Monday, November 29, 2021

கேள்விகள் ஆயிரம்

 

கேள்விகள் ஆயிரம் 

 

ரமேஷ் கஸ்பேகர் சென்னையின் மிகப்பெரியதொரு  நிறுவனத்தில் உயர் அதிகாரி. அவர் தமது அசிஸ்டெண்ட் ஆக வேலை பார்த்த கல்பனா எனும் தமிழ்ப் பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்தார். திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார்.

 

ரமேஷ் விடுமுறை எடுத்துக் கொண்டு திருச்சி கிளம்பினார். நேராக சென்று முறைப்படி  பெண் கேட்டார். கல்பனாவின் அம்மா (அப்பா இறந்து விட்டதால் அவர் தான் குடும்பத் தலைவி) மகளின் விருப்பம் கேட்டு திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார்

 

ரமேஷ் வீட்டில் கூட்டுக் குடும்பம் என்பதால் நிறைய பேர் இருந்தனர். வீட்டில் எல்லோரும் மராட்டி  மொழியில் பேசினர். கல்பனாவிற்கு  மொழி புரியாததால் பல சமயம் தன்னைப் பற்றி ஏதோ தப்பு தப்பாக பேசுவதாக யூகிக்க ஆரம்பித்தாள். அந்தக் கோபத்தை ஆபீசில் காட்ட ஆரம்பித்தாள். ரமேஷ் தனக்கு நேருகின்ற அவமானங்களை மாற்ற நினைத்து கல்பனாவை வேலையை விட்டு விட சொன்னார்.

 

கல்பனா சரி என்று அன்றே ராஜினாமா செய்தாள். சந்தோஷமாக வீடு சென்ற ரமேஷ் கல்பனாவைத் தேடினார். அவளுக்கு போன் போட்டார். கல்பனா அங்கு இருந்தால் தானே...அவள்  திருச்சி வந்து சேர்ந்தாள் அம்மா வீட்டிற்கு.

 

கோபத்தில் கிளம்பி வந்த கல்பனா மிகவும் கஷ்டங்களை சந்தித்தாள் .ரமேஷ் அடுத்த வாரமே திருச்சியில் வந்து நின்றார். கல்பனாவை தன்னுடன் வரும்படி எவ்வளவோ கெஞ்சிப் போராடிப் பார்த்தார். கல்பனாவின் ஒரே பதில் தனிக் குடித்தனம் வைப்பது பற்றி தான். பாரம்பரியக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்த ரமேஷ் செய்வது அறியாது தவித்தார். வந்த வழியே கிளம்பினார் எதுவும் சொல்லாமல்

 

சென்னை  திரும்பிய ரமேஷ் தனது குடும்ப சம்மதத்தோடு தனிக்குடித்தனம் வைக்க வீடு பார்த்தார். கல்பனாவும் வந்து சேர்ந்தாள். ஆனால் ரமேஷ் அவர் வீட்டிற்கு ஒரு போதும் போகக்கூடாது, தானும் வர மாட்டாள் என்று நிபந்தனை விதித்தாள். பெண் குழந்தை பிறந்தது. அவளைக் கொண்டு போய்க் கூட ரமேஷ் பெற்றோரிடம் காட்டக்கூடாது என்றாள்

 

போகப் போக கல்பனா - ரமேஷ் இடையில் நிறைய இடைவெளி ஆரம்பம் ஆனது. போன கால் நிற்குமா? மீண்டும் கல்பனா  குழந்தையுடன் திருச்சி கிளம்பி விட்டாள்.

 

திருச்சி வந்த சில நாட்களில் கல்பனா தனது தாயை இழந்து தனியள் ஆனாள்தனிக்குடும்பம் நடத்திய அவள் தினம் தினம் மனப் போராட்டத்துடன் வாழ்ந்தாள். மறுபடி இறங்கி வந்தார் ரமேஷ். கல்பனா ஏறிய பிடிவாதத்தில் இருந்து இறங்க மறுத்தாள்

 

ரமேஷ் சென்னையில் பெற்றோர் வீட்டுக்கு போகாமல் தனியாக வாழ்ந்தார்சிக்கல்கள் நிறைந்த நூற்கண்டு ஆனது அவர் வாழ்க்கை.

