Saturday, December 12, 2015

Recent Rains - part 2

அனுபவம் என்பது யாதெனக் கேட்பின் - பார்ட் 2 
டாக்டர் பாலசாண்டில்யன் 

அதிகாலை நேரம் திடீர் கூச்சல் அக்கம் பக்கத்தில். அரைத் தூக்கத்தில் எழுந்து போய் கொட்டும் மழையில் குடையுடன் முட்டிக்கால் நீரில் வெளியே வந்து பார்த்தால், வீதியில் ஆடிப் பெருக்கு சமயத்தில் காவிரி ஓடுவது போல் வெள்ள நீர் போய்க் கொண்டிருந்தது. அப்போது அதன் வீரியம் தாக்கம் வேகம் வேடிக்கை பார்த்த எனக்கும் எங்கள் அக்கம் பக்க வீட்டாருக்கும் நிச்சயம் புரியவில்லை. 

தண்ணீரில் மரக் கட்டில், ஒரு மாருதி கார், குப்பைத் தொட்டி வண்டிகள், சைக்கிள்  என்று போய்க் கொண்டிருக்கும் போது மாடி வீட்டு சீமான்கள் தமது வீட்டின் குப்பை கூளங்கள், பழைய மெத்தை தலையணை, கிழிந்த துணிமணிகள், பிளாஸ்டிக் பொருட்கள், நாப்கின்கள் என்று வர்ணிக்க முடியாத பலவற்றை போட்டு அவை மிதந்து அடித்துச் செல்வதை வேடிக்கை பார்த்த வண்ணம். சிலர் மொபைல் போனில் வீடியோவும், செல்பியும் எடுத்துக் கொண்டு இருந்தனர். மணி ஆக ஆக, கரண்ட் போய் விட்டது என்ற சிறுவர்களின் அறிவிப்பு சத்தம் கேட்டது. 

அப்போது தெரியவில்லை நாம் வெளி உலகத்தோடு இருக்கும் தொடர்பினை இழக்கப் போகிறோம் என்று. மொபைல் போனில் சார்ஜ் குறைய ஆரம்பித்தது. பசி, பகலிலேயே இருட்டு என்று ஆன போது வெள்ளத்தின் உயரம் மிக அதிகம் ஆனது. நம் வீட்டிற்குள் வராது என்று இருந்த பலர் உள்ளே ஓடினர். மழை நின்று தான் இருந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி என்ன என்ன பொருள் எடுத்து பாதுகாக்க முடியுமோ அவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் போதே அந்த விபரீதம் தொடங்கி விட்டது. கக்கூஸ் வழியாக, வாசல் வழியாக என்று நாலாப் புறமும் தண்ணீர் வீட்டிற்குள் நுழைய எல்லோர் கண்ணிலும் ஒரு பயம் நுழைந்து கொண்டது. 

மாடி வீட்டிற்கு ஓடினோம். இரவெல்லாம் தூக்கம் இல்லை. நெட்வொர்க், கரண்ட் இல்லை. பக்கத்து பிளாட் மாமி சாப்பாடு கொடுக்க ஏதோ சாப்பிட்டோம் என்று பேர் பண்ணி விட்டு பயத்தை கட்டிப் பிடித்துக் கொண்டு படுத்தோம்.

சீக்கிரமே விடிந்தது பொழுது. இருண்டது வீடும், மனதும், எதிர்காலமும். கீழே இறங்கிப் பார்த்தால் எல்லாப் பொருளும் (தனித் தனி பட்டியல் தேவை இல்லை) மிதந்த வண்ணம். வெளியே ஏக கூச்சல். கையில் ஒரு குச்சியுடன் எல்லோரும் போவதைப் பார்த்து விட்டு நானும் போனேன் பால் வாங்க. அப்போது தான் தெரிந்தது பால் கிடைக்கவில்லை என்று. பல தெருக்கள் கடந்து நடந்து போனேன், எங்கள் வீட்டிற்கும் எதிர் வீட்டு 95 வயது தாத்தா பாட்டிக்கும் சேர்த்து இரண்டு மணி நேரம் வரிசையில் நின்று ஒரு பாக்கெட் 150 ரூபாய் கொடுத்து வாங்கினேன். ஒலிம்பிக் தங்க மெடல் வாங்கியது போல் தோன்ற நடக்க ஆரம்பித்தேன். மெயின் ரோட்டில் ஆயிரக் கணக்கானோர் தத்துப் பித்து போல் வாடிய முகத்தோடு நடந்து கொண்டிருந்தனர். 4 மெழுகுவர்த்தி 500 ரூபாய் அதுவும் வாங்கினேன். ஹிந்து பேப்பர் எதிர் வீட்டு தாத்தாவிற்கு வேண்டும் என்று வரிசை கட்டி அதிக பணம் கொடுத்து வீடு வந்து சேர்ந்தேன். இன்னும் ப்ரெட், பிஸ்கட் எல்லாம் தேவை. மீண்டும் போனேன் மகளுடன். ஆனால் பல கடைகள் அடைக்கப் பட்டன. ஓரிரு கடைகளில் ரங்கநாதன் தெருக் கூட்டம். ப்ரெட், பிஸ்கட், காண்டில், தோசை மாவு மட்டும் இல்லை என்று முதலாளி சத்தமாக சொன்னார். 

