Wednesday, May 13, 2020

கரோனா விநோதங்கள்


கரோனா விநோதங்கள்
- டாக்டர் பாலசாண்டில்யன்
மனநல ஆலோசகர்

காற்று புகாத இடத்தில் கூட கரோனா புகும். ஏனெனில் அது நுண்ணிய உயிர்க்கொல்லிக் கிருமி. இந்த கிருமியின் அட்டகாசம் உலகெங்கும் நடக்கும் போது இதனை ஒரு பொருளாதார யுத்தம் என்று உலகம் அறிவித்தது . மக்கள் அனைவரின் மனதிலுமே ஆரோக்கியம் முக்கியமா ? ஐஸ்வரியம் முக்கியமா ? என்ற அகவிவாதம் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது.

சுமார்12 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பார்மா நிறுவனங்களுக்கு ஆங்கில மருந்துகள் விற்பனை இல்லை என்பதால் நஷ்டம் என்று சொல்லப்படுகிறது. நாளொன்றுக்கு குறைந்தது பத்து அறுவை சிகிச்சையாவது செய்து வந்த பல மருத்துவமனைகளில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. 100 முதல் 500 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைகள், ஹோட்டல்கள் எல்லாமே காலியாகக் கிடக்கின்றன சுமார் இரண்டு மாதங்களாக.

இடுகாடு, சுடுகாடு இவற்றிலும் எண்ணிக்கை குறைந்து போனது. 100 வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் இப்படி சாலைவழி, வான்வழி, ரயில்வழிப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது

எப்போதுமே மிகவும் மக்கள்தொகை நிறைந்து இருக்கும் மால்கள், உணவகங்கள், பார்ட்டி ஹால்கள், விமான நிலையங்கள், அழகு நிலையங்கள், திரையரங்கங்கள், ஜவுளி மற்றும் நகைக்கடைகள் எல்லாமே முடங்கிப் போய் பல கோடி ரூபாய் வர்த்தகம் நின்று போனது.

பங்குச்சந்தை, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வணிகம், மொபைல், கோடைகாலங்களில் விற்பனை ஆகும் குளிர் சாதனங்கள், ஆளின்றி கிடைக்கும் கடற்கரை, கோடை வாசஸ்தலங்கள், மூடியே கிடக்கும் வழிபாட்டுத் தலங்கள் (எல்லா மதத்தினருக்கும்), இப்படி இந்த வகையில் ஏற்பட்ட நஷ்டங்கள் கஷ்டங்கள் ஏமாற்றங்கள் இழப்புகள் இன்னும் சரியாகக் கணக்கிடப்படவில்லை.

மகிழ்வான நிகழ்வு திருமணம், சோகமான நிகழ்வு மரணம் இரண்டிலுமே அதிகபட்சம் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். குறிப்பாக திருமணங்களில் எல்லோரின் வாயிலுமே  (மாப்பிள்ளை மணப்பெண் உட்பட) முகக்கவசம் இருந்தது. பன்னீர் தெளிப்பதற்கு பதில் கை சுத்தம் செய்ய கிருமிநாசினி  தெளிக்கப்பட்டது. கிளம்பும் போது அனைவர்க்கும் பல வீடுகளில் அரிசி, பருப்பு பாக்கெட்டுகள் தாம்பூலமாக வழங்கப்பட்டன.

இந்தக்  கரோனா காலத்தில் பிறந்த ஓர் இரட்டைக் குழந்தைகளுக்கு 'கோவிட்' என்றும் 'கொரோனா' என்றும் பெயர் வைத்துருக்கிறாரக்ள் ஒரு குடும்பத்தினர். இன்னொரு குடும்பத்தில் 'ஊரடங்கு' என்று ஒரு குழந்தைக்கு பெயர் வைத்துள்ளனர்.

கேரளாவில் சிலர் கைபேசி மூலம் திருமணம் (மணமகனும் மணமகளும் சந்திக்காமலே) செய்து கொண்டனர். லட்சக்கணக்கான மக்கள் பல கிலோமீட்டர் தூரம் நடந்தே தமது சொந்த ஊருக்கு பயணித்தனர்

பக்கத்து வீட்டினரோடு கூட பேச மக்கள் பயந்து போயினர். விருந்தினர்கள் யாருமே வரவில்லை. பெரும்பாலான வீட்டில் ஆண்கள் சமையல் அறையில் இருந்தார்கள். மொட்டை மாடி நடைபயிலும் பூங்கா ஆகியது

யாரும் ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கவில்லை, கட்டி அணைக்கவில்லை. வெளிநாடுகளில் இருந்து வந்தவர் கணவரே ஆனாலும் அவர் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டார். பணம் இருப்பவர்கள் செலவு செய்ய முடியாது தவித்தனர். பணம் இல்லாதவர் ஈட்ட முடியாது தவித்தனர். நண்பர்களிடம் நேரம் இருந்தது. சந்திக்க முடியவில்லை. குழந்தைகளை யாரும் படி என்று சொல்லவில்லை. சிலருக்கு பகல் இரவு தெரியவில்லை. சாதாரண மனிதர் கூட சாமியார் அளவிற்கு தாடி வைத்துக்கொண்டவர் ஆயினர்.

