Tuesday, November 23, 2021

எல்லாமே கைராசி

 எல்லாமே கைராசி

-குறுங்கதை
பாலசாண்டில்யன்
எழுந்தது முதல் ஏதோ சொல்லத் தெரியாத முதுகு மற்றும் உடல் வலி, லேசாக பீபி ஏறி இருக்குமோ என்று சந்தேகம். "பேசாம டாக்டரிடம் போயிட்டு வந்துடுங்க" என்றாள் என் மனைவி.
நள்ளிரவு மற்றும் விடியற்காலை பெய்த மழையால் வீதியெங்கும் தண்ணீர். எப்படியும் டாக்டரைப் பார்க்க நல்ல கூட்டம் வந்திருக்கும். கொஞ்சம் லேட்டாக போகலாம் என்று முடிவு செய்து ஒரு பதினொன்றரை மணிக்கு அவர் வழக்கமாக வரும் பொது மருத்துவமனைக்கு சென்றேன். டாக்டர் முரளி இன் என்ற போர்ட். அந்த நர்ஸ் எனக்கு தெரிந்தவர் தான்.
இன்னும் நாலு பேஷண்ட் இருக்காங்க, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்றார். டாக்டர் ரூமுக்கு வெளியே பெஞ்சில் உட்கார்ந்தேன். அவர் கதவு எப்போதும் போல திறந்து தான் இருந்தது.
"மழைல நனைஞ்சிங்களா? இப்படி இருமலும் சளியுமா வந்திருக்கீங்க?" இது டாக்டர் குரல். "தூக்கமே வரல டாக்டர்" ஒரு பெரியவரின் குரல். "ஏம்ப்பா நான் ஒன்னு கேட்டா அவர் ஒன்னு சொல்றார், மழைல நனைஞ்சாரா?" மீண்டும் டாக்டரின் குரல். "ஆமாம் டாக்டர், சின்ன பிள்ளை மாதிரி கொடை எடுத்துக்கிட்டு தண்ணி எப்படி இருக்குனு சர்வே பண்ண போயிடறரர்.". "சரி இந்த மாத்திரை, சிரப் இரண்டும் வாங்கிக் கொடு, நான் நரம்பு டாக்டர். உங்க அப்பாவுக்கு எல்லாத்துக்கும் நான் தான் டாக்டர், பத்திரமா பாத்துக்கோ"
வெளியே ஒரு பெரியவரும் ஒரு இளைஞரும் வந்தனர். திடீர் என்று அந்த ஆஸ்பத்திரி முக்கியஸ்தர் ஒருவர் உள்ளே நுழைந்தார். "டாக்டர் குட் மார்னிங், என் பொண்ணும் பேரனும் வந்திருக்காங்க, கொஞ்சம் பார்க்க முடியுமா?" பின்னாலேயே ஒரு யுவதி மற்றும் ஒரு சிறுவன் இருவரும் உள்ளே நுழைந்தனர்.
"என்னப்பா எப்படி இருக்கே?" இது டாக்டர். "சார் ரொம்ப தலை வலிக்குது, தூக்கம் வரல" இது சிறுவன். "ரொம்ப டிவி பார்க்கறான், இல்லைனா மொபைல், கண்ணாடியும் போட்டாச்சு. டயத்துக்கு சாப்பிடறதில்ல, தூங்கறதில்ல" இது அந்த யுவதி. "ரொம்ப மொபைல் பாக்காதே, டயத்துக்கு சாப்பிடு, ஒன்னும் இல்லை பயப்படாதே, ஒரு மாத்திரை தரேன் போட்டுக்கோ" என்ற டாக்டரிடம் சிறுவன் கேள்வி, "டாக்டர் எனக்கு உத்தம வில்லன் படத்தில் கமலுக்கு வர மாதிரி பிரைன் டியூமர் இல்லையே?"...சிரித்துக் கொண்டே டாக்டர், "நீ இனிமே ரஜினி படம் பாரு, கமல் படம் வேண்டாம்." என்று சொல்லி சிரித்தார். அவர்கள் வெளியே போனார்கள்.
