Saturday, May 9, 2020

பாரதியும் நல்லுறுதி வாக்கியங்களும்


பாரதியும் நல்லுறுதி வாக்கியங்களும்

பாலசாண்டில்யன்

ஓர் உறுதியான சொல், சொற்றொடர் அல்லது வாக்கியம் ஓர் அடிப்படை கூற்றின் பிரதிபலிப்பாகும். அப்படிப்பட்ட உறுதியான வாக்கியத்தை மீண்டும் மீண்டும் சொல்லச் சொல்ல அது நமது ஆழ்மனதில் பதிந்து, பின்னர் அது நடந்தேறுகிறது என்று பல மனவியல் நிபுணர்கள் புகல்கிறார்கள்.

"நான் ஆரோக்கியமாக இருக்கிறேன், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நான் செல்வச் செழிப்புடன் இருக்கிறேன்" இப்படி தினம் தினம் சொல்லுங்கள். அவை அப்படியே நடக்கும் என்று புத்தர் உட்பட பலர் சொல்லி இருக்கிறார்கள்.

திருவள்ளுவர் கூட : "வெள்ளத்தனைய மலர்நீட்டம்  மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு"  
என்று  சொன்னார்.
அதன் பொருள் : நீர்ப்பூக்களின் அடிக்காம்பின் நீளம் நீரின் அளவே. அது போல மக்களின் உயர்வும் அவர்களின் மன ஊக்கத்தின் அளவே.

"யத் பாவம் தத் பவதி" என்று உபநிஷதம் சொல்லுகிறது. அதன் 
பொருள் : உங்கள் எண்ணங்கள் உங்கள் நடத்தையை பாதிக்கும் மற்றும் உங்கள் நடத்தை உங்கள் தன்மையைப் பாதிக்கும்.என்பதே ஆகும்.

இத்தகைய பொருள் பதியும் பாடல்களை முழுமையான பாடல்களாகவும், சில பாடல் வரிகளாகவும் மகாகவி பாரதியார் பல இடங்களில் எழுதி உள்ளது அவர் எத்தகைய நேர்மறை எண்ணம் மிகுந்தவராக இருந்திருக்கிறார் என்பதற்கு சான்றாக விளங்குகிறது.

இதே போன்ற கருத்துக்களை தமது கவிதைகள் தாண்டி தமது கட்டுரைகளிலும் பாரதி எழுதி இருப்பதைக் காண முடிகிறது.

அப்படிப்பட்ட ஒரு சில கட்டுரை வரிகளை இங்கே கண்டு தெளியுங்கள் :

தனது உள்ளத்தில் இன்ன இன்ன எண்ணங்களைத்தான் வளரவிட வேண்டும்; இன்ன இன்ன எண்ணங்களை வளரவிடக்கூடாது என்று நிச்சயிக்கும் அதிகாரம் - திறமை - ஒவ்வொருவனுக்கும் இயற்கையிலேயே ஏற்பட்டிருக்கின்றது. இதை அனுபவத்துக்குக் கொண்டு வரும்போது ஆரம்பத்தில் சில கஷ்டங்கள் உண்டாகும். உன்னை எதிர்த்துச் சில விவகாரமான சிந்தனைகள் அறிவிற்குள் வந்து நுழைந்து கொண்டு, 'வெளியே பிடித்துத் தள்ளினாலும் போகமாட்டோம்' என்று பிடிவாதஞ் செய்யும்.

அங்ஙனம் சிறுமைக்கும் உரிய "எண்ணங்கள் உன் அறிவில் புகுந்து கொண்டு தொல்லைப் படுத்துமானால், நீ அவற்றை வெளியே தள்ளுவதில் நேராக வேலை செய்ய வேண்டாம். நீ அதைத் தள்ளத் தள்ள, அது அங்கே தான் இருக்கும். அதற்கு யுக்தி வேறு. நீ அந்த எண்ணத்திற்கு நேர்மாறான வேறொரு நல்ல சிந்தனையில் அறிவு செலுத்துக. அப்போது அந்த நல்ல சிந்தனை வந்து அறிவில் இருந்து கொள்ளும். உன்னைத் தொல்லைப்படுத்திய குட்டிச்சாத்தான் தானாகவே ஓடிப்போய் விடும்.” என்கிறான்.