 

கல்பனாவின் மகள் சாந்தி வளர்ந்து யுவதி ஆனாள். அம்மாவை போலவே பிடிவாதக்காரிநிறைய கேள்விகள் கேட்டாள். கல்பனாவால் கற்பனை கூட செய்து முடியாத கேள்விகள்

 

இருக்கும் பதில்களை நெஞ்சுக்குள் முழுங்கினாள் கல்பனா. படித்து முடித்து கனடாவில் செட்டில் ஆவேன் என்று அடம் பிடித்தாள் சாந்தி. கேள்விக்குறி ஆனது கல்பனாவின் வாழ்க்கை

 

Thursday, November 25, 2021

தலைவன் இருக்கின்றானா?

 தலைவன் இருக்கின்றானா?

குறுங்கதை
- டாக்டர் பாலசாண்டில்யன்
சந்தைக்குப் போன செங்கமலம் எங்கு போனாள்? கோவிந்தன் தேடாத இடம் இல்லை. இரவுகள் பல தூங்காமல் தவித்தான். பேசிப் பேசி புலம்பினான் கோவிந்தன்.
ராமசாமி அறிவுரைப்படி ஊர்ப்பஞ்சாயத்து புகார் பெட்டியில் செங்கமலம் காணாது போன விவரம் கடிதமாய் போடப்பட்டது. தினமும் கோவிந்தன் ஆவலாய் நல்ல செய்தியை எதிர்பார்த்தான். அவன் எதிர்பார்ப்பு வீண்.
புதிய பஞ்சாயத்து தலைவர் தேர்வான செய்தி ஊரையே கலக்கியது.
கோவிந்தனுக்கு ஏதோ ஒரு நம்பிக்கை இலை மனதில் துளிர்த்தது. செங்கமலம் கிடைத்து விடுவாள். நிச்சயம் கிடைத்து விடுவாள். அவள் மீது உயிரையே வைத்திருந்தான். காதலித்து செய்து கொண்ட திருமணம் ஆயிற்றே...! இருவரும் கழித்த இனிமைப் பொழுதுகள் எண்ணிடலங்காது.
புதிய தலைவர் பதவியேற்ற மறுநாளே புகார்பெட்டியை திறந்து பார்க்க முடிவு செய்தார். பெட்டிக்குள் இருந்த மொத்தக் கடிதம் பத்து.
எல்லாமே கோவிந்தன் எழுதியது. ஒன்று செங்கமலம் காணாமால் போனது பற்றி. மீதமெல்லாம் புகார் பெட்டியைத் திறந்து உரிய நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்பது பற்றி...
கோவிந்தனின் ஏமாற்றம் தொடர்ந்தது. அவனின் கடிதங்கள் புதிய தலைவர் பார்வைக்கு வந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பாவம் ....அவனுக்குத் தெரியமா என்ன? செங்கமலத்தை (சிறை) வைத்திருப்பது புதிய தலைவர் தானென்று....?!

