Friday, July 2, 2021

நீங்கா நினைவலைகள் - 7

 நீங்கா நினைவலைகள் - 7

- பாலசாண்டில்யன் 


அப்போது எமெர்ஜென்சி சமயம். அரசு அலுவலங்களில் மிகுந்த கெடுபிடி. சில நேரம் அப்பா அவரது நண்பர் வீட்டில் திருச்சியில் தங்கி சரியான நேரத்திற்கு ஆபீஸ் போக வேண்டும் என்று தங்கி விடுவார். அந்த சமயம் நான் சமாளிக்க வேண்டியது எனது பாட்டிகளை மட்டுமே எனது லூட்டிகளை தொடர, வாழ்வை என்ஜாய் பண்ண.

பாட்டிக்கு நான் எப்போதும் செல்லம் தான். ஸ்கூல் போகும் போது பாக்கெட்டில் போட்டுக் கொண்டு போகிற வழியில் திங்க முறுக்கு, சீடை, கடலை மற்றும் பொட்டுக்கடலை உருண்டை  எல்லாம் செய்து தந்து விடுவார். இந்த பாட்டிகள் (மொத்தம் மூவர் - எனது அம்மாவின் அம்மா, அவரின் இரண்டு அக்காக்கள் - அதாவது பெரிய பாட்டி) சமையலே ரொம்ப வித்தியாசம். அழுகின வடுமாங்காய் பச்சடி, நெல்லி முள்ளி பச்சடி, மாம்பழம் முழுதாக போட்டு குழம்பு, அகத்திக்கீரை, மணத்தக்காளி கீரைக் கூட்டு, சுண்டைக்காய் வத்தக்குழம்பு, கொத்தவராங்கா வத்தல், மோர் மிளகாய், மாகாளிக்கிழங்கு,  சுண்டைக்காய் குழம்பு, வாழைத்தண்டு பொரியல், வாழைத்தண்டு மோர்க்கூட்டு, வாழைக்காய் பொடி, வாழைப்பூ உசிலி கறி, ஆரஞ்சு பழத்தோலி போட்ட குழம்பு, அங்காயப்பொடி, தேங்காய் பொடி, எலுமிச்சை ரசம் இப்படி பகலில் அசத்துவார்கள். இதெல்லாம் நான் சென்னையில் இருந்த பொழுது சாப்பிட்டதில்லை. எல்லாமே படு ருசியாக இருக்கும். இவற்றில் பல அயிட்டங்கள் இப்போது பலருக்கு செய்யத் தெரியாது. ஹோட்டல்களிலும் கிடைக்காது.

அதே போல இரவு உணவுக்கு சத்துமா உருண்டை, மோர்க்கூழு, கல்லு கொழுக்கட்டை, மோர்க்கூழு புளி இஞ்சி, அரிசி உப்புமா பிடி கொழுக்கட்டை, அடை அச்சு வெல்லம், வெல்ல தோசை, புளிமா, புளிப்பொங்கல், புளி அவல், வெல்லவல் , குணுக்கு, கோதுமை தோசை, இன்னும் என்னென்னமோ - அதெல்லாம் அவ்வளவு இப்போது நினைவுக்கு வரவில்லை. குழந்தைகளுக்கு டேஸ்டேக்கு தான் இந்த டிபன் ஐட்டம்கள். மற்றபடி அவர்கள் தினமுமே ஒரு பொழுது என்பதால் அவர்களுக்கான உணவு அது. எங்களுக்கு எப்போதும் போல சாதம் தான். சாப்பிட கொல்லையில் இருந்து பெரிய பெரிய பாதாம் இலை, இல்லை என்றால் வாழை இலை, அதுவும் இல்லை என்றால் குச்சி வைத்துச் சேர்த்த மந்தார இலை. அந்த மாதிரி இலையில் சாப்பிட்டால் இலையின் ருசியும் சேர்ந்து கொள்ளும். நினைத்தால் இன்றும் மணக்கிறது நெஞ்சம். 

