Saturday, December 12, 2015

அனுபவம் என்பது யாதெனக் கேட்பின் - Part 1

அனுபவம் என்பது யாதெனக் கேட்பின் : டாக்டர் பாலசாண்டில்யன்
பேயு பேயுனு சொன்னப்ப பேயாமப் பேயாப் பேஞ்சுது பெரியமழை. யாரும் இதற்கு முன் இப்படி பார்க்கலை. இது மாதிரி கேக்கலை. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி நடக்கும் போது மக்கள், மாக்கள், அரசு, அதிகாரிகள் யார் தான் என்ன செய்ய முடியும்?
ஒரு பெரிய வித்தியாசம் இந்த மழை சீசனில், ஐந்து முறை கனமழை வந்தது. நீர் தேக்கம் தெருக்களில் இருந்தது. ஆனால் வெள்ளம் இல்லை. பள்ளம் நிச்சயம் இருந்தது வீதிகளில். பல முறை அலுவலகம் சென்றவர்கள் தாமதமாக வீடு திரும்பினர். பெருஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் உண்டானது. தெரு ஓர வியாபாரிகளுக்கு மாபெரும் நஷ்டம் ஏற்பட்டது. பள்ளிகள் மழைக்கு ஒதுங்கின. மக்கள் தங்கும் விடுதிகள் ஆகின. ஆனால் ஏற்கனவே பள்ளிகளில் அத்தியாவசியமான கழிப்பறை மற்றும் குடிநீர் கிடையாது என்பதை சொல்லவும் வேண்டுமோ?
திரும்பப் திரும்ப பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டு இந்தக் கல்வி ஆண்டில் மட்டும் 25 நாட்கள் விடுமுறை விடப் பட்டுள்ளன. இன்னும் திறக்கப்படவில்லை. முடிக்க வேண்டிய போர்ஷன் நிறைய நிறைய. பிள்ளைகளுக்கு படிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய நிறைய. அரை இறுதி தேர்வே நடைபெறவில்லை. கல்வி ஆண்டினை முடிக்க வேண்டும். வழக்கம் போல் பொதுத் தேர்வு நடத்தி, பேப்பர் திருத்தி, ரிசல்ட் அறிவித்து, அப்பப்பா நினைத்தாலே தலை சுற்றும் சம்பந்தப்பட்ட கல்வித் துறைக்கு, ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கு, பெற்றோர்களுக்கு. இதனை அடுத்து மாநில தேர்தல் வேலையும் இந்த ஆசிரியர் கூட்டமே பணி ஆற்ற வேண்டும்.
விடுமுறையே எடுக்க முடியாது தொடர்ந்து பணி ஆற்றும் கூட்டம் என்று பார்க்கும் போது மருத்துவமனை, தபால் ஆபிஸ், போக்குவரத்து துறை நண்பர்கள், மின்சார ஊழியர்கள், ஓட்டுனர்கள், சிறு வியாபாரிகள், அரசுப் பணியாளர்கள், துப்பரவுப் பணியாளர்கள், ரயில் ஓட்டுனர்கள், ஹோட்டல் ஊழியர்கள், பால் நிறுவனத்தினர், ஊடகத் துறை நண்பர்கள், நாளிதழ் ஊழியர்கள், சில பல தயாரிப்புத் துறை நிறுவன ஊழியர்கள் என்று ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது. பாவம் என்று மூன்று வார்த்தைகளில் முடிக்க முடியாது இவர்கள் ஊழியத்தை. இவர்களில் இந்த மாதம் ஆண்டின் இறுதி என்பதால் ஐடி ஊழியர்களும் வேலைக்குப் பயந்து தினம் தினம் பணிக்குச் சென்றனர்.
மீண்டும் மழை வருமா ? என்ன ஆகும் என்ற அச்சத்தோடு மக்கள் இருக்கும் போது தான் கொற்றலை எனப்படும் பேரிடர் சம்பவம் நடந்தது. கடல் மூலம் வந்த சுனாமி ஒரு மணி நேரத்தில் வந்து லட்சம் பேரைத் தனது வசம் அள்ளிச் சென்றது. ஆனால் வானத்தில் இருந்து வந்த இந்த ஒரு மாமழை விடாது கொட்டித் தீர்த்து கோபத்துடன் தனது கணக்கைத் தீர்க்க வந்தது. ஏரி, கிணறு, குளங்கள் என்று நிரம்பாத இடங்கள் இல்லை. இதில் தாழ்வான பல குடியிருப்பு பகுதிகளும் அடக்கம். இம்முறை பாவம் இவர்கள் என்று ஏழை பாழை மக்கள் என்று உச்சு கொட்டும் நடுத்தர, மற்றும் உயர் நடுத்தர மக்கள் வெறும் டிவி பார்த்து பரிதாபப் படாமல், வேடிக்கை பார்ப்பவர்களாக இல்லாமல் வேதனை அனுபவிப்பவர்களாக மாறியது யாரும் கனவிலும் நினைத்துப் பார்த்திடாத ஒன்று.
இன்னும் விரிவாக அடுத்த பகிர்வில் காண்க. வருத்ததுடன், பிரார்த்தனையுடன் உங்கள் நண்பன்.

No comments:

Post a Comment