மஞ்சப்பை

 மஞ்சப்பை

குறுங்கதை
- டாக்டர் பாலசாண்டில்யன்
விழாக்கால தள்ளுபடி என்றால் இது தானோ ? உஸ்மான் ரோட்டில் ஒருவரை ஒருவர் முட்டி மோதித் தள்ளிக் கொண்டிருந்தனர். ஒரு பிரபல ஜவுளிக் கடையில் நுழையும் போது ராமுவைத் தடுத்தது அங்கு நின்றிருந்த செக்யூரிட்டி. பல மொழிகள் பேசும் மக்கள் உள்ளே போன வண்ணம் வெளியே வந்த வண்ணம் இருந்தனர்.
கையில் இருக்கும் பையை அந்த செக்யூரிட்டியிடம் கொடுத்து டோக்கன் வாங்க வேண்டும். ராமுவிற்கு அந்தப் பையை கொடுக்க தயக்கம். "கொடுங்க சார், எல்லோரும் கொடுக்கிறாங்க, உங்களுக்கென்ன ? உள்ளே இதை கொண்டு போகக் கூடாது!" அரை மனதோடு அந்தப் பையை கொடுத்து விட்டு நூற்றுப் பதினொன்று என்ற நம்பர் போட்ட சிவப்பு பிளாஸ்டிக் வில்லையை வாங்கி பத்திரமாக வைத்துக் கொண்டு உள்ளே போனார் ராமு.
உள்ளே குழந்தைகள் பகுதிக்குப் போனால் சென்னையின் பாதி மக்கள் இங்கு தான் உள்ளனரோ என்ற பிரமை ஏற்பட்டது. ஏசி வேலை செய்யற மாதிரி தெரியலை. நிறைய பேர் கையை வளைத்து நுழைத்து துணிகளை எடுத்தனர். மூச்சு விட முடியாத சில குழந்தைகள் பொறுமையில்லா குழந்தைகள் கத்திப் பிலாக்கணம் வைத்தனர். இந்த அமர்க்களத்தில் சட்டை பாக்கெட்டை அவ்வப்போது தொட்டுப் பார்த்துக் கொண்டார் ராமு ...அந்த பிளாஸ்டிக் டோக்கன் பத்திரமா இருக்கிறதா என்று. அது வெறும் டோக்கன் கிடையாதே...!
ஒரு சட்டையும் ஒரு சுடிதாரும் வாங்கிவிட்டு பணம் கட்டி துணி வாங்கும் கியுவில் நின்றார் ராமு. ஒரு வழியாக ராமுவின் பை கிடைத்தது.
பிறகு கேட்டை நோக்கி நடைபோட்ட ராமுவிற்கு பகீர் என்றது. டோக்கனைக் காணோம். செக்யூரிட்டியிடம் நிலமையை விளக்கி தனது நம்பர் நூற்றுப் பதினொன்று, மஞ்சள் பை என்ற விவரம் சொன்னார். ராமுவின் பை போலவே வெங்கடாசலபதி படம் போட்ட மஞ்சள் பை நான்கு இருந்தது. பச்சை டோக்கனில் அதே நம்பர் கொண்ட மஞ்சள் பை ஒன்றைக் காட்டி "இதுவா" என்ற செக்யூரிட்டி.
"காஷ் கவுன்டரில் ஜோஷ்வா சாரிடம் ஒரு வார்த்தை சொல்லுங்கள் பிறகு தருகிறேன்" என்றார். ஜோஷ்வாவிடம் கெஞ்சிக் கூத்தாடி மஞ்சள் பை ஒரு வழியாக கிடைத்தது.
அவசரமாக ஆட்டோ பிடித்து மாம்பலம் என்றார் ராமு. ஆட்டோ புறப்பட்டதும் மெதுவாய் மஞ்சள் பைக்குள் கையை விட்டுத் துழாவிப் பார்த்தார். அவர் மகளுக்கு ஆசையாக வாங்கிய நெக்லஸ் பெட்டி இருக்கிறதா என்று. ராமுவின் கைகள் சில்லிட்டுப் போயிற்று. அந்தப் பைக்குள் ஒரு துண்டு, வெற்றிலைப் பொட்டலம், ஒரு நீள இரும்பு சாவி, சின்ன சில்லரைப் பர்ஸ்.
நூற்றுப் பதினொன்று என்ற டோக்கன் நம்பர் நெஞ்சை அழுத்தியது. பையைத் திருப்பிய போது வெங்கடாஜலபதி சிரித்துக் கொண்டு இருப்பது போல் பட்டது ராமுவிற்கு. நூற்றுப் பதினொன்று நம்பர் நாமம் போல கண் முன்னே வந்து வந்த போனது. வீட்டிற்கு முகத்தை தொங்கப் போட்டவாறு நுழைந்த ராமு ரொம்ப நேரம் பேசவே இல்லை...!
Sai Shankar

