Monday, July 21, 2025

குளமானது என் கண்கள்

 குளமானது என் கண்கள்

ரா ஒன் படத்தில் வரும் "பரே நயனா" - விஷால் சேகர் இசையில் வந்த பாடலை நந்தினி ஸ்ரீகர் பாடி நம்மை உணர்ச்சிக்கடலில் ஆழ்த்துவார். அதன் (சற்றேறக்குறைய) அர்த்தம் தமிழில் இதோ...
- பாலசாண்டில்யன்
ஏன் என்னிடம் பேசவில்லை
உன் மூச்சின் நிறுத்தமா
என் மீதுதான் வருத்தமா
எப்படி உனைநான் உயிர்ப்பிப்பேன்
எப்படி உன் பேச்சிலினி லயித்திருப்பேன்
ஏன்.. என்னிடம் சொல் சொல்...
இங்கே நீ இல்லாமல் என்
இதயம் எங்கே துடிக்கிறது - பிளந்து
இரண்டாய் வெடிக்கிறது
தேடுகின்றன ஓடுகின்றன - அலை
பாய்கின்றன அழுது ஓய்கின்றன
என் கண்கள்... குளமான என் கண்கள்...
இதயம் செய்வதைக் கண்களும்
கண்கள் காண்பதை இதயமும்
ஏற்றால் தானே இந்த நீர் வடியும்
கண்ணீரில் கண்கள் குளமான என் கண்கள்...
மென்மையான உன் ஸ்பரிசம்
கதகதப்பான உன் சுவாசம்
இங்கிருக்கும் சப்தத்தில் வாசனையில்
உடைந்து போனது எனைக் கடந்து போனது..
எத்தனை வழிகளில் முயற்சிப்பேன்
என்னவனே உனை மீட்டெடுக்க
இங்கில்லாத உன்னை எங்கும் உணர்கிறேன்
இதயம் துடிதுடிக்க அதனால் தேடுகிறேன்
இல்லாத உன்னை அணைத்துக் கொள்கிறேன்
இருப்பது போலவே நினைத்துப் பார்க்கிறேன்
தேடுகின்றன ஓடுகின்றன - அலை
பாய்கின்றன அழுது ஓய்கின்றன
என் கண்கள்... குளமான என் கண்கள்...
நீ போகிறாய்... போ
என்னில் ஒரு துளி உன்னுடன்
கொண்டு போ... நீ தனியாக ஏன்...
இதயம் சொல்வதைக் கண்களும்
கண்கள் காண்பதை இதயமும்
ஏற்றால் தானே இந்த நீர் வடியும்..
கண்ணீரில் கண்கள்... குளமான என் கண்கள்
ஏன் என்னிடம் பேசவில்லை
உன் மூச்சின் நிறுத்தமா
என் மீது தான் வருத்தமா..?

No comments:

Post a Comment