எதிர் வீட்டு ரகு அண்ணா, கல்யாண் அண்ணா, கிட்டு என்கிற க்ரிஷ் ஆகியோர் ரேடியோவில் கிரிக்கெட் கமென்டரி கேட்பர். ராமமூர்த்தி, அப்துல் ஜப்பார், என்று அசத்தலாக இருக்கும். கேட்கும் போதே பந்து எப்படி நகர்கிறது என்று உணர முடியும். நான் போகவில்லை என்றால் அவரகளே என்னை கூப்பிட்டு அவர்களோடு உட்கார வைப்பர். அவர்கள் எல்லோரும் ஏற்கனவே பட்டப்படிப்பு முடித்தவர்கள். தமது பண்ணையின் விவசாய மேற்பார்வை செய்தார்கள். இதெல்லாம் எனக்கு எங்கே புரிந்தது? அவர்கள் எப்படி ஜாலியாக விளையாடுகிறார்கள் இருக்கிறார்கள் என்பதை மட்டுமே பார்த்தேன் நான். 

பாட்டியும் அம்மாவும் 'படி படி' என்று அலறுவார்கள். நான் "எல்லாம் எனக்குத் தெரியும்" என்பேன். வாசல் திண்ணை கதவைப் பூட்டி அதன் சாவியை தனது இடுப்பில் சொருகி வைத்திருப்பார் சுப்பாளு பாட்டி. அதை எப்படியாவது எடுக்க நான் அவர் மீது பட்டு விட்டால் அவர் பாவம் மீண்டும் குளிக்க வேண்டும். அதனால், நான் பக்கத்து வீட்டு குட்டி மண் சுவர் ஏறிக் குதித்து கொல்லைப்புறம் வழியாக மணி அய்யர் வீட்டு வாசலில் அத்துமீறி நுழைந்து விளையாடப் போய் விடுவேன். இதைப் பார்த்து எனது தம்பி தானும் வருவேன் என்று அடம் பிடித்து அழுவான். வீடே அமர்க்களப்படும். அதெல்லாம் எனது காதில் விழுந்தாலும் விழாது. நான் எனது காரியங்களில் மிக கவனமாக இருப்பேன்.

ஒரு நாள் எதிர்வீட்டு கல்யாண் அண்ணா என்னை அழைத்து அருகில் அமர்த்தி "ஏண்டா நீ இப்போது பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்று வந்து விட்டாய், எங்களைப் பார் நாங்கள் நல்ல மார்க் எடுத்து பட்டம் முடித்து விட்டோம். ராமமூர்த்தி அண்ணா எம் ஏ கூட முடித்து விட்டான். நீயும் அப்படிப் படிக்க வேண்டாமா? உன்னுடைய அப்பா உன்னை நினைத்து மிகவும் கவலைப் படுகிறார்" என்று காதில் வேதம் ஓதினார்.  அதே போல எனது செல்ல மாமா மற்றும் அவரது மனைவியும் எனக்கு புத்தி சொன்னார்கள். டியூஷன் வகுப்பில் பாலு சாரும் இதே போக்கில் பேசினார். ஓ மை காட் - என் அப்பா இவ்வளவு அண்டர் கிரௌண்ட் வேலை பார்த்துள்ளாரே என்று வியந்து போனேன். அப்போது தான் எனக்கு என்னுடைய எதிர்காலம் கண்ணில் தெரிய ஆரம்பித்தது. நான் என்னுடைய நண்பர் நரசிம்மனிடம் நிறைய சந்தேகங்கள் கேட்டு சற்று தெளிவு பெற ஆரம்பித்தேன். அவர் படிப்பில் படு சுட்டி. நரசிம்மன் வீட்டுக்கு வெளியே பெரிய கிரௌண்ட். அங்கே தான் நான் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டேன். ஆனால் வீட்டில் ஒரே ஒரு சைக்கிள். அப்பா தான் ஓட்டுவார். அதை விட கொடுமை, எனக்கு பெடல் எட்டாது. குரங்கு பெடல் போட அப்பா அனுமதிக்க மாட்டார். சைக்கிள் துடைப்பது மட்டும் என் வேலை. அதே போல அப்பா செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸில் தன்னார்வ சேவை செய்வார். அன்று அவருக்கு சம்பளத்தோடு விடுப்பு கிடைக்கும். அவரை பழனி, மதுரை என்று கோவில் பணிகளுக்கு அனுப்புவார்கள். அவர் போடுகிற காக்கி ட்ரெஸ்ஸில் அந்த ஸ்டார் பாட்ஜ் மாட்டுவது, அதனை போலிஷ் செய்வது எல்லாமே எனக்கு மிகவும் பிடித்த வேலை.

