Monday, November 29, 2021

காதல் கடல்

 

காதல் கடல் 

குறுங்கதை 

- பாலசாண்டில்யன் 

 

ரேணு அந்த தாடிக் கிறுக்கனுடன் மால், தியேட்டர், ஹோட்டல் என்று ஓயாமல் சுற்றுவதைப் பார்த்து விட்டு சும்மா இருக்க முடியவில்லை காளையனுக்கு.  

 

ரேணுவை இவன் ஒன்றும் காதலிக்கவில்லை. இருந்தாலும் 'என் முறைப்பெண்ணை வேறு ஒருத்தன் எப்படி காதலிக்கலாம்' என்ற பொறாமை மனதை ஏதோதோ சிந்திக்க வைத்தது.

 

"ஏண்டா காளை, என்ன எப்போ பாத்தாலும் மூஞ்சியை தூக்கி வெச்சுகிட்டு இருக்கே? பகல்ல குடிக்கிறே ! என்னாச்சு உனக்கு?" இவனுக்கு தனது அம்மாவிடம் உண்மைய சொல்லவும் முடியல, மெல்லவும் முடியல.

 

"மாமா, எனக்கு எப்போ ரேணுவ கட்டித்தர போறே?" நேரடியா கேட்டான். மாமா, "அவ இப்போ தான் படிக்கிறா, கொஞ்சம் நாள் போவட்டும், எவ்வளவு நாள் ஆனாலும் அவ ஒனக்கு தாண்டா மருமவனே!" என்றார்.

 

அவன் பாத்த உண்மைய போட்டுடைத்தான் காளை. இவன விட அதிகம் கோபம் கொண்ட மாமா "டேய் அவன் யாரா வேணா இருக்கட்டும் நீ அவன கண்டம் துண்டமா வெட்டிட்டு வந்து விஷயத்த சொல்லு, உனக்கு ஒன்னும் ஆவாம பாக்கறதுக்கு நான் இருக்கேன்." அதுக்குத் தான் காத்திருந்தது போல புறப்பட்டான் காளை.

 

கையும் களவுமா சிக்குனான் அந்த தாடிக்காரன் ரஞ்சித். கையில் இருந்த கழியால மண்டைல ஒரே போடு போட்டு அவன தூக்கி அந்த இன்னோவா வண்டில போட்டு கெளம்பினான் காளை

 

அத பாத்த ரேணு கதறினா. கூச்சல் போட்டா. ஒத்தாசைக்கு யாரும் வரல. பயங்கர மழை வேற. ரேணு கண்ணு அடுத்த வாரம் நம்ம கல்யாணம்னு கத்திப்புட்டு  வண்டிய விரட்டுனான்.

 

வண்டி அந்த பலத்த மழையிலும் பாய்ந்து ஓடியது. கிட்டத்தட்ட கடலூரை நெருங்கினான். சிதம்பரம் வந்து அந்த ரைஸ் மில்லுல ரஞ்சித்தை முடிக்கறதா இவன் பிளான்

 

மேல இருக்கறவன் பிளானே வேறயா இருந்துச்சு. அந்த கடலூர் சிதம்பரம் பாதை வெள்ளம் சீறிப் பாயுற வண்டிய அப்படியே பொறட்டி பொறட்டி உருள வெச்சுது

 

காளை ரஞ்சித் ரெண்டு பேருமே ஓடுற தண்ணியில விழுந்து உயிருக்கு போராடி தோத்து போனாங்க. ரெண்டு பேருமே சீட் பெல்ட் போடல. அது தான் எமனோட கயிறுல சிக்க வசதியா போச்சு.

 

ரஞ்சித் என்ன ஆனான்னு ரேனுக்கு தெரியாது. காளை என்ன ஆனான்னு ஊருல மாமாவுக்கும் மத்தவங்களுக்கும் தெரியாது

 

ஓடுற வெள்ளக்காட்டுல புதைஞ்சு போனது ரெண்டு உசுரு மட்டுமல்ல. ரெண்டு பேரோட கல்யாண ஆசயும் தான்.

 

No comments:

Post a Comment