வேத மந்திரங்களைப் போல பாரதி பாட்டிலும் சோகச் சுவை என்பது அறவே இருக்காது. எல்லாமே 'பாசிட்டிவ் திங்கிங்'  (Positive Thinking) என்று சொல்லக்கூடிய நேர்மறை எண்ணங்கள் கொண்ட பாடல்களாகவே இருக்கின்றன.

வேதத்தைச் சொன்னாலும் கேட்டாலும் எத்தனை சக்தி பிறக்குமோ அத்தனை சக்தி பாரதி பாட்டிலும் பிறக்கும். 

ஒருவர் நேர்முகத்தேர்வுக்கு, பரீட்சைக்கு அல்லது வங்கியில் கடன்பெற புறப்படுகிறார் என்றால் கீழ் வரும் பாரதி பாடல் வரிகளை சொல்லி விட்டுப் புறப்பட்டால் நிச்சயம் வெற்றி தான். அவை வேத மந்திரம் அல்லது கடவுள் துதி போலத்தான்.

"எடுத்த காரியம் யாவினும் வெற்றி , எங்கு நோக்கினும் வெற்றி மற்றாங்கே, விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி வேண்டினேன் எனக்கு அருளினள் காளி; தடுத்து நிற்பது தெய்வமதேனும் சாரும் மானுடம் ஆயினும்
அஃதைப் படுத்து மாய்ப்பள்  அருட்பெருங் காளி பாரில் வெற்றி எனக்குறுமாறே".
வேறொரு கட்டுரையில் பாரதி சொல்லுகிறான் :
நம்பிக்கை உண்டானால் வெற்றி உண்டு. அந்த நம்பிக்கையினமுக்கிய லக்ஷணம் என்னவென்றால் விடாமுயற்சி. மனத்திற்குள் நிலைத்த நம்பிக்கை இருந்தால் செய்கை தடைப்படுமா?முயற்சி தூங்குமா? இடுக்கண் பயமுறுத்துமா? உள்ளம் சோருமா? ராமானுஜர் சோழநாட்டிலிருந்து போகும் காலத்தில் தம்பின்னே தம்மைப்பிடித்துச் செல்லும்பொருட்டு, குதிரைப்படை வருகிறது என்று கேள்விப்பட்டபொழுது, தம்முடன் வந்த சிஷ்யர்களிடம் சொல்லிய மந்திரம் நல்ல மந்திரம்:

  'எனது கோல் ஆடும்பொழுது எமனும் கிட்ட வரமாட்டான்' என்று சொன்னார்.அதற்குப் பெயர் தான் நம்பிக்கை.

''கொடுமை செய்யும் கூற்றமும்
என்கோலாடி குறுகப் பெறா''.

நம்பிக்கையின் மறுபெயர் பாரதி என்றால் மிகையாகாது.
மனிதனுக்கு இன்பம் துன்பம் இரண்டும் மாறி மாறித்தான் வருகிறது. அதனை பாரதி சொல்லும் பொழுது,

