Thursday, May 14, 2020

அர்த்தமுள்ள உறவுகள்

அர்த்தமுள்ள உறவுகள்
- முனைவர் பாலசாண்டில்யன்
மனநல ஆலோசகர்/மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர்
திரும்பிப் பார்க்கையில் நாம் விரும்பிப் பார்த்த சந்திப்புகள் மூலம் பல ஆயிரம் நபர்களை நாம் சந்தித்திருக்கக் கூடும், ஆனால் அவர்கள் இன்னும் நம்மோடு தொடர்பில் நட்பில் உறவில் இருக்கிறார்களா என்றால் விடை 'இல்லை' என்று தான் இருக்கும்.
பல தொடர்புகள் கடந்து போகும் அல்லது கடந்து போய் விட்ட உறவுகளாகவே இருக்கின்றன. ஒருவேளை நாம் ஓரிரு முறை மட்டும் அவர்களோடு தொடர்பில் இருந்து விட்டு பிறகு நமது வாழ்வில் அவர்களின் பங்களிப்பு பெரிதாக இல்லாத பொழுது அவர்களை மறந்திருக்கக் கூடும். மனதில் சிற்சில சிற்றலைகள் மட்டும் ஏற்படுத்தி விட்டு அவர்கள் நமது வாழ்வில் வந்தார் சென்றார் என்று ஆகிவிட்டார் எனலாம்.
அதே சமயம் வெகு சிலர் பல்லாண்டுகளாக நமது வாழ்வின் ஓர் அங்கமாக இருந்து இன்னும் கூட இருக்கிறார்கள். அவர்களோடு நாம் தொடர்ந்த தொடர்பில் இல்லாவிடினும், மீண்டும் தொடர்பு கொள்ளும் பொழுதெல்லாம் அந்த நட்பு உறவு உயிர்பெற்று விடுகிறது. தழைத்து ஓங்குகிறது என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது.
சிலர் தொழில்முறை நட்பு அல்லது உறவு தொடராது மற்றும் ஆரோக்கியமாக இருக்காது என்று சொல்லக்கூடும். எனது அனுபவம் வேறு. இன்றும் பல்லாண்டுகளாக தொழில் ரீதியாக தொடங்கிய சிறு தொடர்பு பின்னாளில் நல்ல நட்பாக நெஞ்சில் நிலைத்த உறவாக மாறிவிட்ட ஆனந்தம் என் மனதை இன்னும் நிரப்புகிறது.
கடந்து போகிற உறவு மற்றும் கடவுள் போல கூடவே துணை நிற்கும் உறவு என்று இருவிதமான உறவுகள் எல்லோருக்கும் உண்டு. நமது மனதை முழுமையாக திறந்து நட்பு பாராட்டி அன்பு நீர் வார்க்கும் முன்னரே மேம்போக்காக இருக்கும் போதே சில உறவுகள் முறிந்து போவதுண்டு. அவை தான் கடந்து போகும் உறவு என்பது. அப்படிப்பட்ட நண்பர்களோடு நாம் நமது உண்மை முகத்தை, சிரமங்களை, வெற்றிகளை, ரகசியங்களை பகிர்ந்து இருக்க மாட்டோம். அது ஒரு மேலோட்டமான உறவு மட்டுமே.
உண்மையான நட்பு அல்லது உறவு என்பது காலத்தை வெல்லும் ஒன்று. தினம் தினம் நேரில் சந்திக்காவிடினும், முகநூல், ஈமெயில், வாட்ஸ் அப் என்று ஏதோ ஒரு விதத்தில் அது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். அந்த உறவு என்பது நிபந்தனைகளற்ற எதிர்பார்ப்பற்ற அர்த்தமுள்ள உறவாக இருக்கும்.
நிறைய நண்பர்கள் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று நான் நினைத்ததுண்டு. ஏதோ ஓர் அற்ப காரணங்களுக்காக அவை முற்றிலுமே முறிந்து போன அனுபவமும் உண்டு. சிறு உரசல், சிறு புரிதலின்மை, இவைகளால் உறவு முற்றிலும் முறிந்து போன போது நான் வியந்து போய் இருக்கிறேன். இதற்கு நேர் மாறாக எவ்வளவோ தவறுகள் கோளாறுகள் புரிதலின்மைகள் இருந்த பொழுதும் சில நண்பர்கள் நமக்கான ஒரு இடத்தை அவர்கள் மனதில் அளித்து நம்மை உள்ளவாறே ஏற்றுக் கொண்டதால் தான் அந்த உறவு தப்பித்தது என்று என்னால் உறுதிப்பட சொல்ல முடியும்.
