Saturday, December 12, 2015

Chennai rain - part 3

அனுபவம் என்பது யாதெனக் கேட்பின் - பார்ட் 3
டாக்டர் பாலசாண்டில்யன் 

இனி நாம் கவலைப் பட வேண்டிய தேவை இல்லை. எல்லோருக்கும் இழப்பு. நமக்கும் இழப்பு என்ற நினைப்போடு புறப்பட்டேன். வீதிகளில் வெள்ளம் ஓரளவுக்கு வடிந்து இருந்தது. 

இறந்து போய் தகனம் செய்ய முடியாத எனது ஆசான் திரு டாக்டர் விக்கிரமன் ஐயா உடலைப் பார்த்து விட்டு, குடும்பத்தாரோடு பேசி ஆறுதல் சொல்லி விட்டு, சிறு சிறு உதவிகள் செய்து விட்டு புறப்பட்டேன்.- எங்கள் ஏரியாவில் இருக்கும் இன்னும் சில மிக வயதானவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று காண. டிவி நடிகர் எஸ் வி எஸ் குமார், பிரிகேடியர் துர்காபாய், சாந்தா வரதராஜன் என்று பலரைப் பார்த்து நலம் விசாரித்து விட்டுத் திரும்பும் போது அந்த முதியோர்களின் கண்ணீர் மனம் பொறுக்க வில்லை.

இதற்கிடையே டிவி மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் பார்த்த கேட்ட விஷயங்கள் நிச்சயம் மனதுக்குள் ஒரு குப்பை லாரியை இறக்கி விட்டது போல் ஆயிற்று. அத்தனை ஏகத்தாளம், விமர்சனம், ப்ளேம் கேம், வேண்டாத பழி சுமத்தல்கள், ஜோக்குகள், வீடியோக்கள், புரளிகள், ரமணன் போல அடுத்து வருமா என்ற யூகங்கள் சீ சீ என்று ஆகும் போது, சில நண்பர்கள் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் என்பதால் அவர்கள் க்ரூப்பில் விடுமுறை விடலாமா, வீட்டிற்க்கு ஊழியர்களை அனுப்பலாமா, எந்த ரூட்டில் மழை வெள்ளம் இல்லை, எங்கு இன்னும் மழை பெய்கிறது போன்ற தகவல்கள் விவாதப் பொருள் ஆனது.

Relief, Restore, Rehabilitate என்ற அடிப்படையில் போக முடியாமல், கிட்டத்தட்ட 17 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் இருக்கிறார்கள் - உயிரோடு - பாதுகாப்போடு - ஆனால் அரை வயிற்றோடு, முழு பீதியோடு, குளிக்காமல், உடை மாற்றாமல் என்கிற செய்தி ஒரு பக்கம் வர ஆரம்பிக்கும் போதும், நிவாரணப் பொருட்கள் குவிந்த வண்ணம் இருந்தன. முகநூலில் மழை கவிதை நின்று, மழைக் கவலை கூட நின்று, ஒவ்வொருவரும் எங்களிடம் இவ்வளவு உணவு இருக்கிறது, யாருக்கு வேண்டும், இங்கே அணுகவும் என்றெல்லாம் வர ஆரம்பித்தது. 

உணவு தவிர மக்களுக்கு தேவைப்பட்ட உடை, போர்வை, மருத்துவ சேவை, குடிநீர், என்று மக்கள் பல திசைகளில் திரட்ட ஆரம்பித்தனர். அவற்றை கொண்டு தேவைப்பட்ட இடங்களுக்கு கொண்டு சென்றனர். இந்த சேவையில் நடிகர்கள், தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள், வியாபார நிறுவனங்கள், காவல் துறை, அரசியல் கட்சி உறுப்பினர்கள் என்று எல்லோரும் இறங்கி வேலை செய்தனர். சிலர் கடமையோடு, சிலர் கனிவோடு, சிலர் விளம்பரம் பெறும் எண்ணத்தோடு, சிலர் ஆதாயம் தேடும் நினைவோடு. இருப்பினும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய என்பதே இங்கு முக்கியம் ஆனது. 

அடுத்து தொடங்கியது என்ன என்ன பொருட்கள் சேதம் ஆனது, எவ்வளவு பேர் உயிர் இழந்தனர், எத்தனை பேர் பணம், பொருள், உடை, உணவு நன்கொடை கொடுத்தனர் என்கிற பட்டியல் வெளிவரத் தொடங்கியது. பிரபலங்கள், நடிகர்கள், தொழில் அதிபர்கள், நல்ல உள்ளம் படைத்த தனி நபர்கள் என்று தனிப்பட்ட முறையிலும் அரசு மூலமும் தமது நிதி உதவிகளைக் குவிக்க ஆரம்பித்தனர். 

