Sunday, March 10, 2013

Devotional poem by Dr.Balasandilyan



இறைவா !
எத்தனை பொழுதுகள் எத்தனை நாட்கள்
எத்தனை மாதங்கள் எத்தனை வருடங்கள்
எத்தனை ஜென்மங்கள் எத்தனை யுகங்கள்
தவித்திருந்தோமோ தவங்கிடந்தோமோ

புவி தன்னில் நீ எம்மோடு வந்து
புத்துயிர் தந்து பொலிவதற்கு - எத்தனை

புரிகின்ற உந்தன் லீலா வினோதங்கள்
பார்க்கின்ற பாக்கியம் பெறுதற்கு - எத்தனை

வாழ்வில் முற்றும் தோற்ற போதும் நீயெம்
தோழனாய் வந்து தேற்றுதற்கு - எத்தனை

நடக்கின்ற அத்தனை செயல்களும் இன்று
எம் கண்ணில் நிறைவாய்த் தோன்றுதற்கு - எத்தனை

நாளெல்லாம் உந்தன் நாமமே நவின்றுயெம்
நன்றிகள் உனக்கு ஆக்குதற்கு - எத்தனை

சிரம் தாழ்த்தி கரம் கூப்பி
நன்றி சொல்கின்றேன் ..அன்பு தெய்வமே !

-
டாக்டர் பாலசாண்டில்யன்

சிவ தாண்டவ தோத்திரம் (மொழி பெயர்ப்பு - டாக்டர் பாலசாண்டில்யன்)
(பன்மொழி வித்தகர் Late மும்பை K N வேத நாராயணன் ஆசியுடன் )

மங்கலம் பொலிந்திடும் ஆனந்த நர்த்தனனே
திங்களை அணிந்த தில்லை யம்பலனே
கங்கையைச் சடையில் தாங்கினாய் அதனால்
தங்கிய நஞ்சும் பரிசுத்த மானதுவோ
ஸ்ருங்காரமாய் அரவு மாலை யணிந்தவனே
எங்குமே இன்பம் அருளிடச் செய்குவாய் !

வற்றாத அமரநதி சுழன்று சுழன்றே
சுற்றிச் சொரிகின்ற சடைமுடி இறைவனே
தொற்றி நிற்குமொரு பிறைநில வதன்கீழ்
நெற்றிப் பட்டியில் ஜொலிக்கும் அக்னியனே
முற்றுமு ணர்ந்த ஞானியே பரமனே
குற்றமிலா தொருநிலை அருளிடச் செய்குவாய் !

வண்ண நிலவின் வடிவழகால் ஒளியால் இமாலயன்
புண்ணிய புத்ரியின் அழகும் கூடியநிலை
கண்ணால் எந்நாளும் கண்டு தரிசித்தால்
எண்ணம் ஈடேறும் மமதை தானொ ழிந்து
தன்னை யறிந்தாளும் தன்மை தானுயரும்
வன்மை வழங்கி அருளிடச் செய்குவாய் !

ஓதும் மறைநான்கின் மேன்மை உரைக்கவல்
மேதினியைக் காக்கும் தான்நினது சடையைக்
கோதும் நாகமதின் சோதிமிகு ஒளியால்
மோதும் திசையெட்டின் பெண்டிர்முகம் சிவக்கும்
பூபதியுன் மேலாடை மதயானை சருமம் ;
வேதமுதல்வனே தீதின்றி அருளிடச் செய்குவாய் !

நொடிப் பொழுது நின்விழிமலர் தரிசனம் போதுமென
அடித் தொழுது வணங்கும் இந்திராதி தேவர்பாதமலர்
வெடித்துச் சிதிறிய மகரந்தம் நின் பொற்பாதம்
பிடித்துத் தொழுதிட செய்பாவம் தானகலும்
மடியும் பல்லுயிர் சூழ்ந்திலங்கும் பாரினில்
தோடுடைய செவியனே அருளிடச் செய்குவாய் !