Tuesday, November 23, 2021

பகுத்துண்டு

 -குறுங்கதை

பகுத்துண்டு
- டாகடர் பாலசாண்டில்யன்
குமார் மற்றும் கோபு இருவரும் அத்தை பையன் மாமா பையன் உறவு முறை. ஒரே நாளில் ஒரே முற்றத்தில் பிறந்தவர்கள். ஒன்றாக வளர்ந்தவர்கள். சிறு வயதில் ஒரே மாதிரி உடை அணிந்து கொண்டு திரிந்து ஒருவருக்கொருவர் அன்புப் பாசப் பிணைப்போடு நாளும் இருந்தவர்கள்.
குமார் இன்ஜினியரிங் டிப்ளமா படித்து மத்திய அரசு வேலையில் சேர்ந்தான். கோபுவின் பெற்றோர் ரொம்ப சாதாரணமானவர்கள். பள்ளிப் படிப்போடு நிறுத்திக் கொண்ட கோபுவிற்கு ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளர் வேலை கிடைத்தது.
சாதாரண வேலை என்பதால் சாதாரண வாழ்க்கை, அவனுக்கேற்ற மனைவி என்று சாதாரண நிலையிலேயே வாழ்ந்து வந்தான் கோபு. ஆனாலும் குமார் கோபு இருவரும் அடிக்கடி சந்திப்பார்கள். கோபு குமார் வீட்டிற்கு வாரம் ஒரு முறையாவது வருவான். குமார் எப்போதும் கோபுவிற்கு ஏதாவது உதவி செய்வது வழக்கம். அது சட்டை, பேன்ட், கடிகாரம், பணம் என்று ஏதாவது இருக்கும்.
கோபுவின் பிள்ளையின் படிப்பிற்கு குமார் உதவி செய்தான். குமாரின் மனைவியும் குமாரின் மகன் கண்ணனும் ஒரு போதும் குமார் கோபுவிற்கு உதவி செய்வதை தடை செய்தது கிடையாது. கோபுவின் மகள் திருமணத்திற்கும் குமார் நிறைய பணம் கொடுத்து உதவினான். கடனாகத்தான். அந்தக் கடனை திருப்பித் தர முடியாத கோபு குமார் வீட்டிற்கு வருவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டான்.
அது பற்றி குமார் ஒரு போதும் கவலைப்படவில்லை.
குமார் ஒரு சமயம் நோய்வாய்ப்பட்டான். அந்த விஷயம் கேள்விப்பட்டு அவனைப் பார்க்க வந்தான் கோபு. தான் பெற்றுக் கொண்ட கடனை திரும்பத் தர முடியாது போனது குறித்து கண்ணீர் மல்க மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டு மன்னிப்பு கேட்டான். குமார் கோபுவின் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் சொன்னான்.
அடுத்த மாதம் குமார் இறந்தே போனான். துக்கத்திற்கு வந்த கோபு குமாரின் மகன் கண்ணனைக் கட்டிப் பிடித்து ஆறுதல் சொன்னான். உன் தந்தை போல யார் உண்டு என்றான் கோபு.
உள்ளே ஓடிப் போன கண்ணன் கைகளில் ஒரு ஸ்படிக மணி மாலையோடு வந்தான். "இது குமார் அணிந்த ஒன்று தானே" என்று கேட்டான் கோபு. "ஆமாம், இனி இதனை அணிய சரியான நபர் நீங்கள் தான்" சொல்லும் போதே அழுது விட்டான் கண்ணன். "நீங்கள் எப்போது வந்தாலும் உங்களுக்கு ஏதாவது கொடுப்பார் அப்பா. இனி தருவதற்கு அவர் இல்லை. ஆனால் நான் இருக்கிறேன்" என்று
சொல்லி கோபுவின் கால்கள் தொட்டு வணங்கினான் கண்ணன்.
அந்த ஸ்படிக மாலை அணிந்து கொண்டு நின்ற கோபுவின் மனதில்
கண்ணன் குமாராகத் தான் தென்பட்டான்.