“எதைத் தொட்டாலும் இன்பமும் துன்பமும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் நாம் "அறிவினாலே பொருள்களின் துன்பத்தைத் தள்ளி இன்பத்தை எடுத்துக் கொள்ளலாம். தண்ணீர், குளித்தால் இன்பம்; குடித்தால் இன்பம்; தீ, குளிர் காய்ந்தால் இன்பம்; பார்த்தாலே இன்பம்; மண், இதன்விளைவுகளிலே பெரும்பான்மை இன்பம்,இதன் தாங்குதல் இன்பம்; காற்று இதைத் தீண்டினால் இன்பம்; மூச்சிலே கொண்டால் இன்பம்; உயிர்களுடனே பழகினால் இன்பம்; மனிதரின் உறவிலே அன்பு இருந்தால் இன்பக் கட்டி. பின்னும் இவ்வுலகத்தில், உண்ணுதல் இன்பம். உழைத்தல் இன்பம்; உறங்கல் இன்பம்; ஆடுதல் இன்பம்; கற்றல், கேட்டல், பாடுதல், எண்ணுதல் அறிதல்-எல்லாம் இன்பந்தான்.
இன்பங்களெல்லாம் துன்பங்களுடனே கலந்திருக்கின்றன.
துன்பங்களை அறிவினால் வெட்டி எறிந்து விட்டு இன்பங்களை மாத்திரம் சுவை கொள்ளவேண்டுமென்று ஜீவன் விரும்புகிறது. துன்பங்களை வெட்டிஎறியத் திறமைகொண்ட அறிவும் உறுதியும் வேண்டுமானால்,அது எளிதில் முடிகிற காரியமாகத் தோன்றவில்லை. பெரியபெரிய கஷ்டங்கள் பட்டபிறகுதான், சிறிய உண்மைகள்புலப்படுகின்றன. நம்மைச்சுற்றி இன்பக் கோட்டைகள் கட்டிக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொருவனுக்கும் இருக்கிறது.

மஹத்தான அறிவு வேண்டும். அழியாத நெஞ்சுறுதி வேண்டும். கல்விகள் வேண்டும். கீர்த்திகள் வேண்டும். செல்வங்கள் வேண்டும். சூழ்ந்திருக்கும் ஊரார் தேசத்தார் உலகத்தார் எல்லோரும் இன்பத்துடன் வாழும் படி நாம் செய்யவேண்டும். நல்லாசைகள் பெரிது பெரிதாக வைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஆசைகள நிறைவேற வேண்டுமானால், பலமான அடிப்படை போட்டு மெல்ல மெல்லக் கட்டிக்கொண்டு வரவேண்டும். நிலை கொண்ட இன்பங்களை விரைவிலே உண்டாக்குதல் சாத்தியமில்லை. ஏழையாக இருப்பவன் பெரிய செல்வனாக வேண்டுமானால் பல வருஷங்கள் ஆகின்றன. கல்வியில்லாதவர் கற்றுத்தேறப் பல வருஷங்கள் ஆகின்றன. உலகத் தொழில்களிலே தேர்ச்சியடைய வேண்டுமானால் அதற்குக் "காலம் வேண்டும். ஆத்ம ஞானம் பெறுவதற்குக் காலம் வேண்டும். “என்கிறான் 

மனிதனுக்கு நல்ல எண்ணங்கள் பெருகிட தினமும் காலையில் மந்திரம் போலச் சொல்ல வேண்டிய பாரதி பாடல் வரிகள் :

"எண்ணிய முடிதல் வேண்டும் 
நல்லவே எண்ணல் வேண்டும் 
திண்ணிய நெஞ்சம் வேண்டும் 
தெளிந்த நல்லறிவு வேண்டும் 
பண்ணிய பாவம் எல்லாம் 
பரிதி முன் பனியே போலே 
நண்ணிய நின்முன் இங்கு 
நசித்திடல் வேண்டும் அன்னாய் "

அதே போல தினம் தினம் சொல்லிப் பழக வேண்டிய ஒரு நல்லுறுதிப் பாடல் உண்டென்றால் அது இது தான் (கண்ணாடி முன் நின்று நம்மைப் பார்த்தவாறே சொல்ல வேண்டும் என்பார்கள் சிலர்):

"ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா 
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா ".