பேப்பர் பார்த்த போது வெளசரவக்கம், விருகம்பாக்கம், வடபழனி, கே கே நகர், அசோக் நகர், ஜாபர்க்கன்பெட், மாம்பலம், தி நகர், வேளச்சேரி, பள்ளிக்கரணை, முடிச்சூர், தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர் என்று எல்லா இடங்களும் வெள்ளம் என்று அறிந்த போது தொண்டை அடைத்தது. உறவினர்கள் நண்பர்கள் பத்திரமா என்று அறியமுடியவில்லை. போன் வேலை செய்யவில்லை, டிவி இல்லை, கரண்ட் இல்லை, நெட்வொர்க் இல்லை. போவோர் வருவோர் போட்ட பிட் தாங்க முடியவில்லை. இங்கே இப்படி. அங்கே அப்படி. முதல் மாடி போச்சு, இரண்டாம் மாடி போச்சு, என்றும், எல்லா சப்வேக்களும் மூடியது. போக வழி இல்லை - மக்களும் தண்ணீரும் என்றனர். மக்கள் நிருபர்கள் ஆக மாறினர். கடைக் காரர்கள் கொள்ளைக் காரர்கள் ஆகினர். அக்கம் பக்கத்தினர் நெருக்கமான உறவினர் ஆகினர். வீட்டு மனிதர்கள் போன், டிவி இல்லாத நிலையில் மனம் விட்டுப் பேசினர். இருப்பினும் நமக்கு நெருக்கமானவர்களின் ஷேம லாபம் தெரியவில்லை. மனம் பதறியது. அப்போது அங்கே இவர் இறந்தார். அவர் இறந்தார் என்ற செய்தி வேறு. 

அருகில் உள்ள ஆஸ்பத்திரிகள் மூடின சேவை ஆற்றமுடியாத நிலையில். எப்படியோ நீந்திக் கொண்டு எனது மைத்துனர்கள் மூவர் கைகளில் பற்பல மூட்டைகளுடன் வந்து எங்களைப் பார்த்து கட்டிப் பிடித்து கண்ணீர் விட்டனர். நாங்களும் மனம் உருகி அழுதோம். நீங்கள் உயிரோடு இருக்கிறீர்களே என்றனர்.
வீட்டிற்குள் நுழைய முடியவில்லை. 'எல்லாம்' கலந்த புண்ணிய நீர் துர்வாசம் தாங்க முடியவில்லை. இருப்பினும் என்ன என்ன போயிற்று, இன்னும் என்ன காப்பாற்ற முடியும் என்று செயல்பட்டுவிட்டு வாசலில் உட்கார்ந்து சிற்றுண்டி கொண்டோம். வீட்டைப் பூட்ட முடியவில்லை. இருப்பினும் ஏதோ அழுத்தி சாத்தி விட்டு மைத்துனர் காரில்  (இல்லை மோட்டார் வைத்த போட்) ஏறி மனமே இல்லாமல் வீடு துறந்து புறப்பட்டோம் அகதிகள் போல. ஏற்கனவே 5 நாட்கள் குளிக்கவில்லை. துணி மாற்றவில்லை. குறைவாக சாப்பிட்டு, குறைவாக நீர் குடித்ததால் கழிவறை கூட சரியாக போகவில்லை என்ற நிலையில் புறப்பட்டோம். 

ஒரு கட்டம் தாண்டிய பிறகு உலகமே வேறு. கரண்ட் இருக்கிறது. வெளிச்சம் இருக்கிறது. அங்கே அவர் வீட்டில் நுழைந்ததும் மொபைல் போன்களை சார்ஜில் போட்டோம். பாதி சார்ஜ் ஆகும் போதே சத்தம் தாங்க முடியவில்லை. அத்தனை செய்திகள். அழைப்புகள். மணி ஆயிற்று. டிவி பார்த்த போது, சீ...நமது இழப்பு ஒரு இழப்பா? இங்கே பார் மக்களை எவ்வளவு அல்லல் படுகிறார்கள் என்று புரிந்தது. முக்கிய நபர்கள் போனை அழைத்து நாங்கள் பத்திரம் என்று சொன்னோம். நள்ளிரவைத் தாண்டிய நேரம். தூக்கமே வரவில்லை. பயம், வெறுமை தான் இருந்தது. இருப்பினும் மனம் பிரார்த்தனையில் ஈடுபட்டது. இவ்வளவு கருணையா இறைவா எங்கள் மீது? நஷ்டம் பொருளுக்கு தானே/ பிழைத்த நிலையில் நாங்கள் நல்லபடி. வேறு என்ன வேண்டும். எல்லாமே இழந்தாலும் நம்பிக்கை மீதி இருந்தது. 

காலை டிவி பார்த்த போது ஒரே கூச்சல், அழுகை, கூக்குரல், விவாதங்கள் ஒரு புறம், மறுபுறம் மக்களைப் பாதுகாத்து காப்பாற்றும் ஏராளமான இளைஞர்கள், தன்னார்வ தொண்டர்கள், உணவுப் பொட்டலங்கள், தண்ணீர், உடை, பாய், போர்வைகளுடன் வண்டிகள் கேரளா, கர்நாடகா என்று எங்கிருந்தோ வந்த வண்ணம் போன வண்ணம் இருந்ததைக் காண முடிந்தது. இப்போது போன் மட்டுமா புல் சார்ஜ், நாங்களும் தான். ஓலா அழைத்த போது அதிர்ஷ்ட வசமாக ஒரு காப் கிடைக்க மீண்டும் வீடு வந்து சேர்ந்தோம்.

மீதம் அடுத்த பதிவில்....

No comments:

Post a Comment