Wednesday, June 28, 2017

Gratitude

அந்த நாலு பேருக்கு நன்றி - குரு
- டாக்டர் பாலசாண்டில்யன் - Bhaskaran JayaramanG Vittal Rao
கற்க வேண்டும் என்ற வேட்கை 
கடலெனப் பெருகும் போது 
கண்முன் தோன்றுகிறார் ஒரு குரு 
எவரையும் சங்கடப்படுத்துவது மனஇருள் 
எல்லையின்றி மேம்படுத்துவது குருஅருள் 
நிற்க, நடக்க, உண்மை பேச, உழைக்க, உயர்வு பெற நிழல் போல் உடனிருந்து வழிநடத்திய முதல்குரு அப்பா தமிழும் இசையும் அன்பும் பாலுடன் புகட்டிய அம்மா தெளிவு,முதிர்ச்சி, எதையும் எதிர்பாரா அன்பு என்று எத்தனையோ கற்றுத்தந்த மனைவி அறிவூட்டி அறம்காட்டி ஆளுமை புகட்டிய அளவிலா ஆசான்கள் அனைவரும் உயர்வுக்கு ஏணிகள் 
ஆர்வம் இருந்தால் கற்பது இயற்கை 
அற்புதப் பாடங்கள் கற்பிப்பது 'இயற்கை' !!
தொட்டில் முதல் பாடைவரை தொடர்ந்தளிக்கும் மரங்கள் எதிர்கால சேமிப்பை எடுத்துரைக்கும் எறும்பு கதிரவனை கூவி எழுப்பும் காலைச் சேவல் 
எப்போதும் சுறுசுறுப்பாய் பறக்கும் பட்டாம்பூச்சி 
வாழ்வின் வண்ணங்களை விளக்கிவளையும் வானவில் சுமை எதுவானாலும் முகபாவம் மாற்றாத கழுதை பாரபட்சமின்றி பயனளிக்கும் காற்று, மழை பெறுவதெல்லாம் வழங்கத்தான் என்று சிரிக்கும் பூக்கள் எதுவானாலும் பகிர்ந்துண் என பரிந்துரைக்கும் காகம் 
எது எழுதவும் யார் எழுதவும் அனுமதிக்கின்ற காகிதம் நாளும் பற்பல கற்பிக்கும் அனைத்துமே குருமார் தான். புன்னகையில் வலி நீக்கும் மருத்துவ நண்பர் டாக்டர் பாஸ்கரன் 
உழைப்பில் முன்னேறு எனச் சொல்லும் உதயம்ராம் எழுத்தால் முன்னேறு என்றுரைக்கும் விக்கிரமன் ஐயா புன்னகையே வெற்றி எனப் பறை சாற்றும் Dr ஜி வி ராவ் 
பணிவுடன் சேவை தொடரும் பாங்குத் தலைவர் SVR, வயது வலி பாராட்டாது உழைத்து நிற்கும் Dr நடராசன் பயபக்தியுடன் பணியும் உதவியும் செய்யும் NRK வழங்குவதே வளர்ச்சி என உணர்த்தும் கார்முகிலோன் 
நீளுகின்ற இப்பட்டியலில் சேர்த்தது குறைவு, குறைத்தது அதிகம் 
அனைவருக்கும் நன்றி நவிலும் போது ஆன்மா நிறைகின்றது அடுக்கிக் கொண்டே போனால் அடுத்தவர் நேரம் குறைகின்றது 
அதனால் சுருக்கினேன் என் குருமார் பட்டியல் 
அன்பைப் பெருக்கினேன் என் மனத் தொட்டியில் 
நெஞ்சத்து உணர்வுகள் அனைத்தையும் அடக்கிவிட முடியுமா "நன்றி" என்கிற ஒரு வார்த்தையில் !ஆயிரம் முறை சொன்னாலும் அடங்கிவிடுமோ ஆற்றாமை மனதின் பேராவல் !!
சிரம் தாழ்த்துகிறேன் ...கரம் கூப்புகிறேன் 
சேர்த்து வைத்த நன்றிப் பெருக்கை திறந்துவிடுகிறேன் மன அணையிலிருந்து !
ஓடி வந்து நனைக்கட்டும் ஒவ்வொருவர் பாதங்களையும் ..!!

No comments:

Post a Comment