மனக்கஷ்டம் வராதவர் யார் சொல்லுங்கள். அப்படியான மனக்கஷ்டங்கள் வரும் போது, அவை நீங்க வேண்டும் என்று நாம் சொல்ல வேண்டிய பாரதி பாடல் வரிகள் :

"ஓம் சக்தி சக்தி சக்தி என்று சொல்லு - கெட்ட 
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு;
சக்தி சக்தி சக்தி என்று சொல்லி - அவள் 
சந்நிதியிலே தொழுது நில்லு"

பயம் கொள்ளுவது மனித இயல்பு தானே? மரண பயம் தான் மிகப்பெரிய பயம் என்று சொல்லுவார்கள். நோயை விடக் கொடுமையானது பாழும் பயம் தான். அப்படிப்பட்ட பயம் முற்றிலும் விஷம் நீங்கியது போல மனதில் இருந்து நீங்க இதோ ஒரு பாரதி பாடல், அறிய ஆவலா ?

"அச்சமில்லை அமுங்குதல் இல்லை 
நடுங்குதல் இல்லை நாணுதல் இல்லை 
பாவம் இல்லை பதுங்குதல் இல்லை 
ஏது நேரினும் இடர்ப்பட மாட்டோம் 
அண்டம் சிதறினால் அஞ்சமாட்டோம் 
யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்"

அடுத்த பாடல் இதே நோக்கில்,

"ஆன்ம ஒளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க்கு அச்சமுண்டோ - மனமே தேன் மடை இங்கு திறந்தது கண்டு தேக்கித் திரிவமடா"

இளங்கன்று பயம் அறியாது என்று ஒரு பக்கம் சொன்னாலும் நிச்சயம் அவர்களுக்கும் சில பயங்களை ஆழ்மனதில் இறக்கி வைத்தது நாம் தானே? அப்படி அவர்களுக்கு நாம் சொல்லித்தர வேண்டிய பாரதி மந்திரம் இதோ :

"துன்பம் நெருங்கி வந்த போதும் - நாம் 
சோர்ந்து விடல் ஆகாது பாப்பா !
அன்பு மிகுந்த தெய்வம் உண்டு - துன்பம் 
அத்தனையும் போக்கி விடும் பாப்பா" 

- இந்த வரிகளைப் பாடிய பிறகு எந்த குழந்தைக்கு வரும் பயம் ?


"ஜயமுண்டு பயமில்லை மனமே - இந்த 
ஜன்மத்தி லேவிடு தலையுண்டு நிலையுண்டு 
பயனுண்டு பக்தியி னாலே - நெஞ்சிற் 
பதிவுற்ற குலசக்தி சரணுண்டு பகையில்லை"
இந்த வரிகளை மனனம் செய்து சொன்னால் ஜீவன் முக்தி கிடைக்கும் என்று சொல்லுவர் அறிஞர்.

தனது சீரிய எண்ணத்தால் மானுடத்தை சிந்திக்க வைத்த மாகவியை அவன் சொல்லி வைத்துப் போன மந்திரங்களை எத்தனை பக்கங்கள் எழுதிச் சொன்னாலும் மனம் திருப்தி அடையாது.

இந்தக் காலத்தின் "ஆல் இஸ் வெல்" போன்ற பல நல்லுறுதி மந்திரங்கள் அடங்கிய புதையல் தான் பாரதி பாடல்கள்.
சொல்லிப் பார்த்திட பலன் பல பல்கிப் பெருகும். நீங்களும் சொல்லித் தான் பாருங்களேன், இது வரை சொல்லவில்லை என்றால்.


நிறைவாக மனம் தளரும் போது நாம் சொல்ல வேண்டிய மந்திரம் ஒன்று உண்டு

"வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது 
வாழ்வுக்கு நேராமோ ? நன்னெஞ்சே."

அன்றாடம் பாரதி வரிகள் சொல்லி அல்லல் நீக்குவோம்.
அவை பாடல் வரிகள் அல்ல. மாயம் செய்யும் மந்திரங்கள்.


No comments:

Post a Comment