சின்னத்தாய்

 சின்னத்தாய்

குறுங்கதை
- பாலசாண்டில்யன்
திரு மற்றும் திருமதி சாமுவேல் நடத்துகின்ற ஆதரவற்றோர் இல்லத்தில் கிட்டத்தட்ட அறுபது குழந்தைகள் இருந்தன. அமுதா எனும் புதிய சிறுமி சேர்க்கப்படுகிறாள்.
பத்து நாட்கள் கழித்து மிகப் பெரிய பணக்காரர் வருகிறார். அத்தனை குழந்தைகளுக்கும் பெரியதொரு பொம்மை வாங்கித் தருகிறார். பொம்மை நிஜமான குழந்தை போல அழகாக இருக்கிறது. எல்லாக் குழந்தைகளும் அந்த பொம்மையைக் கட்டிப் பிடித்து விளையாடுகின்றன.
அமுதா மட்டும் அவளுக்கு கிடைத்த பொம்மையை உற்று உற்றுப் பார்க்கிறாள். அந்த பொம்மையின் கண்ணை விரல் விட்டுத் தோண்டி எடுக்கிறாள்.
திருமதி சாமுவேல் என்கிற 'அம்மா' அதைக் கவனித்து அமுதாவிடம் விரைந்து 'பளார் பளார்' என்று அமுதாவை அடிக்கிறார். "எப்படிப்பட்ட கிராதகி வயிற்றில் பிறந்தவளாக நீ இருக்க வேண்டும். இப்படி செய்து விட்டாயே" என்று அறை அதிரும்படி கத்துகிறாள். அமுதா விசும்பி விசும்பி அழுது துடிக்கிறாள்.
அரை மணி நேரத்திற்குப் பின்பு அமுதா மெல்ல திருமதி சாமுவேல் அருகில் சென்று "அம்மா ...அம்மா ! நம் இல்லத்தில் கோமதி ஆயாவுக்கு கண் இல்லையே. அவருக்கு வைக்கலாமே என்று தான் பொம்மையின் கண்ணைத் தோண்டி எடுத்தேன்" என்றாள்.
திருமதி சாமுவேலுக்கு தன்னை யாரோ அறைந்தது போல் இருந்தது.
இந்த சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த சாமுவேல் தன் மனைவியிடம் சொன்னார் நிதானமாக .."நமக்குப் பிறகு இந்த இல்லத்தைச் சரியாக கவனித்துக் கொள்ளப் போவது இந்தக் குழந்தை அமுதா தான். இது ஆண்டவனால் அனுப்பி வைக்கப்பட்ட தெய்வக் குழந்தை. இவளை நாம் கவனமாக வளர்க்க வேண்டும்."
திருமதி சாமுவேல் தனது தவறை உணர்ந்தவராக அமுதாவை உற்றுப் பார்த்தாள் ஆச்சரியத்தோடு....!

