Monday, July 21, 2025

அரவு பூண்டவனை

 அரவு பூண்டவனை அனுதினம் பூசித்தால்

அயர்வு நீங்கும் உயர்வு ஓங்கும் (அரவு)
துறவு மன்னனைத் தூயவன் என்றிட்டால்
குலம் பிழைக்கும் நலம் தழைக்கும்
பிறவிப் பயனவன் பிணிகள் தீர்ப்பவன்
பிறை சூடிய பெருமான் சிற்றம்பலனை ( அரவு)
சபைக்கு வருபவர் சங்கடம் தீரும்
கிருபை பெற்றவர் பாவங்கள் போகும்
திருநீர் அணிந்தவர் நோய்கள் அகலும்
திருநாமம் சொல்பவர் பயங்கள் விலகிட (அரவு )
விருந்து மாவான் மருந்து மாவான்
வினை தீர்க்கும் விஸ்வநாதப் பெருமான்
வில்வ மாலையில் வீற்றிடும் லிங்கன்
விடமுண்ட கண்டன் வீரியம் தருமந்த ( அரவு)
- டாக்டர் பாலசாண்டில்யன்

வானவில்லாக வா

 வானவில்லாக வா

மலையும் நதியும்
மனதைக் கிறங்கடிக்கிறது
மனங்குளிர நீ வருவாய் என
மனதாரக் காத்திருந்தேன்
வரவில்லை நீ...
உனைப் பற்றிய தகவலும் தான்...
நீ வராது போனதால்
மனம் அசையாமல் அப்படியே நின்றது
மரத்தில் கட்டிய ஊஞ்சல் போல...
வரவில்லை நீ வெகு நேரமாகியும்
வரவில்லை எந்தன் நெஞ்சில் மூச்சும்...
இறங்காமல் அங்கே காத்திருப்பேன்
இரக்கமிருந்தால் ஏறி வா அன்பே...
நிலவு தெரிகிறது..
நிலவை நிலவென்று சொல்ல மாட்டேன்...
உன் முகம் பார்த்த பிறகு...
வானவில்லாக வந்து போ வண்ணம் சேர்க்க...
எனையே நான் உயிரோடு பார்க்க...!!
- பாலசாண்டில்யன்

குளமானது என் கண்கள்

 குளமானது என் கண்கள்

ரா ஒன் படத்தில் வரும் "பரே நயனா" - விஷால் சேகர் இசையில் வந்த பாடலை நந்தினி ஸ்ரீகர் பாடி நம்மை உணர்ச்சிக்கடலில் ஆழ்த்துவார். அதன் (சற்றேறக்குறைய) அர்த்தம் தமிழில் இதோ...
- பாலசாண்டில்யன்
ஏன் என்னிடம் பேசவில்லை
உன் மூச்சின் நிறுத்தமா
என் மீதுதான் வருத்தமா
எப்படி உனைநான் உயிர்ப்பிப்பேன்
எப்படி உன் பேச்சிலினி லயித்திருப்பேன்
ஏன்.. என்னிடம் சொல் சொல்...
இங்கே நீ இல்லாமல் என்
இதயம் எங்கே துடிக்கிறது - பிளந்து
இரண்டாய் வெடிக்கிறது
தேடுகின்றன ஓடுகின்றன - அலை
பாய்கின்றன அழுது ஓய்கின்றன
என் கண்கள்... குளமான என் கண்கள்...
இதயம் செய்வதைக் கண்களும்
கண்கள் காண்பதை இதயமும்
ஏற்றால் தானே இந்த நீர் வடியும்
கண்ணீரில் கண்கள் குளமான என் கண்கள்...
மென்மையான உன் ஸ்பரிசம்
கதகதப்பான உன் சுவாசம்
இங்கிருக்கும் சப்தத்தில் வாசனையில்
உடைந்து போனது எனைக் கடந்து போனது..
எத்தனை வழிகளில் முயற்சிப்பேன்
என்னவனே உனை மீட்டெடுக்க
இங்கில்லாத உன்னை எங்கும் உணர்கிறேன்
இதயம் துடிதுடிக்க அதனால் தேடுகிறேன்
இல்லாத உன்னை அணைத்துக் கொள்கிறேன்
இருப்பது போலவே நினைத்துப் பார்க்கிறேன்
தேடுகின்றன ஓடுகின்றன - அலை
பாய்கின்றன அழுது ஓய்கின்றன
என் கண்கள்... குளமான என் கண்கள்...
நீ போகிறாய்... போ
என்னில் ஒரு துளி உன்னுடன்
கொண்டு போ... நீ தனியாக ஏன்...
இதயம் சொல்வதைக் கண்களும்
கண்கள் காண்பதை இதயமும்
ஏற்றால் தானே இந்த நீர் வடியும்..
கண்ணீரில் கண்கள்... குளமான என் கண்கள்
ஏன் என்னிடம் பேசவில்லை
உன் மூச்சின் நிறுத்தமா
என் மீது தான் வருத்தமா..?

