Wednesday, May 20, 2015

#Kamal# Hassan a genius

கமல்ஹாசனின் போற்றப்படாத படங்கள்

கமலின் போற்றப்படாத படங்களில் மிக முக்கியமானது அண்மையில் வெளிவந்த உத்தம வில்லன் ஆகும்.

கமல் அவர்களால் பணத்தைக் குவிக்கும் ஒரு சகலகலா வல்லவன், அல்லது விஸ்வரூபம் நடித்துத் தர  முடியும். இருப்பினும் பார்வையாளர்கள் அல்லது ரசிகர்கள் பாராட்டும் படமாக ஒரு அன்பே சிவம், ஹே ராம் இருந்ததில்லை; அது தான் அவரது துரதிர்ஷ்டம்.

காரணம், ரசிகர்கள் அந்தப் படங்களின் நுணுக்கங்களை உணர்ந்து ரசிக்க, கொண்டாடி மகிழ நேரம் ஆகிறது. படம் வந்து நான்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ரசிக்கும் ஒரு பாமரன் படம் வந்த உடன் இதை விட நல்ல படம் இவரால் தர முடியும், தனது திறமையை காட்ட முடியும், ஒரு 'மாஸ்' படம் ஏன் இவர் எடுப்பதில்லை எனும் குற்றச்சாட்டு சொல்லி விட்டு சும்மா இருந்து விடுவான்

இது வரை கமல் ரசிகர்கள் மற்றும் திரை உலக ரசிகர்கள் குறைந்தபட்சம் அவரது 10 படங்களை மிகச் சரியாகப் பாராட்ட தவறி இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்

இந்திய திரைப்பட வரலாற்றிலேயே மிக அருமையாக திரைக்கதை அமைக்கப்பட்ட ஒரு படம் தான் உத்தம வில்லன். ஒரு அறிவாளிந்தனம் இருந்தால் மட்டுமே பார்த்து புரிந்து ரசிக்க முடியும் என்பது போல் தான் உள்ளது இந்தப் படத்தின் ஒரே குறை. காஞ்சனா போன்ற எளிதான படத்தை பார்த்து ரசித்து விட்டு போகும் ஒருவரால் கடினமான விஷயத்தை மூளையை செலவு செய்து புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்று நினைக்கிறார்கள். படத்துள் ஒரு படம், அதனுள் ஆடல், பாடல், நகைச்சுவை, நடிப்பு, உணர்வு பூர்வ விஷயங்கள் என்று அள்ளி வழங்கி இருக்கும் கமலை என்ன சொல்லிப் பாராட்ட...!! ஒரு பிரபலமான நபர் தனது நிஜ வாழ்வில் என்னென்ன விஷயங்களை மிஸ் செய்கிறார், எப்படி அந்த விஷயங்களை கையாள்கிறார் எனும் விஷயங்கள் மனதை நெகிழ வைக்கிறது. கமல் சாருக்கு ஏதோ நோய் இருக்குமோ, அப்படி அவரை பின்னாளில் நாம் இழக்க நேரிட்டால் எப்படி நமது மனம் பாடுபடும் என்பதெற்கெல்லாம் ஒரு ஒத்திகை கொடுத்து விட்டார்.

மும்பை எக்ஸ்பிரஸ் (2005) - ஒரு நல்ல நகைச்சுவைப் படம், மகாநதி (1994) - ஒரு தனிநபரின் பல்வேறு சிக்கல்களை வெளிக்காட்டும் படம், அவள் அப்படித்தான் (1978) - பெண்கள் படும் பாட்டை விவரிக்கும் ருத்ரையா அவர்களின் படம், ராஜ பார்வை (1981) - கண் பார்வையற்றவராக தானே எழுதி, இயக்கி, தயாரித்து நடித்த மிக முக்கிய படம் - ஆனால் வசூல் தராத படம், விருமாண்டி(2004) - இந்திய பஞ்சாயத்து முறைதனை விளக்கும் படம் - ஒரு அடிதடி படம் என்று முத்திரை குத்தப்பட்டு நிராகரிக்கப்பட்டது, அன்பே சிவம்(2003) - அன்பு தான் கடவுள், மனிதனின் கடவுள் தன்மை என்பதை இதை விட யார் விளக்கி விட முடியும்? தன்னை முகவிகாரமாக காட்டிக் கொண்டு எவ்வளவு விஷயங்கள் சொல்லி இருப்பார் ? சுனாமி பற்றி அன்றே சொல்லி இருப்பார் இந்தப் படத்தில். அவர் ஒரு த்ரிகால ஞானி என்பதற்கு சான்று, ஆளவந்தான் (2001) - அன்றே அனிமேஷன் துறையில் மிக மிக அட்வான்ஸ் விஷயங்களை இந்தப் படத்தில் சொல்லி இருந்ததை யாருமே ரசித்துப் பாராட்டவில்லை. அயல்நாட்டு படத்திற்கு சமமான ஒன்று, ஹே ராம் (2000) - ஒரு படம் எப்படி எடுக்க வேண்டும் என்பதற்குரிய ஒரு பாடப் புத்தகம் இந்தப் படம் என்றால் மிகையாகாது, சர்வதேசத் தரத்தில் தயாரிக்கப் பட்ட ஒரு அருமையான படம், நிறைவாக குணா (1991) - மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல என்று ஆணித்தரமாக ஒரு காதலை எடுத்து வைக்கும் ஒரு அற்புத குணச்சித்திரப் படம், ஆனால் பாக்ஸ் ஆபீசில் ஜெயிக்க முடியாத ஒரு பாடம்

கமல் ஒரு காலத்தை கடந்து நிற்கும் கலைஞானி. அவர் சொன்னது பிறர் சொல்லுவர் சில ஆண்டுகள் கடந்த பிறகு. அன்று வேண்டாம் என்று ஒதுக்கிய ஒரு ரசிகன் பின்னாளில் அதே படத்தை உட்கார்ந்து அசை போட்டுப் பார்த்து ரசித்து மனதில் போற்றிப் பாராட்டுவான். அது தான் கமலின் மகிமை

அவரது படங்களை, அவரது பல்வேறு (ஆடல், பாடல், நடனம், இயக்கம், கவிதை, இசை, நளினம், நகைச்சுவை) திறமைகளை இருக்கும் போது விட்டு விட்டு பிறகு அவர் வாழ்ந்த நாளில் நாமும் வாழ்ந்தோம் என்று வசனம் பேசாது - அவரை ஒரு வாழும் வரலாறு என்று இன்றே போற்றிப் புகழ்தல் வேண்டும். இது காலத்தின் கட்டாயம். கமல் வெளிநாட்டில் பிறந்திருந்தால் நிச்சயம் ஒரு 10 ஆஸ்கார் விருதுகள் வாங்கி இருப்பார்

சினிமாவில் தொடங்கி,  வாழ்ந்து, கற்று, ஈட்டி, முதலீடு செய்து (நேரம் பணம் இரண்டையும்), சினிமாவிற்காகவே தன்னை அர்ப்பணம் செய்து கொண்டுவிட்ட ஒரு மாபெரும் கலைஞன் கமல் எனபதை இன்றே உணர்வோம். கண் கெட்ட பிறகு காலை வணக்கம்  போலத் தான் கமல் கெட்ட பிறகு கலை வணக்கம் என்பதும்

இன்றே போற்றுவோம் கமலின் கலையை அரிய அவர்தம் திறனை.

- டாக்டர் பாலசாண்டில்யன்  (Flixtub.com influence)


No comments:

Post a Comment