Sunday, June 7, 2020

மாறிவிட்ட விளம்பரங்கள் மற்றும்மார்க்கெட்டிங்


மாறிவிட்ட விளம்பரங்கள் மற்றும்மார்க்கெட்டிங்
(Branding and Marketing Redefined)

- டாக்டர் பாலசாண்டில்யன் 
தொழில் ஆலோசகர் 

பொதுவாக டிவியில் விளம்பரங்கள் வரும் போது பெரும்பாலானோர்  'ம்யூட்' பட்டனை அழுத்தி மௌனமாகப் பார்ப்பர்.

சிலர் வேறு சேனலுக்கு மாறி விட்டு சில நிமிடங்கள் கழித்து திரும்ப வருவர்.

ஆனால் நான் சற்று வித்தியாசமானவன். எனக்கு நிகழ்ச்சிக்கு சமமாக விளம்பரங்களும் பிடிக்கும்.

சில வினாடிகளில் மிகப்பெரிய செய்திகளை அலட்டிக் கொள்ளாமல் சொல்லி விடுகிற வல்லமை வலிமை விளம்பரங்களுக்கு உண்டு. நான் சில விளம்பரங்களை (விடீயோக்களை) எனது பயிற்சி வகுப்புகளில் பயன்படுத்துவதுண்டு.

இப்போது சுமார் 75 நாட்களாக நாம் கொரோனா யுத்தத்தில் இருக்கிறோம். நிறைய பெரும் நிறுவனங்கள் தமது விளம்பரங்களை மாற்றி அமைத்துள்ளதைக் காண முடிகிறது. அதில் அவர்களின் சமூக அக்கறை மற்றும் பொறுப்பு வெளிப்படுகிறது.

இதன் மூலம் பொருட்களின் 'பிராண்டிங்' என்பது மாறி உள்ளது என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. 

'Gosafeoutside' என்று ஹமாம் சோப் விளம்பரம் பறைசாற்றுகிறது. குறிப்பாக குழந்தைக்கு ஓர் அம்மா சொல்லுவது போல. அது மிகவும் வலிமையான ஒன்றாக மனதில் பதியும் அல்லவா ?

பிரபல 'பெயிண்ட்' நிறுவனம் ஒன்று உங்கள் சுவற்றுக்கு 'சானிடைஸ்' செய்து விட்டீர்களா? என்று கேட்கிறார்கள்.

ஒரு பெருங்காயம் பவுடர் நிறுவனம் சொல்கிறது, உங்கள் உடலின் எதிர்ப்பு சக்திக்கு இந்த பெருங்காயம் பயன்படுத்துங்கள் என்று.

அதே போல 'லயன் டேட் பேரிச்சை' நிறுவனமும் நோய் எதிர்ப்பு சக்திக்கு எங்கள் பொருளை பயன்படுத்துங்கள் என்று திரும்பத் திரும்ப சொல்லுகிறார்கள்.

பிரபல தேனீர் விளம்பரம் ஒன்று "அவனை தனியாக வைத்திருக்க சொல்லி இருக்கிறார்களே ஒழிய ஒதுக்கி வைக்கச் சொல்லவில்லை" என்று சொல்லி தனியே இருக்கும் குடும்ப நபருக்கு தேனீர் கொண்டு செல்லும் படி அமைத்திருக்கிறார்கள்.

கோகோ கோலா, அமுல் பட்டர், சோப்பு லிக்விட் என்று 
இப்படி இந்த தருணத்திற்கு எது பொருந்துமோ அப்படி விளம்பரங்களை மாற்றி அமைத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

இல்லையேல் இந்த நேரத்திலும் 'எப்படி விளம்பரம் செய்து பணம் செய்கிறார்கள்' என்று நாம் பேசுவோம்.

இப்படி வணிகத்தில் இருக்கும் நாம் ஒவ்வொருவரும் காலத்திற்கேற்ப நமது பொருளை, சேவையை, அது குறித்த தகவல்கள் அல்லது விளம்பரங்களை மாற்றி அமைப்பது நிச்சயம் மிக நல்ல விளைவை கொடுக்கும். இது உறுதி.

என்ன யோசிக்க ஆரம்பித்து விட்டீர்களா? அதற்குத் தானே இந்த சிறு பதிவு.

வாருங்கள் நாம் அனைவரும் இணைந்தே கொரோனோவை விரட்டுவோம்.

மீண்டும் இழந்த நிம்மதி, அமைதி மற்றும் மகிழ்ச்சியை பெறுவோம். காலத்திற்கேற்ப யோசியுங்கள். கைநிறைய பலன்களைப் பெற்று மகிழுங்கள்.

No comments:

Post a Comment