Yeh dil tho ithna paagal Hai - Tamil version by Balasandilyan

 முட்டாள் மனது ரொம்ப முட்டாள் மனது - எத்தனை

முட்டிக் கொண்டாலும் உன்னை ஏற்றும் இறக்கும்
முட்டி மோதி மீண்டும் உன்னை அதில் ஏற்றும்
முனகி ஓடிடும் உன்னை என் மனம் தாங்கிச் சுமக்க
முட்டாள் மனம் அது வீணாய் தினம் ஏங்கித் தவிக்க ....!
எங்கே நீ போனாலும் என் மனம் அங்கே தான் புரியுமா ?
என் பேச்சை அது கேட்காது உனக்கது சற்றும் தெரியுமா ?
மனமெனும் வாகனம் பயணம் போக வீதி
எங்கே உண்டு ?
மனதை கட்டி வைக்க ஒரு விதி தான்
எங்கே உண்டு ? (முட்டாள்)
நிற்காது நீ போ எனக்குக் கவலையில்லை ஏனோ
நிற்கும் என் மனம் ஓடும் புது தூங்காவனம் தானோ
நிழல் தான் உனது எந்தன் மனது முட்டாள் மனது
நீங்காது அது உனை விட்டு சிறிது ஒரு பொழுது (முட்டாள்)
உன் மனம் வேறு என் மனம் வேறு புரியாததற்கு
உன்னுள் உறைவது எந்தன் நினைவு தெரியாததற்கு
உயிரே இரண்டு என்றாலும் மனங்கள் இணைந்த ஒன்று
உனக்குள் இருக்கும் என்னைச் சுமக்கும் காதல் தினம் தின்று (முட்டாள்)
- டாக்டர் பாலசாண்டில்யன்

Jiye toh jiye kaise haye bin aapke"- My tamil translation

 வாழுவேன் வாழுவேன் எப்படி...

நீ இல்லாமல் நான்...
மனம் ஏற்குமா சொல்
நீ இல்லாத நாள்...
நீயில்லா வாழ்வெப்படி
நிலை சொல்ல முடியாதடி.
சாபத்தை தண்டனையை
வர்ணிக்க சொல்லேதடி...
எனக்கொரு முடிவுண்டு
நீயின்றி நானில்லையென்று...
விஷமென்றாலும் பருகிடுவேன்
வலியென்றாலும் தாங்கிடுவேன்
எந்நிலையிலும் நான் வாழ்ந்திடுவேன்
பிரிவின் வலியிது வேண்டாமடி...
நீயின்றி வாழ முடியாது
நீரின்றி ஒரு நதி கிடையாது...
எனைப் பார்த்த உன் விழிகள்
தரை பார்த்தது
நீ செய்த புன்னகை மனதில்
நீங்காதிருக்குது...
எப்படி மறப்பேன் உன்
பார்வையை புன்னகையை
எப்படி மறப்பேன் அந்த
இரவின் சந்திப்பை...
வாழுவேன் வாழுவேன்
எப்படி
நீ இல்லாமல் நான்
மனம் ஏற்குமா சொல்
நீ இல்லாத நாள்...
Impeccable impact created by "Jiye toh jiye kaise haye bin aapke"
- பாலசாண்டில்யன்

My composition as a video - music by AI

 https://youtu.be/SU-F9CiuH_g?si=6scDFdkPLyuVZjZ7

எனது மற்றும் ஒரு பாடல் வீடியோ வடிவில். நன்றி மின்கைத்தடி மற்றும் திரு உமாகாந்த் சார்

எனது கனவை உனது கனவாய் எண்ணி உணர்ந்து
நனவாய் ஆக்கி மகிழ்கின்றாய்...
அப்பா எல்லாம் நீயே சகிக்கின்றாய் ...
எம்மிடம் எதை நீ உரைக்கின்றாய் ...?
உன்னிடம் ஆடை குறைவாய் இருப்பதுவா
உன் கவலை
எமக்கு குறையே இன்றி இருப்பது தானே உனது கவலை
கடைகள் சென்றாலும் வாங்குவது
என்னவோ எமக்குத் தானே
அப்பா எல்லாம் நீயே சகிக்கின்றாய் ...
எம்மிடம் எதை நீ உரைக்கின்றாய் ...?
சுகமோ துக்கமோ உன் கண்களில்
என்றும் தெரியாது
சுகமே யாம் பெற பிரார்த்தனை, உன்
மனம் வேறு அறியாது
கோபமாய் யாம் பேசினால் புன்னகை
தானே உனது பதில்
அப்பா எல்லாம் நீயே சகிக்கின்றாய் ...
எம்மிடம் எதை நீ உரைக்கின்றாய் ...?
எமக்காக நீ உன் உயிர் விடக் கூட தயங்க மாட்டாய்
எவர் வந்தாலும் எதிரில் எமக்கிடர் வந்திட
விட மாட்டாய்
எமை நோக்கி ஒரு தூசி வந்தாலும் இமை
போல் நீ காக்கின்றாய்
அப்பா எல்லாம் நீயே சகிக்கின்றாய் ...
எம்மிடம் எதை நீ உரைக்கின்றாய் ...?

Saturday, August 24, 2024

ஒரு வரிக்கதைகள்:

 ஒரு வரிக்கதைகள்:

பாலசாண்டில்யன்
என்னுடைய பழையவை என்னை அழிப்பதற்குள் ஏதாவது செய்ய வேண்டும்.
---_--------
யார் அவள்... இந்த தொடர்சிந்தனை நெஞ்சை அழுத்தும் போது வருமா உறக்கம்?
-----------
வருவதெல்லாம் தங்குவதில்லை. அப்படித்தான் நீயும். ஆனால் உன் நினைவுகள் குளத்துப் பாசி போல..
_-------
உனக்கும் இரண்டு கண்கள் தான். ஆனால் உன் பார்வை வேறாயிற்றே...
--------
நான் உனக்கு முக்கியமென்று எப்படி அழுத்திச் சொல்வது.. தவிக்கிறது மனம்.
------------------------------
நம்பிக்கை அச்சாணியை உடைத்து விட்டு மன்னிப்பு கேட்கிறாயா...?!
--------------------------------------------
கடக்கத்தான் முயற்சிக்கிறேன் தூரத்தையல்ல... காலத்தை!
------------------------------------------------------
எனக்குள் நடக்கும் மனப்போராட்டத்தோடு புரண்டு புரண்டு படுத்தேன்.
------------------------------------------------