Wednesday, March 18, 2020

மேஜிக் பாக்

பயிற்சி தந்த அனுபவங்கள் -டாக்டர் பாலசாண்டில்யன் 

ஏற்கனவே இந்த தலைப்பில்  சில  விஷயங்களை நான் முகநூலில் பகிர்ந்தது  சிலருக்கு நினைவிருக்கலாம். 

பயிற்சி நிமித்தமாக சென்ற ஆண்டு நான் நாக்பூர் அருகே உள்ள பண்டாரா என்ற இடத்தில் இருக்கும்அசோக் லேலன்ட் 
நிறுவனத்தில்  (டெமிங் அவார்டு பெற விரும்பிய அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு முழுமையான தர நிர்வாகம் என்பதற்கு மனதளவில் தயாராக இருத்தல் பற்றிய பயிற்சி அது) சுமார் 12 பாட்ச் பயிற்சி தருவதற்கு சென்று இருந்தேன்.

ஒவ்வொரு பயிற்சி வகுப்பு தொடங்கும் முன்பும் பயிற்சியில் கலந்து கொள்ளும் நபர்களோடு நல்லதொரு 
இணக்கம் ஏற்படும் வண்ணம் சில விஷ்யங்களை (எல்லா பயிற்சியாளர்களும் தத்தம் விருப்பத்திற்கு ஏற்ப செய்வது உண்டு) செய்வது வழக்கம். நான் எனது பயிற்சிகளில் சுமார் மூன்று விஷயங்கள் செய்வேன். ஒன்று "நாட்டிய ஹாஸ்ய யோகா' என்று ஒரு சிறிய எனெர்ஜி தரும் ஆக்ட்டிவிட்டி, பிறகு
ஏன் இந்த பயிற்சி ஏன் இந்த முயற்சி என்ற
ஓர் எளிய வீடியோ அறிமுகம், அதன் விளக்கம். பிறகு பயிற்சி பெற வந்திருக்கும் நபர்களுக்கு இடையே பரஸ்பர நல்லுறவுக்கு (அவர்கள் ஒருவரை ஒருவர் வித்தியாசமாக அறிமுகம் செய்து கொள்ளுதல்) என்று ஒரு ஆக்ட்டிவிட்டி இவை நிச்சயம் இருக்கும். 

இதைத் தாண்டி (நான் பயிற்சியில் மேஜிக் பயன்படுத்துவது எப்படி என்று பயின்றுள்ளேன், மேலும் இது சம்பந்தமான பயிற்சியை பிறருக்கும் எங்கள் விஷன் அன்லிமிடெட் மூலம் ஏற்பாடு செய்துள்ளேன்)    நான் வைத்திருக்கும்
மேஜிக்  பாக் ஒன்றை  பயன்படுத்தி அதில்  இருந்து அந்த பயிற்சி வகுப்புக்கு யார் முதலில் வந்தார்கள் என்று கேட்டறிந்து அவர்களுக்கு பத்து அல்லது இருபது ரூபாய் நோட்டு ஒன்றை பரிசாக வழங்குவேன். அப்படி வழங்கும் போது, நான் அந்த நபரிடம் சொல்லுவது உண்டு :         " இதை உங்கள் மனைவியிடம் கொடுத்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வைக்கச் சொல்லுங்கள். இந்த பணம் பல லட்சங்களாக வளர வேண்டும் என்று பிரார்த்திக்க சொல்லுங்கள், உங்கள் கனவு லட்சியம் எல்லாம் நிறைவேறும்" என்று.

அப்படித்தான் அந்த 12 பாட்ச்களிலும்
நாக்பூரில் செய்தேன். என்ன இதில் விசேஷம் என்கிறீர்களா? ஆம் விசேஷம் உண்டு. அதனால் தான் இந்தப் பதிவு. 