எல்லாமே கைராசி

 எல்லாமே கைராசி

-குறுங்கதை
பாலசாண்டில்யன்
எழுந்தது முதல் ஏதோ சொல்லத் தெரியாத முதுகு மற்றும் உடல் வலி, லேசாக பீபி ஏறி இருக்குமோ என்று சந்தேகம். "பேசாம டாக்டரிடம் போயிட்டு வந்துடுங்க" என்றாள் என் மனைவி.
நள்ளிரவு மற்றும் விடியற்காலை பெய்த மழையால் வீதியெங்கும் தண்ணீர். எப்படியும் டாக்டரைப் பார்க்க நல்ல கூட்டம் வந்திருக்கும். கொஞ்சம் லேட்டாக போகலாம் என்று முடிவு செய்து ஒரு பதினொன்றரை மணிக்கு அவர் வழக்கமாக வரும் பொது மருத்துவமனைக்கு சென்றேன். டாக்டர் முரளி இன் என்ற போர்ட். அந்த நர்ஸ் எனக்கு தெரிந்தவர் தான்.
இன்னும் நாலு பேஷண்ட் இருக்காங்க, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்றார். டாக்டர் ரூமுக்கு வெளியே பெஞ்சில் உட்கார்ந்தேன். அவர் கதவு எப்போதும் போல திறந்து தான் இருந்தது.
"மழைல நனைஞ்சிங்களா? இப்படி இருமலும் சளியுமா வந்திருக்கீங்க?" இது டாக்டர் குரல். "தூக்கமே வரல டாக்டர்" ஒரு பெரியவரின் குரல். "ஏம்ப்பா நான் ஒன்னு கேட்டா அவர் ஒன்னு சொல்றார், மழைல நனைஞ்சாரா?" மீண்டும் டாக்டரின் குரல். "ஆமாம் டாக்டர், சின்ன பிள்ளை மாதிரி கொடை எடுத்துக்கிட்டு தண்ணி எப்படி இருக்குனு சர்வே பண்ண போயிடறரர்.". "சரி இந்த மாத்திரை, சிரப் இரண்டும் வாங்கிக் கொடு, நான் நரம்பு டாக்டர். உங்க அப்பாவுக்கு எல்லாத்துக்கும் நான் தான் டாக்டர், பத்திரமா பாத்துக்கோ"
வெளியே ஒரு பெரியவரும் ஒரு இளைஞரும் வந்தனர். திடீர் என்று அந்த ஆஸ்பத்திரி முக்கியஸ்தர் ஒருவர் உள்ளே நுழைந்தார். "டாக்டர் குட் மார்னிங், என் பொண்ணும் பேரனும் வந்திருக்காங்க, கொஞ்சம் பார்க்க முடியுமா?" பின்னாலேயே ஒரு யுவதி மற்றும் ஒரு சிறுவன் இருவரும் உள்ளே நுழைந்தனர்.
"என்னப்பா எப்படி இருக்கே?" இது டாக்டர். "சார் ரொம்ப தலை வலிக்குது, தூக்கம் வரல" இது சிறுவன். "ரொம்ப டிவி பார்க்கறான், இல்லைனா மொபைல், கண்ணாடியும் போட்டாச்சு. டயத்துக்கு சாப்பிடறதில்ல, தூங்கறதில்ல" இது அந்த யுவதி. "ரொம்ப மொபைல் பாக்காதே, டயத்துக்கு சாப்பிடு, ஒன்னும் இல்லை பயப்படாதே, ஒரு மாத்திரை தரேன் போட்டுக்கோ" என்ற டாக்டரிடம் சிறுவன் கேள்வி, "டாக்டர் எனக்கு உத்தம வில்லன் படத்தில் கமலுக்கு வர மாதிரி பிரைன் டியூமர் இல்லையே?"...சிரித்துக் கொண்டே டாக்டர், "நீ இனிமே ரஜினி படம் பாரு, கமல் படம் வேண்டாம்." என்று சொல்லி சிரித்தார். அவர்கள் வெளியே போனார்கள்.
பின்னாலேயே அந்த முக்கியஸ்தர் மீண்டும் உள்ளே நுழைந்து "பேரன் வந்தானா? ஒன்னும் கவலை இல்லையே?" டாக்டர், "நத்திங், உங்க பேரன் கமல்ஹாசன் மாதிரி பிரைன் டியூமர் வந்திருக்கானு கேக்கறான். தூங்காம ரொம்ப மொபைல் பாக்கற பிரச்சனை தான். மாத்திரை கொடுத்திருக்கேன், நோ ஒரி..." முக்கியஸ்தர் கிளம்பினார்.
அடுத்து ஒரு பெண்மணி ஏகப்பட்ட ஸ்கேன் அது இதுனு பெரிய பையோடு உள்ளே போனார். "முதல்ல நீங்க சுகரை கண்ட்ரோல்ல கொண்டு வாங்க. என்னை கேக்காம கண்ட கண்ட ஸ்கேன் எல்லாம் எடுக்க்காதீங்க, அதே மாத்திரை கண்டினுயு பண்ணிட்டு பத்து நாள் கழிச்சி வந்து பாருங்க"
அந்த நர்ஸ், "சார் இன்னும் ஒருத்தர் அடுத்தது நீங்க தான்.." என்றார்.
ரொம்ப முடியாத ஒரு பாட்டி வேறு ஒரு பெண்மணியுடன் உள்ளே நுழைந்தார். அதற்குள் எனக்கு போன் "என்ன ரொம்ப கூட்டமா? வந்துடுங்க அப்புறம் பாத்துக்கலாம்" என் மனைவி.
நர்ஸ் வந்து "சார் நீங்க போங்க" என்றார்.
உள்ளே நுழைந்து "குட் மார்னிங் டாக்டர், எப்படி இருக்கீங்க?" "யா குட் என்னாச்சு சொல்லு என்றார் "காலைல இருந்து ரொம்ப முதுகு வலி, உடம்பு வலி" என்றேன். நர்ஸ் பீபி பார்த்தார். "சார் 120/85" என்றார். நான் மனதுக்குள் வீட்டில் பார்த்த போது நிறைய காண்பித்ததே. டாக்டரை பார்த்தாலே குறையும் போல இருக்கு, என் மனைவி சொல்றா மாதிரி...இது என் மைண்ட் வாய்ஸ்.
"ஒண்ணும் இல்லைப்பா, எல்லாம் உனக்கு ஆன்சைட்டி தான். நீ போன தடவை சொன்னேனே "வருவான் வடிவேலன் - ஓ எஸ் அருண் பாடினது வாங்கி கேட்டியோ..? அது தவிர பாலமுரளி கிருஷ்ணாவோட உற்ஸவ சம்பிரதாய கீர்த்தனை கேளு..வேணும்னா ஒரு மூணு நாளுக்கு பிசியோ பண்ணிக்கோ, யு வில் பி ஆல்ரைட்." என்ற போது எனக்கு எல்லா வலியும் பறந்து போனது போல ஆனது.
"எப்பொவும் போல பிசியா ஏதாவது எழுது, எப்போ உன்னோட புக் ரிலீஸ்?...என்னோட புக்கும் இரண்டு ப்ரிண்ட்ல இருக்கு" டாபிக் மாற்றி அவரோட பாவொரிட் பாட்டை முணுமுணுத்தார்.
எல்லோரும் இப்படி நந்தி காதுல சொல்ற மாதிரி இத்தனை பிரச்சனைகளை எடுத்துண்டு வந்தாலும், டாக்டர் பொறுமையா எல்லோரையும் கையாண்டு சிரிச்சுகிட்டே இருக்கார். இவர பாத்தாலே பாதி வியாதி குணமாகி விடும் என்று எனக்கு நானே பேசிக் கொண்டு வண்டியை கிளப்பி முட்டி அளவு தண்ணியில் மெதுவாக ஓட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.
"என்ன சாருக்கு டாக்டரை பாத்ததுமே எல்லாம் சரியா போச்சு போல" என்று மனைவி கலாய்த்தாள்.
உண்மைதான் அவசியம் இல்லாம யாருக்கும் டெஸ்ட், மாத்திரை, ஊசி எதுவும் தர மாட்டார். அவர் வெறும் டாக்டர் இல்லை. ஒரு மேஜிஷியன்.

