Monday, June 19, 2017

Dr. Baskar about my book release function on 18th June 2017

நண்பர் பாலசாண்டில்யன் அவர்களின் ‘தினம் ஒரு நண்பர் – கற்றதும் பெற்றதும்’ புத்தக வெளியீட்டுவிழாவும், அவரது விஷன் அன்லிமிடெட் நிறுவனத்தின் பத்தாம் ஆண்டு விழாவும் இன்று சென்னை திருவல்லிக்கேணியில், என் கே டி முத்து ஹாலில் (ஐஸ் ஹவுஸ் அருகில்) நடைபெற்றது. இன்று பாலாவின் பிறந்த நாளும் கூட –
திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் புத்தகத்தை வெளியிட, தொழிலதிபர் திரு முரளி ஸ்ரீனிவாசன் மற்றும் முனைவர் மேகநாதன், திரு என்.பஞ்சாபகேசன், ஆடிட்டர் என் ஆர் கே, மரு. பாஸ்கரன் ஆகியோர் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.
பாலாவின் மகள் சுபீக்‌ஷா இறைவணக்கப் பாடல் – நேராகக் கலைவாணி வந்திறங்கியதைப் போல இருந்தது. வளமான சாரீரமும், மனமுருகிய பாவமும் மிக அருமை.
வெற்றிவிடியல் ஸ்ரீனிவாசன், உதயம் ராம், பஞ்சாபகேசன், முரளி ஸ்ரீனிவாசன், வசந்தி ரெங்கனாதன் ஆகியோர் புத்தகத்தையும், பாலா என்னும் மனித நேயப் பண்பாளரையும் வாழ்த்திப் பேசினர்.
தலைமை உரையில் லேனா, தெரிந்த பெயரில், வித்தியாசமான கோணத்தில் எழுதப்பட்டுள்ளது இந்த நூல் என்றார். நண்பர்களை எவ்வளவு ஆழ்ந்த அன்புடனும், அணுக்கமாகவும் புரிந்துகொண்டிருக்கிறார் பாலசாண்டில்யன் என வியந்தார்.
ஏற்புரையில் தன் வழிகாட்டிகள், ஆசான்கள், நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி சொன்னார் பாலா. வெற்றிகளின் பின்னால் தன்னைத் தாங்கிப் பிடிக்கும் தன் குடும்பத்தினருக்கும் நன்றி சொன்னார் ( புத்தகத்தின் அட்டைப் பட வடிவமைப்பு அவரது இன்னொரு மகள் சுபாஷிணி )!
விழாவின் இரண்டாவது பகுதியாக, ஒரு ’மினி’ கருத்தரங்கம் – பெண்களும் வர்த்தகமும் (டாக்டர் வசந்தகுமாரி), மருத்துவம் இன்று, நாளை (டாக்டர் பாஸ்கரன்), பயிற்சித்துறை (NLP ராமசுப்ரமணியம்), இசை இந்தியாவில் – அயல்நாட்டில் (டி எஸ் ரங்கநாதன்), நிறுவங்கள் இன்று நாளை (Lean ஆர்.துரைசாமி), இளைஞர்கள் இன்று நாளை (NKT ஜெயகோபால்) ஆகிய தலைப்புகளில் ஒரு மினி அலசல் சொற்பொழிவு நடந்தது.
மதிய உணவு வழங்கப்பட்ட பின்பு, கூட்டம் நிறைவடைந்தது.
இந்தப் புத்தகத்தில் 58 நண்பர்களைப் பற்றி, சுருக்கமாக (இரண்டு பக்கங்களுக்குள்) குறிப்பிடுகிறார் பாலா. அவர்களின் நல்ல பண்புகள், சமூகத்தில் அவர்களின் பங்கு, அவர்களிடமிருந்து தான் கற்றுக்கொண்டவை என எளிய நடையில் எழுதிச் செல்கிறார்.
அவருக்கு இருக்கும் நட்பு வட்டத்துக்கு, இன்னும் இரண்டு மூன்று தொகுப்புகள் வரும் என்பது என் கணிப்பு!
வாழ்த்துக்கள் பாலா!

No comments:

Post a Comment