இலவச மருந்துகள் வழங்கப்படுவதைப் பார்க்க முடிந்தது

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவரேனும் வெளி நாட்டில் இருப்பதால் அங்கு வசிப்பவர் மனம் வாடி துன்பம் மிகுதியால் பணம் அனுப்பத் தயார் என்ற செய்தி அனுப்ப ஆரம்பித்தனர். சில நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு இயன்ற சலுகைகளை அறிவித்தது. பல ரயில்கள் ரத்து ஆகி இருந்த நிலை மாறி புறப்பட ஆரம்பித்தது. விமான நிலையம் மீண்டும் வெளிச்சம் கொண்டது


எதிர் வீட்டு மாமி, மாடி வீட்டு மாமி, பக்கத்து வீட்டு மாமி எல்லோரின் சாப்பாடும் சுவைத்து சாப்பிட்டு விட்டு நன்றி சொல்லி, வீடு சுத்தம் செய்யும் பணிகள், செய்து, அக்கம் பக்கம் உள்ள கடைக் கார நண்பர்கள், வங்கி கணக்கு இருக்கும் கிளையின் நண்பர்கள் எல்லோரையும் சந்தித்து நலம் விசாரித்து முடித்தாயிற்று. அடுத்து என்ன?

தனி மனிதப் பார்வை நீக்கி ஒரு பொறுப்புள்ள தனி மனிதனாக, சமூக அக்கறை உள்ளவனாக பார்க்கும் போது பல்வேறு விஷயங்களைக் காண நேர்ந்தது. மழை வெள்ளத்தில் பத்திரங்கள் சேதமடைந்தால் என்ன செய்ய வேண்டும், எந்த அலுவலகம் செல்ல வேண்டும், எப்படி நகல் சான்றுகள் பெற வேண்டும் போன்ற நல்ல செய்திகள் ஊடகங்கள் தரத் தொடங்கி விட்டது

இதற்கிடையில் ஏரி நீர் எப்படி ஏன் யாரால் திறக்கப்பட்டது என்ற விவாதங்கள் கூடவே தொடங்கி விட்டன. வெள்ளத்தில் எத்தனை டன் குப்பை அகற்றப் பட்டது? அவை எங்கே கொட்டப் படுகின்றன போன்ற விவரங்கள் தாண்டி அடுத்த வாரம் இன்னும் எப்படிப் பேரிடர் நிகழலாம், மறுபடியும் வெள்ளம் வருமா போன்ற பீதிகளும் கிளம்பி விட்டன. சுற்றுச் சூழல் மாசு கட்டுப்பாடு எப்படி செய்ய வேண்டும்? போன்ற விஷயங்களும் அலசப் படுகின்றன

இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுது எப்படி செய்யலாம்? அதற்கான இன்சூரன்ஸ் எப்படிப் பெறலாம்? இனி வரும் காலங்களில் வீட்டுப் பொருட்களுக்கு எப்படி இன்சூரன்ஸ் செய்து பலன் பெறலாம் ? வெள்ளப் பகுதிகளை நிறுவனங்கள் எப்படி தத்து எடுத்து உதவலாம்? வியாபாரிகளுக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது ? மழை வெள்ளம் பாதிப்பு நிவாரணம் வழங்க கணக்கெடுப்பு, வங்கிகளில் கணக்குத் துவக்கம், தண்ணீர்ல் நனைந்த ஆவணங்களை சான்றிதழை எப்படி காய வைத்து மீட்பது? நிவாரணப் பொருட்கள் வழங்குதலில் எப்படி ஒருங்கிணைப்பு செய்யலாம் ? புத்தகம் இழந்த பிள்ளைகள் அவற்றை எங்கே எப்படிப் பெறலாம்? டெங்கு போன்ற காய்ச்சல் வந்தால் எப்படித் தப்பிக்கலாம் ? சுங்க கட்டண சலுகை நீட்டிப்பு போன்ற நல்ல அறிவிப்புகள் இவை எல்லாம் ஊடகங்களில் வலம் வரத் தொடங்கி விட்டதே ஒரு நல்ல விஷயம் தான்.

