Tuesday, November 23, 2021

சார் போஸ்ட்

 சார் போஸ்ட்

- குறுங்கதை
- டாக்டர் பாலசாண்டில்யன்
அருண் - படிப்பு MA - வயது 27 - ஒரு வேலையில்லா பட்டதாரி . பார்க்க நல்ல உயரம். வாட்ட சாட்டமான உடல்வாகு. இருந்தாலும் நல்லதொரு வேலை கிடைக்கவில்லை.
தினமும் அருகிலுள்ள லைப்ரரிக்கு சென்று செய்தித்தாள் பார்த்து வேலைக்கு விண்ணப்பிப்பதே அருணின் முக்கியப்பணி. வேலைக்கு முயற்சிப்பதே முழுநேர வேலையாகிவிட்ட நிலையில் அருணின் பெயரே வெட்டிப் பயலாகவும் தண்டச்சோறாகவும் மாறிவிட்டது. அதனால் பேசுவதை சாப்பிடுவதைக் கூட குறைத்துக் கொண்டான்.
தெரிந்த நண்பர்களிடமெல்லாம் மனுப் போட்டான். தபால்காரன் அருண் தொல்லை தாங்க முடியாமல் இவன் கேட்கும் முன்பே 'உனக்கு இன்னிக்கும் தபால் இல்லை' என்று சொல்லி இவன் வயிற்றெரிச்சலை கிளப்பி விட்டான்.
அருணுக்கு தொடர்ந்து அடுத்த ஒரு வாரம் முழுவதும் இன்டெர்வியூவிற்கு வரச் சொல்லி கடிதம் வந்தது. தினம் இன்டெர்வியூவிற்குபோவதும் சோர்ந்து சோகமாய் வீடு திரும்புவதும் வாடிக்கையானது.
அருண் வீட்டு வாசலில் தீடிரென ஒரே கும்பல். போலீஸ் ஜீப் வேறு வந்தது. அருண் தற்கொலை செய்து கொண்டு விட்டான். போலீஸ் ஏதோ ஒரு கடிதத்தை கண்டு பிடித்தார்கள்.
"என்னை மன்னித்து விடுங்கள் அப்பா ! நான் ஒரு அதிர்ஷ்டம் கெட்டவன். உங்களையெல்லாம் திருப்திப்படுத்த நானே சில இன்டெர்வியு லெட்டர்களை எழுதி நம் வீட்டு விலாசத்திற்கு போஸ்ட் செய்தேன். சாவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை"
அருணின் காரியங்கள் நடந்து ஒரு வாரம் ஆகிவிட்டது.
"சார் போஸ்ட்"...போஸ்ட்மேன் குரல்.
வாங்கிப் பிரித்துப் பார்த்தார் அருணின் அப்பா.
"அருண், நீ அதிர்ஷ்டம் கெட்டவன் இல்லையடா" என்று கத்தினார். கதறினார். வந்திருந்தது பாங்க் வேலைக்கான ஆர்டர்...!

No comments:

Post a Comment