அவர்கள் நமது ஒவ்வொரு முயற்சியிலும் உடனிருந்து அழைக்காமல் வலிய வந்து உதவி நம்மை உயர்த்தியவர்கள் என்று சொல்லும் போதே மெய் சிலிர்க்கிறது.
சில நண்பர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக நம்மோடு ஒட்டிக் கொண்டு விட்டு அவர்களின் 'அந்த' ஒரு நோக்கம் நிறைவேறிய பின்னர் தானாகவே மெதுவாக பின்வாங்கி நம்மிடம் இருந்து விலகி விடுவார்கள். இவர்களையும் நமது நண்பர்கள் என்று பட்டியலில் சேர்ப்பது நிச்சயம் தவறு.
நமது வாழ்வியல் மதிப்பீடுகள், ஒத்த கருத்துக்கள், விருப்ப வெறுப்புகள், வாழ்க்கை முறையில் ஒற்றுமை, கண்ணோட்டங்களில் சமன்பாடு என்று ஏதோ ஒரு விதத்தில் நம்மோடு ஒத்துப் போவதால் தான் சிலர் கடைசி வரை நமது நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள்.
மேம்போக்கான சில உறவுகளை நெருக்கமான ஒன்று என்று தவறாக நான் புரிந்து கொண்டு பின்னர் உணர்ந்ததும் உண்டு. சில உறவுகள் அர்த்தமற்றவை, தேவையற்றவை என்று கருதியது தவறு என்று உணர்த்துவது போல நீங்கா இடம் பிடித்து இன்னும் தொடர்கிறது என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
சிலர் வெளியேறும் நோக்கோடு தான் நமது உள்ளத்தில் வந்தார்கள் என்பதை நமது உள்ளுணர்வே சில சமயம் உணர்த்தி விடும். உங்களுக்கும் அது நேர்ந்து இருக்கிறதா? நகமும் சதையும் ஆக நம்மோடு இரண்டற கலந்து நிற்கும் சில உறவுகளின் நட்புகளின் வலிமை மற்றும் உண்மைத்தன்மை புரிந்து கொண்டோம் என்று சொன்னால் நாம் ஒரு நாளும் அந்த நட்பை இழக்கத் துணிய மாட்டோம்.
சில உறவுகள் பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் கூட தளிர் போல வளர்ந்து மேம்படாத ஒன்றாக இருக்கும். அவற்றைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். சில உறவுகள் நாம் எதிர்பார்த்ததை விட ஆன்மீக வலிமை கொண்ட ஒன்றாக இருக்கும்.
எல்லா உறவுகளையும் நட்புகளையும் நம்மால் தக்க வைத்துக் கொண்டு கடைசி வரை பராமரிக்க முடிவதில்லை. கடந்து போகிற ரயில் சிநேகம் போன்ற நட்புகளை எண்ணி நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
கண்களைப் போல காக்க வேண்டிய சில உறவுகளை நட்புகளை வளர்த்து நிற்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அதே சமயம் காணாமல் போய் விட்ட உறவுகளை எண்ணி கவலை கொள்ளாமல் இருக்கும் உறவை உன்னதமாக போற்றிடுவோம். அர்த்தமுள்ள உறவுகளே வாழ்க்கையின் ஆதாரம். மீதமெல்லாம் சேதாரமே. மனதுக்கு தெரியும் உறவின் மகத்துவம். மனம் சொல்வதை சில நேரம் மௌனமாக இருந்து தான் கேட்க வேண்டும்.

No comments:

Post a Comment