பிற்காலத்தில் இப்படி ஒரு பேரிடர் வந்தால் என்ன செய்யலாம் - கைபேசிகளுக்கு பவர் பான்க் வாங்குவது, வீட்டிற்கு இன்வேர்ட்டர் போடுவது, லாண்ட் லைன் போன் ஒன்று வைத்துக் கொள்வது, முக்கிய நபர்களின் அலைபேசி எண்களை குறித்துக் கொள்வது, முக்கிய ஆவணங்களை எப்படி பத்திரப்படுத்துவது, இணையத்திலேயே எப்படி ஆவணங்களை பத்திரமாக வைப்பது, வீட்டில் ரொக்கமாக பணம் கொஞ்சம் வைத்துக் கொள்வது, பிளாஸ்டிக் பணத்தை மற்றும் ATM தனை முழுமையாக நம்பாமல் மாற்று ஏற்பாடு செய்வது, வீட்டு பொருட்களுக்கு இன்சூரன்ஸ் செய்வது, முக்கிய சில பொருட்களை வீட்டில் ஏற்கனவே வாங்கி வைத்துக் கொள்வது போன்ற நல்ல யோசனைகளை மக்களுக்கு வழங்கத் தொடங்கி விட்டனர்.

புத்தக கண்காட்சி தள்ளி வைப்பு, இசைக் கச்சேரிகள் மாற்றி அமைப்பு போன்ற பற்பல விஷயங்கள் சென்னைக்கு ஒரு தனித் தெம்பாக தெரிகிறது

இதற்கு நடுவே கீழ் வீட்டில் குடியிருக்கும் பலர் தமது வீட்டை காலி செய்து கொண்டு இரண்டாவது அல்லது மூன்றாவது மாடிக்கு குடி போய் விட்டனர் எனபதைப் பார்க்க முடிகிறது. சிலர் சென்னை விட்டு தமது சொந்த ஊருக்கே திரும்பிப் போய் விவசாயம் செய்யப் போவதாக கிளம்பி விட்டனர்

எதெல்லாம் ஸ்க்ராப் விலைக்கு கிடைக்கும் என்று ஒரு கூட்டம், வண்டி மற்றும் மோட்டார் ரிப்பேர் செய்ய ஒரு கூட்டம், வீடு சுத்தம் செய்து தருகிறோம் என்று ஒரு கூட்டம், வழக்கம் போல குடி கடையில் ஒரு கூட்டம், எல்லாம் பார்க்கும் போது இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி விட்டனர் என்று தான் தோன்றுகிறது. சில வங்கிகள் வட்டி இல்லா தனி நபர் கடன் வழங்கலாம் என்ற செய்தி சிலருக்கு உற்சாகம் தருகிறது. சில நிறுவனங்கள் தமது ஊழியருக்கு வட்டி இல்லாக் கடன் வழங்க முன்வந்துள்ளதாக தகவல் கசிகிறது. பள்ளி கல்லூரி வரும் திங்கள் திறக்கலாம் என்ற செய்தி இருக்கும் போது பள்ளி கல்லூரி கட்டிடங்கள் எப்படி உள்ளன? நீர் கசிவு உள்ளனவா? துர்நாற்றம் இல்லாது இருக்கிறதா? பிள்ளைகள் அமரும் இடங்கள் சுத்தமாக இருக்கிறதா? கழிப்பறைகள் சுத்தப் படுத்தப்பட்டுள்ளனவா? 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு எவ்வளவு நேரம் சிறப்பு வகுப்பு வைக்க வேண்டும் என்பன போன்ற திட்டங்களும் மனதில் எழுந்துள்ளன

அரசுக்கு என்னென்ன சவால்கள் என்று ஒரு எழுத்தாளனாக, பயிற்சியாளனாக, மன நல ஆலோசகராக, பிசினஸ் ஆலோசகராக, சமூக ஆர்வலராக யோசித்துப் பார்த்தேன்

இன்னும் சில இடங்களில் தண்ணீர் வடியவில்லை. மத்திய அரசு கேட்ட அளவு நிவாரணத் தொகை வழங்கவில்லை. இன்னும் நிறைய பேருக்கு மாற்று வசிக்கும் இடம் ஏற்பாடு செய்ய வேண்டி உள்ளது, குப்பை கூளங்கள் இன்னும் பல வீதிகளில் அள்ளப் படவில்லை

தாழ்வுப் பகுதி வசிக்கும் மக்களை அகற்ற என்ன செய்யலாம்? அவர்களை எங்கே கொண்டு பத்திரமாக வைக்கலாம்? எவ்வளவு சீக்கிரம் அவர்களின் வாழ்வாதாரத்தை மாற்றி அமைக்கலாம்? இயல்பு வாழ்க்கைக்கு அவர்களை எவ்வளவு விரைவில் திரும்பக் கொண்டு வரலாம்

சிக்கல் இல்லாமல் மக்களுக்கு உரிய நிவாரணம் எப்படி வழங்கலாம்? இழந்த சான்றிதழ்கள், மற்றும் ஆவணங்கள் மக்கள் பெற்றிட எப்படி பணியை முடுக்கி விடலாம்? வங்கி கடன் வழங்க மற்றும் இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்க வேலைகளை எப்படி துரிதப் படுத்தலாம் ? உடைந்து போன, சிதைந்து போன சாலைகளை எவ்வளவு சீக்கிரம் சரி செய்யலாம்? எந்த முக சுளிப்பும், புகாரும் இல்லாமல் மக்களுக்கு இலவச அரிசி, வேட்டி, சேலை போன்றவை எப்படி வழங்கலாம்? அவதூறு பேசுகிறவர்களை எப்படி சமாளிக்கலாம்