அப்பாவுக்கு மீண்டும் சென்னை மாற்றல் ஆகி விடும். நான் பி யு சி படிக்க சென்னை தான் போய் ஆக வேண்டும் என்ற செய்தியும் வெளியாயிற்று. சூடு பிடித்தது எனக்குள். யார் விளையாடக் கூப்பிட்டாலும் போவதில்லை என்று முடிவெடுத்து படிப்பில் முழு கவனம் செலுத்தினேன். ஆனால் அது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போலத்தான் இருந்தது. அது என்னை மீறிய விஷயமாக இருந்தது. வீட்டு திண்ணை கதவு திறந்தே இருந்தாலும் நான் வெளியே போகவில்லையே. எனது நண்பர்களும் விசில் அடித்துக் கூப்பிடுவார்கள். ஒரு முறை மட்டும் என்னுடைய பழைய பேய் எனக்குள் புகுந்து எனது பள்ளிக்கூட கிரௌண்டில் கிரிக்கெட் மாட்ச் விளையாடப் போனேன். பக்கத்து மணத்தட்டை அஹ்ரகாரத்திற்கும் எங்களுக்கும் போட்டி. நான் ஸ்லோ ஆப் ஸ்பின் போல சுமார் பௌலிங் போடுவேன். கிலோசிங் பீல்டிங் சுமாராக செய்வேன். அந்த மாட்சில் மறக்க முடியாத ஒரு காட்ச் பிடித்தேன். ஒரு விக்கெட் எடுத்தேன். பனிரெண்டு ரன் வேறு எடுத்தேன். அது எனது முதல் மற்றும் கடைசி மேட்ச். மறக்க முடியாத ஒன்று. 

பிறகு வெகுநாட்களுக்குப் பிறகு என் வீட்டு வாசலில் சில பிள்ளைகள் விளையாடிக் கொண்டு இருந்தனர். அவர்களிடம் கெஞ்சிக் கேட்டு ஒரு ஓவர் காஜ் அடித்தேன். ஒரு ஓவர் பௌலிங் போட்டேன். இரண்டு விக்கெட் வேறு எடுத்தேன்.  எனக்குப் பிடித்த விளையாட்டு கேரம்போர்ட் மற்றும் செஸ். இதெல்லாம் கல்யாண் அண்ணா, ரகு அண்ணாவிடம் கற்றவை.  

குளித்தலை வைகைநல்லூர் வீட்டுப் பின் தோட்டத்தில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் வீட்டில் இருந்த தென்னை மரத்தில் தேங்காய் அடிக்கடி திருட்டுப் போகும். எனது பாட்டி அதற்கு முள்வேலி கட்டி பாதுகாப்பார். இது அக்கம்பக்கத்தில் கூட இருக்கும் கம்பிளைன்ட் தான். சில சமயம் வீட்டு மொட்டை மாடியில் இருந்து முத்தத்தில் சில கற்கள் பாதி ராத்திரியில் வீசுவார்கள். நான் மற்றும் எனது தம்பி தங்கைகள் நடுங்கித் தான் போவோம்.  

மிக முக்கியமாக, இதை தவிர்க்க முடியுமா ? பப்ளிக் எக்ஸாம் என்ன ஆயிற்று ? அதில் என்னுடைய பவுசு என்ன என்று நீங்கள் தெரிந்து கொள்ள ஒருவேளை ஆவலாக இருக்கலாம்.  இருந்தாலும் ஒரு நாள் காத்திருந்து தான் ஆக வேண்டும்.  

நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும். 

No comments:

Post a Comment