Saturday, May 16, 2015

Review of 36 Vayathinilae - Tamil movie

36 வயதினலே
படித்து விட்டு வேலையும் பார்க்கும் ஒரு பெண் குடித்தனம் புகுந்தவுடன் தனது இயல்புகளை திறமைகளை அளப்பரிய ஆற்றல்களை மூட்டை கட்டி மூலையில் வைத்து விட்டு மூளையை அடகு வைக்கிறாள்.
தனது கனவு தான் தனது கையெழுத்து என்பதை ஒரு டாக் லைன் ஆக கொண்ட ஒரு அற்புதமான படம்.
கணவன் பாத்திரத்தில் பொருந்தும் ரகுமான். மனைவி பாத்திரத்தில் பிறவியிலேயே பொருந்தும் ஜோ எனும் ஜோதிகா. என்ன பொருத்தம். நல்ல பாத்திரங்களில் மிளிரும் டெல்லி சார், தேவதர்ஷினி, பிரேம், சித்தார்த் பாசு, அபிராமி ஆகியோர்.
திருமணம் செய்து கொண்டால் ஒரு பெண் எதற்கும் லாயக்கற்ற - சமைக்கவும், துவைக்கவும் தானா என்று கேள்வி எழுப்பும் ஹொவ் ஓல்ட் ஆர் யு மலையாள படத்தின் ரீமேக்.
வாடி ராசாத்தி என்ற பாடலோடு தொடங்கி ஹாப்பி என்று படம் முடியும் வரை காண்பவர் அனைவரும் படத்தில் மட்டுமே கவனம் செலுத்தியதை கண்டு வியந்தேன். படம் முடிந்த பின்னரும் கிரெடிட் ஓடுகிறது. பார்வையாளர்கள் எழுந்திருக்கவே இல்லை. என்ன ஆச்சரியம்.
ஓரிரு கேள்விகள் நிச்சயம் எழாமல் இல்லை. வேலைக்கு போகும், படித்த பெண்ணுக்கே இப்படி அவமானம் என்றால் வீடே கதி என்று இருப்பவர்களின் கதி என்ன? அண்ணாமலை படம் போல ஓரிரு காட்சிகளில் ஒரு நபர் வெற்றி ரியல் வாழ்வில் வெற்றி பெற முடியுமா ? சீரியல் பார்க்கும் மாமியார் இத்தனை கரிசனம் மருமகள் மீது காட்டுகிறார்களா? ஓய்வு பெற்ற பிறகு அப்பாவிற்கு மரியாதை அம்போ தானா ? கொஞ்சம் கம்ப்யூட்டர் தெரிந்தாலே பெற்றோரை காறித் துப்புவார்களா குழந்தைகள் ?
இது கணவன் மனைவியுடன் பார்க்க வேண்டிய படம் என்றாலும் திரையரங்கில் ரொமான்ஸ் செய்ய இல்லை. வாழ்வை இன்னும் புரிந்து கொள்ள...
ஒவ்வொரு பெண்ணின் திறமையும் இப்படித்தான் நமது தேசத்தில் வீண் அடிக்கப் படுகிறது என்பதை பார்த்து ஸ்லாகித்து விட்டு வந்தால் போதாது. நிச்சயம் நம் வீட்டில் இருக்கும் அறிவாளி பெண்மணிகளுக்கு நினைத்ததை செய்ய ஆவன செய்து குடும்ப ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்பது படம் தரும் பாடம்.
அதே சமயம் சமீபத்திய விஜய் படம் விவசாயிகள் பிரச்சனைகளை பற்றி பேசுகிறது. இந்தப் படம் எத்தனை நச்சு கலந்த உணவு தனை நாம் சாப்பிட்டு வருகிறோம் என்பதைப் பற்றி பேசுகிறது.
மழை நீர் சேகரிப்பு போல மேற்கூரை விவசாயம் நாம் அனைவரும் செய்ய வேண்டும். காரணம் நிலம் இல்லை, காய்கனி விலை அதிகம், விவசாயம் செய்ய அங்கே யாரும் இல்லை, ஆரோக்கியம் முக்கியம், எனவே தோட்டக் கலை அலுவலகத்தை யாவரும் அணுகுவோம். பணம் செய்து பிழைக்கா விடினும், உயிரோடு பிழைக்க வேண்டுமே.
பெண் குழந்தைகளை சிந்திக்க வைத்து அவர்களின் கனவு பலிக்க உதவுவோம்.
மனைவிமார்களை நேசிக்க மதிக்க ஆரம்பிப்போம். இந்த எண்ணம் தோன்றாமல் யாரும் அரங்கத்தை விட்டு வெளி வர முடியாது. அப்படி ஒரு இம்பாக்ட் இந்தப் படத்தில் உண்டு.
ஜோ நிச்சயம் நல்ல ஒரு கம் பாக்.
தேவை இல்லாத சண்டை, குத்துப் பாட்டு, கனவு சீன், இரட்டை வசனம் எதுவும் இல்லாத ஒரு நீட் படம்.
உடனே புக் செய்யுங்கள் குடும்பத்தோடு இந்தப் படம் காண.
இது வெறும் பொழுது போக்கு அல்ல. வாழ்வை புரட்டிப் போடும் நல்ல புதுப் பொழுது. நீங்கள் நேரத்தை செலவு செய்யப் போவதில்லை. இன்வெஸ்ட் செய்யப் போகிறீர்கள். இது உறுதி.
ரகுமான் போன்ற கணவர்கள் மீது கோபமும் வசந்தி (அதான் ஜோ) போன்ற மனைவிகள் மீது பெருமையும் நமக்கு வரட்டும்.
நீங்க நல்லா இருக்க இந்த நாடு முன்னேறும்.
- படம் பற்றி பார்த்து விட்டு எழுதும் பாலசாண்டில்யன்

No comments:

Post a Comment