பிரதமர், முதல்வர், அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் வருகை புரிந்து நிலைமை தனை கணிக்க ஆரம்பித்தனர். இன்னும் எங்கே மழை பொழிகின்றது, இன்னும் மழை சென்னையில் வருமா? ஏன் இந்த வெள்ள சேதம் ஏற்பட்டது, நீர்நிலைகள் எப்படி சரியாக பராமரிக்கப்படவில்லை, அடுத்த மாநிலங்கள் எவ்வளவு உதவினர் போன்ற செய்திகள் முன்னிலை வகித்தன. 

இன்னும் சில இடங்களில் தண்ணீர் வடியவில்லை, சாலைகளில் திடீர் பள்ளங்கள் தோற்றம், போக்குவரத்து நெரிசல், எங்கு இன்னும் மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற செய்தி முக்கியம் ஆனது. ஆனால் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் போது முதலில் முண்டி அடித்து வாங்கியது அதிகம் பாதிக்காதவர்களே என்று காணும் போது கோபம் வந்தது. அதிலும் எனக்கு வரவில்லை உனக்கு வரவில்லை என்று புலம்பல் வேறு. அடித்துப் பிடுங்குவது, அள்ளிக் கொண்டு ஓடுவது என்று மக்களின் அரக்க குணங்களை வெளிப்படுத்தியது. பாதிக்காத மாடி வீட்டு ஜனங்கள் கர்வத்தோடு சிலர், ஏதோ அவர்களும் கஷ்டப்பட்டது போல போன் செய்து புலம்புவது எல்லாம் பார்த்த போது சிரிப்பு தான் வந்தது. 

வெளியூர் சாலைகளில் சுங்க வரி ரத்து ஆனது. நிறைய பேர் வெளியூர் கிளம்பினர். மூன்று மாவட்டங்களில் பஸ்ஸில் செல்ல அரசு இலவசம் என்று அறிவித்தது. கரண்ட் வராத மக்கள் ஆங்காங்கே மறியல் செய்த போது சில துணிச்சல் அதிகாரிகள் உங்கள் தெருவில் தண்ணீர் வடிந்தால் தான் மின்சாரம் தருவோம் என்று உறுதியாக சொன்ன போது சில இடங்களில் அது அரசியல் ஆக்கப்பட்டு சில பிரபல தலைவர்கள் வலம் வந்து குரல் கொடுத்தனர். ஆக்கப் பொறுத்த மக்கள் ஆறப் பொறுக்காமல் கொதித்து எழுந்தது காண முடிந்தது. 

கடைகள் திறந்தன. பொருட்கள் வர ஆரம்பித்தன. சில கடைகளில் வீண் ஆன பொருட்களை வெளியில் வீசி எறிந்தனர். சில VIP க்கள் இறந்த செய்தி ஒரு பக்கம். காய் கறி விலை அடாவடியாக விற்றது சற்று மனமிறங்கி விலை தலை தாழ்த்தியது. உறவினர்கள் வந்து பார்வை இட்டனர். சிலர் உதவி வேண்டுமா என்று தொலை பேசினர். நண்பர்கள் நலம் விசாரித்து தமது கதைகளையும் பகிர்ந்து கொண்டனர். ரேஷன் கடைகள் எல்லாம் காலியாக காட்சி தந்தது. பொருட்கள் எல்லாம் சேதம், சர்வ நாசம். மக்கள் அலுவலகம் போக ஆரம்பித்தனர். இதெல்லாம் வீட்டை சுத்தம் செய்து, பல உடைமைகளை - தமது கனவுகளை குப்பையாக - நாற்றம் கொண்ட சத்தையாக விட்டு எறிந்தனர். வயிறு எரிந்தது. இருந்தும் என்ன பயன்? 

தெருக்களில் இன்னும் குப்பை அள்ளப் படவில்லை. எங்கே கொண்டு கொட்டுவது? யார் அவற்றை அள்ளுவது? டன் கணக்கில் குப்பை ஒவ்வொரு தெருவிலும் - அவை குப்பை கூளம் அல்ல - படுத்து இருந்த கட்டில், மெத்தை, தலையணை, நாற்காலி, பெட்டி, பீரோ என்று பார்த்து பார்த்து ஆசையாக வாங்கியவை - நாற்றம் அடங்கவில்லை. மன ஆற்றாமையும் தான். இந்த நிலையில் தொற்று நோய் வராமல் தடுக்க அங்கங்கே மருத்தவ முகாம்கள், இலவச மருந்துகள் வழங்கப்படுவதைப் பார்க்க முடிந்தது. 

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவரேனும் வெளி நாட்டில் இருப்பதால் அங்கு வசிப்பவர் மனம் வாடி துன்பம் மிகுதியால் பணம் அனுப்பத் தயார் என்ற செய்தி அனுப்ப ஆரம்பித்தனர். சில நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு இயன்ற சலுகைகளை அறிவித்தது. பல ரயில்கள் ரத்து ஆகி இருந்த நிலை மாறி புறப்பட ஆரம்பித்தது. விமான நிலையம் மீண்டும் வெளிச்சம் கொண்டது. 

இன்னும் அடுத்த பதிவில்...

No comments:

Post a Comment