மீண்டும் மழை பெய்தால் எப்படி முன் ஜாக்கிரதையாக இருக்கலாம்

தள்ளிப் போன பள்ளி, கல்லூரி பரிட்சைகளை எப்படி செவ்வனே நடத்தலாம்? இழந்த உற்பத்தி சேதங்களுக்கு எப்படி உழைத்து மீளலாம்? தடை இல்லா மின்சாரம் வழங்க, பெட்ரோல் காஸ் மக்கள் பெற எப்படி நடவடிக்கை எடுக்கலாம்? மனநலம் பாதிக்கப் பட்டவர்களுக்கு எப்படி கவுன்செலிங் மூலம் ஆற்றுப்படுத்தலாம்

நனைந்து போன அரசு ஆவணங்களை எப்படி மீட்கலாம்? விரிசல் விட்டிருக்கும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இவற்றை எப்படி சீர் செய்யலாம்

ஏற்கனவே பெற்றிருக்கும் நிதி ஆதாரங்களை எப்படித் திட்டமிட்டு செலவு செய்யலாம்? இன்னும் எவ்வளவு நஷ்ட ஈடு மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டும்

எல்லா அணைக்கட்டுகளின் நிலை என்ன? கால்வாய் நிலை எப்படி உள்ளது? விவசாயிகளின் இழப்பு எவ்வளவு? எவ்வளவு பயிர் நாசம்

முறையின்றி கட்ட்டப்பட்டுள்ள வீடுகளை எப்படி முறைப் படுத்தலாம்? ஏரி, குளங்களில் பிளாட் போட்டுள்ள நிறுவனங்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம்

மருத்துவ ரீதியாக முன் எச்செரிக்கை நடவடிக்கை என்னென்ன செய்ய வேண்டும்? இந்த பேரிடரில் எந்தெந்த இடங்கள் பாதிக்கப் பட்டன? அடுத்து இப்படி ஒரு சம்பவம் நடந்தால் அதனை எப்படி எதிர் கொள்ளலாம்? பிளாஸ்டிக் மற்றும் இயற்கை மாசு இவற்றை எப்படிக் கட்டுக்குள் கொண்டு வரலாம்? மக்கள் நம்பிக்கையோடு மீண்டு வந்து தமது வாழ்வை எப்படி எதிர் கொள்ளச் செய்யலாம்? இந்த இடர் சமயத்தில் ஏற்பட்ட மத நல்லிக்கணத்தை எப்படித் தொடரலாம்? நிதி அளித்து உதவிய தனி நபர்கள், நிறுவனங்கள், வேற்று மாநில அரசுகள் அவர்களுக்கு எப்படி நன்றி செலுத்தலாம்

பேரிடர் சமயத்தில் எப்படி தயார் நிலையில் இருக்க வேண்டும் போன்ற பயிற்சிகள் ஏற்பாடு செய்வது, இளைய சமூகத்திற்கு மழை மற்றும் இயற்கை குறித்த விஷயங்களில் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்த ஆவன செய்தல், வலைத்தளம், மொபைல் இவை தாண்டிய மனித நேயம் கொண்ட வாழ்வை எப்படி வருங்கால சந்ததியர் வாழ வேண்டும் என்பதை எப்படி பள்ளிக் கூடங்களிலேயே எடுத்துச் சொல்லலாம்

இப்படி இன்னும் ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. இந்த ஆண்டு முடியும் தருவாயில் உள்ளது. நாம் பெற்றதை விட இழந்தது அதிகம் என்றால் மிகை ஆகாது. நிறைய முக்கியப் பிரமுகர்கள், கலைஞர்கள், இந்த ஆண்டு இயற்கை எய்தி இருக்கிறார்கள். வரும் ஆண்டு நல்லதாக அமைய, புத்தாண்டு மற்றும் பொங்கலை மக்கள் இன்முகத்தோடு எதிர்கொள்ள கூட்டுப் பிரார்த்தனைகள் நிறைய நடைபெற வேண்டும். எல்லோரும் இந்த இழப்பிலிருந்து மீண்டு புதியதொரு நல்ல வாழ்வினை ஏற்படுத்திக் கொள்ள அரசு, சமூகம், ஊடகம், நாம் எல்லோரும் இணைந்து பணியாற்ற வேண்டும்


No comments:

Post a Comment