பின்னாலேயே அந்த முக்கியஸ்தர் மீண்டும் உள்ளே நுழைந்து "பேரன் வந்தானா? ஒன்னும் கவலை இல்லையே?" டாக்டர், "நத்திங், உங்க பேரன் கமல்ஹாசன் மாதிரி பிரைன் டியூமர் வந்திருக்கானு கேக்கறான். தூங்காம ரொம்ப மொபைல் பாக்கற பிரச்சனை தான். மாத்திரை கொடுத்திருக்கேன், நோ ஒரி..." முக்கியஸ்தர் கிளம்பினார்.
அடுத்து ஒரு பெண்மணி ஏகப்பட்ட ஸ்கேன் அது இதுனு பெரிய பையோடு உள்ளே போனார். "முதல்ல நீங்க சுகரை கண்ட்ரோல்ல கொண்டு வாங்க. என்னை கேக்காம கண்ட கண்ட ஸ்கேன் எல்லாம் எடுக்க்காதீங்க, அதே மாத்திரை கண்டினுயு பண்ணிட்டு பத்து நாள் கழிச்சி வந்து பாருங்க"
அந்த நர்ஸ், "சார் இன்னும் ஒருத்தர் அடுத்தது நீங்க தான்.." என்றார்.
ரொம்ப முடியாத ஒரு பாட்டி வேறு ஒரு பெண்மணியுடன் உள்ளே நுழைந்தார். அதற்குள் எனக்கு போன் "என்ன ரொம்ப கூட்டமா? வந்துடுங்க அப்புறம் பாத்துக்கலாம்" என் மனைவி.
நர்ஸ் வந்து "சார் நீங்க போங்க" என்றார்.
உள்ளே நுழைந்து "குட் மார்னிங் டாக்டர், எப்படி இருக்கீங்க?" "யா குட் என்னாச்சு சொல்லு என்றார் "காலைல இருந்து ரொம்ப முதுகு வலி, உடம்பு வலி" என்றேன். நர்ஸ் பீபி பார்த்தார். "சார் 120/85" என்றார். நான் மனதுக்குள் வீட்டில் பார்த்த போது நிறைய காண்பித்ததே. டாக்டரை பார்த்தாலே குறையும் போல இருக்கு, என் மனைவி சொல்றா மாதிரி...இது என் மைண்ட் வாய்ஸ்.
"ஒண்ணும் இல்லைப்பா, எல்லாம் உனக்கு ஆன்சைட்டி தான். நீ போன தடவை சொன்னேனே "வருவான் வடிவேலன் - ஓ எஸ் அருண் பாடினது வாங்கி கேட்டியோ..? அது தவிர பாலமுரளி கிருஷ்ணாவோட உற்ஸவ சம்பிரதாய கீர்த்தனை கேளு..வேணும்னா ஒரு மூணு நாளுக்கு பிசியோ பண்ணிக்கோ, யு வில் பி ஆல்ரைட்." என்ற போது எனக்கு எல்லா வலியும் பறந்து போனது போல ஆனது.
"எப்பொவும் போல பிசியா ஏதாவது எழுது, எப்போ உன்னோட புக் ரிலீஸ்?...என்னோட புக்கும் இரண்டு ப்ரிண்ட்ல இருக்கு" டாபிக் மாற்றி அவரோட பாவொரிட் பாட்டை முணுமுணுத்தார்.
எல்லோரும் இப்படி நந்தி காதுல சொல்ற மாதிரி இத்தனை பிரச்சனைகளை எடுத்துண்டு வந்தாலும், டாக்டர் பொறுமையா எல்லோரையும் கையாண்டு சிரிச்சுகிட்டே இருக்கார். இவர பாத்தாலே பாதி வியாதி குணமாகி விடும் என்று எனக்கு நானே பேசிக் கொண்டு வண்டியை கிளப்பி முட்டி அளவு தண்ணியில் மெதுவாக ஓட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.
"என்ன சாருக்கு டாக்டரை பாத்ததுமே எல்லாம் சரியா போச்சு போல" என்று மனைவி கலாய்த்தாள்.
உண்மைதான் அவசியம் இல்லாம யாருக்கும் டெஸ்ட், மாத்திரை, ஊசி எதுவும் தர மாட்டார். அவர் வெறும் டாக்டர் இல்லை. ஒரு மேஜிஷியன்.

No comments:

Post a Comment