Thursday, November 25, 2021

தலைவன் இருக்கின்றானா?

 தலைவன் இருக்கின்றானா?

குறுங்கதை
- டாக்டர் பாலசாண்டில்யன்
சந்தைக்குப் போன செங்கமலம் எங்கு போனாள்? கோவிந்தன் தேடாத இடம் இல்லை. இரவுகள் பல தூங்காமல் தவித்தான். பேசிப் பேசி புலம்பினான் கோவிந்தன்.
ராமசாமி அறிவுரைப்படி ஊர்ப்பஞ்சாயத்து புகார் பெட்டியில் செங்கமலம் காணாது போன விவரம் கடிதமாய் போடப்பட்டது. தினமும் கோவிந்தன் ஆவலாய் நல்ல செய்தியை எதிர்பார்த்தான். அவன் எதிர்பார்ப்பு வீண்.
புதிய பஞ்சாயத்து தலைவர் தேர்வான செய்தி ஊரையே கலக்கியது.
கோவிந்தனுக்கு ஏதோ ஒரு நம்பிக்கை இலை மனதில் துளிர்த்தது. செங்கமலம் கிடைத்து விடுவாள். நிச்சயம் கிடைத்து விடுவாள். அவள் மீது உயிரையே வைத்திருந்தான். காதலித்து செய்து கொண்ட திருமணம் ஆயிற்றே...! இருவரும் கழித்த இனிமைப் பொழுதுகள் எண்ணிடலங்காது.
புதிய தலைவர் பதவியேற்ற மறுநாளே புகார்பெட்டியை திறந்து பார்க்க முடிவு செய்தார். பெட்டிக்குள் இருந்த மொத்தக் கடிதம் பத்து.
எல்லாமே கோவிந்தன் எழுதியது. ஒன்று செங்கமலம் காணாமால் போனது பற்றி. மீதமெல்லாம் புகார் பெட்டியைத் திறந்து உரிய நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்பது பற்றி...
கோவிந்தனின் ஏமாற்றம் தொடர்ந்தது. அவனின் கடிதங்கள் புதிய தலைவர் பார்வைக்கு வந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பாவம் ....அவனுக்குத் தெரியமா என்ன? செங்கமலத்தை (சிறை) வைத்திருப்பது புதிய தலைவர் தானென்று....?!

No comments:

Post a Comment