நேற்றைய முன் தினம் எனக்கு வெளியூரில்
ஒரு பயிற்சி. அதற்கு புறப்படும் தயார் நிலையில் ஹோட்டல் அறையில் இருந்த சமயம் தான் அந்த தொலைபேசி அழைப்பு வந்தது. "சார் நமஸ்தே நான் கணேஷ் படவாய்க் பண்டாராவில் இருந்து பேசுகிறேன். பயிற்சி வகுப்பு தொடங்கும்
முன்பு நான் தான் அந்த பயிற்சி அறைக்கு முதலில் வந்தேன் என்று எனக்கு நீங்கள்ஒரு மேஜிக் பாகில் இருந்து பத்து ரூபாய் தந்தீர்கள், நினைவிருக்கிறதா?"

நிச்சயம் தினம் தினம் ஒருவருக்கு  கொடுத்த படியால் எனக்கு அவர் யார் என்று புரியவில்லை. இருப்பினும், "ஆம் சொல்லுங்கள் ஏதேனும் நல்ல செய்தி உண்டா?" என்று கேட்டேன். பதிலுக்கு அவர் "உங்கள் வாயில் நெய் மற்றும் சர்க்கரை போட வேண்டும்
சார், நீங்கள் சொன்னபடி அந்த ரூபாய் நோட்டை நான் எனது மனைவியிடம் கொடுத்தேன். நானும் அவரும் தினமும் இந்த ரூபாய் பல லட்சங்களாக மாற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தோம். அது பலித்து விட்டது என்று சொல்லுகிற சமயம்  அவர் அங்கே நா தழுதழுக்க உணர்ச்சி வசப்பட்டு பேசுவதை என்னால் உணர முடிந்தது, தங்களுக்கு எப்படி நன்றி சொல்லுவது என்றே தெரியவில்லை" என்றார்.

நான், "என்ன ஏதாவது உங்களுக்கு பூர்வீக சொத்து பணம் கிடைத்து விட்டதா?" என்று கேட்டேன். பதிலுக்கு அவர் இன்னும் உணர்ச்சி வசப்பட்டு, " இல்லை சார், எனது மகன் மும்பையில் மேற்படிப்பு படித்துக் கொண்டு இருந்தான், இப்போது அவனுக்கு மாதம் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் சம்பளத்திற்கு வேலை கிடைத்துள்ளது, இது தான் எங்களது பிரார்த்தனை. அது பலித்து விட்டது. அவன் தானே எங்கள் சொத்து. அவன் மூலம் நாங்கள் செல்வந்தர் ஆகி விட்டோம். அதற்கு உங்கள் வாக்கு மிக முக்கிய காரணம், மிக்க நன்றி சார்" என்றார்.

எனக்கு என்ன சொல்லுவது என்றே 
தெரியவில்லை.நான் சொன்னேன், "நான் ஒவ்வொரு முறையும்  ஒருவருக்கு இந்த மேஜிக் பையில் இருந்து பணம் கொடுக்கும் போதும் இதைச் சொல்லித் தான் கொடுப்பேன். நானும் மனதார வேண்டிக் கொள்ளுவேன். ஆனால் சிலர் அதனை பெரிதாக நினைக்க மாட்டார்கள். ஆனால் நீங்கள் உண்மையில் அதனை மனதில் முழுமையாக நம்பி உங்கள் மனைவியோடு சேர்ந்து பிரார்த்தனை செய்து இருக்கிறீர்கள். இது உங்கள் நம்பிக்கைக்கு கடவுள் தந்த பரிசு. வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் மகனுக்கும்" என்றேன். 

கடந்த திங்கள்கிழமை அன்றும் ஒருவருக்கு அப்படி அந்த மேஜிக் பையில் இருந்து 20 ரூபாய் கொடுத்தேன். அப்போது காலை எனக்கு வந்த நபரின் அனுபவத்தை சொல்லி விட்டுக் கொடுத்தேன். உடனே அந்த நபர் மீண்டும் பாக்கெட்டில் வைத்த அந்த ரூபாய் நோட்டை வெளியே எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டார். 

எல்லாமே நம்பிக்கை தான்.  தருவதற்கு இறைவன் காத்துக் கிடக்கிறான். ஆனால் பெறுகிற மனிதனுக்கு அவன் மீது நம்பிக்கை வேண்டும். பெற்ற பிறகு அதற்குரிய நன்றியுணர்வு வேண்டும். அப்போது 'அவன்'  இன்னும் கொடுப்பான். 

No comments:

Post a Comment