நேரம் போகவில்லை என்றே மக்கள் அதிகம் சொன்னார்கள். தொலைக்காட்சியில் அழுகை, கொலை, கொள்ளை சீரியல்கள் ஓடவில்லை.

நீதிமன்றங்கள் இயங்கவில்லை. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவில்லை. மக்கள் ஆன்லைன் வணிகம் மூலமே பொருள் வாங்குவது, பணப்பரிவர்த்தனை செய்தனர்.செயின் பறி, மொபைல் பறி, கொலை, என்ற செய்தி செய்தித்தாள்களில் வராத அளவிற்கு குற்றங்கள் குறைந்து போயின.

பிளம்பர், எலெக்ட்ரிசியன், பெயிண்டர் எல்லோருமே காய் கறி பழம் விற்பவர்களாக மாறினர். மக்கள் அதிகபட்சம் சைவமே சாப்பிட்டார்கள்

சில ஆட்டோ நிறுவனங்கள் வெண்டிலேட்டர் தயாரிப்பில் ஈடுபட்டனர். சில ஷாம்பூ நிறுவனங்கள் கிருமிநாசினி தயாரிப்பில் ஈடுபட்டன. சில ஜவுளி நிறுவனங்கள் முகக்கவசம் தயார் செய்தன.தீயணைப்பு வாகனங்கள் கிருமிநாசினி தெளிக்க பயன்படுத்தப்பட்டன. தினம் தினம் வந்து நீங்கள் நலமா என்று அரசு ஊழியர்கள் விசாரித்தனர்.

கோடிக்கணக்கில் பணம் கொழிக்கும் விளையாட்டுக்கள் (ஐபிஎல் மற்றும் ஒலிம்பிக்ஸ்) ரத்து செய்யப்பட்டன. அதனால் வரும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் வராமல் போனதுபிள்ளைகள் ஒன்பது வகுப்பு வரை தேர்வு எழுதாமலே பாஸ் ஆயினர். கோடை வகுப்புக்கு செல்ல எந்த பெற்றோரும் பிள்ளைகளை நிர்பந்திக்கவில்லை.

ரயில் வண்டிகள் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டன. பேருந்து நிலையங்கள் காய்கறி மண்டிகளாக மாறின. நகரத்துப் பிள்ளைகள் விமானம் பறக்காததால், வண்ணத்துப்பூச்சி மற்றும் பறவைகள் இவற்றை ஆச்சரியமாகப் பார்த்தனர்.

மருத்துவர் பெயரை யாரும் நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் கனிவாக கவனித்துக் கொண்ட செவிலியர்களின் பெயர்களை நினைவில் வைத்துக் கொண்டனர். பெரும்பாலும் மருத்துவர்கள் கடவுளாக பார்க்கப்பட்டனர்.

பிரதமர் மற்றும் அனைத்து மாநில முதல்வர்களும் எப்போதும் இல்லாது அடிக்கடி பேசிக் கொண்டனர். பிரதமர் அடிக்கடி திரையில் தோன்றி மக்களிடம் பேசினார். கடந்த எல்லா நாட்களுமே வேறெந்த பரபரப்பும் இல்லாததால் அனைத்து ஊடக விவாதங்களும் கொரோனா பற்றியே இருந்தன

தமிழ் பேசும் மக்கள் கூட தெலுங்கு, மலையாளம் என்று மொழி பேதம் இன்றி திரைப்படங்கள் டிவியில் பார்த்தனர். புதிய கவிஞர்கள் உருவாகி முகநூல் நிரப்பினர்.

மக்கள் மலைக்கு மாலை போட்டது போல வெற்றிலை பாக்கு, சிகரெட், மது எதுவுமே கொள்ளாமல் 40 க்கும் மேற்பட்ட நாட்கள் கழித்தனர்.

காவல்துறையினர் பாட்டு இயற்றி வீதியில் பாடிக் காட்டினார்கள். சிலர் பொதுமக்களுக்கு பரீட்சை நடத்தினர். சிலர் உடற்பயிற்சி நடத்தினர்

நிறைய பயிற்சி வகுப்புகள் இணையதளம் மூலமே நடந்தன. வீட்டில் இருந்து வேலை என்பது பல நிறுவனங்கள் கடைபிடித்தன. செக்யூரிட்டி ஊழியர்கள் இல்லாமல் பல செல்வந்தர் வீடுகள், மாபெரும் கடைகள் எல்லாம் மூடிக் கிடந்தன

இடையே திறந்த மதுக்கடைகளில் அடையாள அட்டை பார்த்து, வயது அடிப்படையில் மதுபானம் விற்கப்பட்டன.

இன்னும் என்னென்ன விநோதங்கள் பாக்கி இருக்கிறதோ என்று பொறுத்திருந்து பார்ப்போம். விலகியிருந்து, வீட்டிலிருந்து இனி மக்கள் புதிய பழக்கங்களோடு வெளியே உலா வரப்போகின்றனர்.


No comments:

Post a Comment