நாட்டமுடன் நாளும் வணங்கிடும் தேவர்
கூட்டத்தின் அதிபதியே தகிக்குமுன் நெற்றிப்
பொட்டின் அக்னியின் மதனை எரித்தவனே
வாட்டம் மிகப்போக்கி நெஞ்சின் சஞ்சலமெனும்
கேட்டைத் தவிர்த் தன்பர்க் கேற்றம் புரிந்துநல்
வீட்டைப் பெறும்வண்ணம் அருளிடச் செய்குவாய் !

வீணே உழன்றுழன்று வேதனைகொள் மனதைப்
பேணி நன்னெறியில் ஏற்றமொடு நல்கிட
ஆணும் பெண்ணும் இரண்டுமே நானென்று
ஆணிவேர் தத்துவத்தை அழகுற எடுத்துரைத்து
நானிலத்தை காக்கும் ஆதிசிவனே அய்யனே
வானுறை உமையவனே அருளிடச் செய்குவாய் !

எந்தையே நின்கழுத்துக் கருமைகார் மேகங்கள்
சிந்திடும் அமாவாசை யிருட்டோ என்றென்
சிந்தை கிறுக்கும் செயல்புரிய மறக்கும்
சந்திரனின் ஒளிதாங்கிய தலையோனே சிவனே
முந்தைய தீவினைகள் பொறுத்தே எவர்க்கும்
வந் தபயம் வழங்கி அருளிடச் செய்குவாய் !

முப்புர மெரித்தவனே நீலகண்டனே தக்ஷனின்
தப்பெனும் வேள்வியைக் கலைத்தவனே அரனே
அப்பனே அந்தகாசுரனை வதைத்தவனே என்றும்
ஒப்புயர்விலா உத்தமனே நமனை நசித்தவனே
உப்பிலியே கொடிய கஜாசுரர்க்கு சிம்ம
சொப்பனமானவனே தூயவனே அருளிடச் செய்குவாய் !

துறவுமா மன்னனே துக்கம் கடந்தவனே
அரவு பூண்டவனே அம்புலி அணிந்தவனே
உறவு அபிமானமில்லா உன்னத மானவனே
பரமனே திகம்பரனே பரதத்தின் நாயகனே
மறவாது புகழ்பாட மயங்கிடும் மறையவனே
பிறவாத வரந்தனை அருளிடச் செய்குவாய் !

வேலவன் தந்தையே குளிர்மலை நாதனே
சூலனைகாலனை காலால் உதைத்தவனே மறையே
சூலம் தரித்தவனே சுந்தரனே இறைவனே
ஞாலம் ஆளுகின்ற நர்த்தன நாயகனே
நாளும் ஆடுகின்ற உடுக்கை உடையவனே
நீலகண்டப் பெருமாளே அருளிடச் செய்குவாய் !

வார்த்தைக் கெட்டாத வொரு மாதவமே அருள்மிகு
நேர்த்தியினும்  மேலான வாசகமே பிரார்த்தனைகள்
பூர்த்திசெய் புண்ணியரூபனே பாறையை பஞ்சை
கீர்த்திமிகு ரத்தினத்தை கருங்கல்லை சிநேகிதனை
பார்த்திகழும் பாதகனை ஆண்டியை அரசனை
நேர்சமமாய் பாவிக்க அருளிடச் செய்குவாய் !

வாசமிகு மலர்மார்பா அங்கமெலாம் வெண்ணீற்றைப்
பூசுகின்ற ஈசனெனும் அய்யனே கங்காதரனே
ஆசுகவி அடியவர்க்கு முதல்வோனே நற்கருணை
வீசுகின்ற சுகக்காற்றே மறைபொருள் ஆனவனே
பேசுகின்ற வாய்நிதமும் நமச்சிவாய மெனஜெபித்து
தாசனென மாறிவிட அருளிடச் செய்குவாய் !

அரிதெலாம் உனக்கெளிது அனைத்துமே உன்சித்தம்
பாராளும் பரமனே இப்புனித தோத்திரத்தை
யாரெலாம் துதிப்பரோ அவர்குலம் தழைக்கும்
ஏராளமாய் நின்னருள் அவர்க்கு கிடைக்கும்
வேரோடு மருந்தென துக்கம் முறிக்குமென
ஈரேழு உலகிற்கும் அருளிடச் செய்குவாய் ..!

No comments:

Post a Comment