சார் போஸ்ட்

 சார் போஸ்ட்

- குறுங்கதை
- டாக்டர் பாலசாண்டில்யன்
அருண் - படிப்பு MA - வயது 27 - ஒரு வேலையில்லா பட்டதாரி . பார்க்க நல்ல உயரம். வாட்ட சாட்டமான உடல்வாகு. இருந்தாலும் நல்லதொரு வேலை கிடைக்கவில்லை.
தினமும் அருகிலுள்ள லைப்ரரிக்கு சென்று செய்தித்தாள் பார்த்து வேலைக்கு விண்ணப்பிப்பதே அருணின் முக்கியப்பணி. வேலைக்கு முயற்சிப்பதே முழுநேர வேலையாகிவிட்ட நிலையில் அருணின் பெயரே வெட்டிப் பயலாகவும் தண்டச்சோறாகவும் மாறிவிட்டது. அதனால் பேசுவதை சாப்பிடுவதைக் கூட குறைத்துக் கொண்டான்.
தெரிந்த நண்பர்களிடமெல்லாம் மனுப் போட்டான். தபால்காரன் அருண் தொல்லை தாங்க முடியாமல் இவன் கேட்கும் முன்பே 'உனக்கு இன்னிக்கும் தபால் இல்லை' என்று சொல்லி இவன் வயிற்றெரிச்சலை கிளப்பி விட்டான்.
அருணுக்கு தொடர்ந்து அடுத்த ஒரு வாரம் முழுவதும் இன்டெர்வியூவிற்கு வரச் சொல்லி கடிதம் வந்தது. தினம் இன்டெர்வியூவிற்குபோவதும் சோர்ந்து சோகமாய் வீடு திரும்புவதும் வாடிக்கையானது.
அருண் வீட்டு வாசலில் தீடிரென ஒரே கும்பல். போலீஸ் ஜீப் வேறு வந்தது. அருண் தற்கொலை செய்து கொண்டு விட்டான். போலீஸ் ஏதோ ஒரு கடிதத்தை கண்டு பிடித்தார்கள்.
"என்னை மன்னித்து விடுங்கள் அப்பா ! நான் ஒரு அதிர்ஷ்டம் கெட்டவன். உங்களையெல்லாம் திருப்திப்படுத்த நானே சில இன்டெர்வியு லெட்டர்களை எழுதி நம் வீட்டு விலாசத்திற்கு போஸ்ட் செய்தேன். சாவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை"
அருணின் காரியங்கள் நடந்து ஒரு வாரம் ஆகிவிட்டது.
"சார் போஸ்ட்"...போஸ்ட்மேன் குரல்.
வாங்கிப் பிரித்துப் பார்த்தார் அருணின் அப்பா.
"அருண், நீ அதிர்ஷ்டம் கெட்டவன் இல்லையடா" என்று கத்தினார். கதறினார். வந்திருந்தது பாங்க் வேலைக்கான ஆர்டர்...!