Wednesday, June 10, 2020

கொரோனா - கண்ணுக்குத் தெரியாத நன்மை


கொரோனா - கண்ணுக்குத் தெரியாத நன்மை 
(Blessing in Disguise)

- டாக்டர் பாலசாண்டில்யன் (மனநல ஆலோசகர்)

கொரோனா எத்தனையோ பயங்கள், அவஸ்தைகள், அவலங்கள், கவலைகள், சமூக பொரூளாதார சிரமங்கள் எல்லாம் கொடுத்திருக்கிறது என்பதில் என்ன சந்தேகம் ?
இருந்தாலும் சில கண்ணுக்குத் தெரியாத நன்மைகள் கூட உண்டு :

1. வழக்கமாக கோடைகாலத்தில் மின்தடை நிறைய இருக்கும். இந்த கால கட்டத்தில் பல்வேறு நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், திரையரங்கங்கள், மால்கள், பெரிய ஐடி நிறுவனங்கள் எல்லாமே மூடி இருப்பதால், வீடுகளுக்கு கிடைக்க வேண்டிய மின்சாரம் தடையின்றிக் கிடைத்துள்ளது.

2. "கை கழுவு" என்பதே கொரோனா கால முழக்கம். பொதுவாக கோடைகாலத்தில், மழை வேறு குறைவாக உள்ள சமயத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிறைய இருக்கும். இம்முறை அப்படி இல்லாமல் தண்ணீர் தாராளமாக கிடைத்துள்ளது. மக்களும் கை கால் முகம் என்று கழுவிக் கொள்ள முடிகிறது.

3. பெரும்பாலான உணவகங்கள் மூடி உள்ளதால், (சிறிய அளவில் செயல்படுவதால்), காய்கறிகள் வழக்கத்தை விட சற்று விலை குறைவாகவும் நல்ல தரத்திலும் கிடைத்துள்ளது.

4. அதிகம் பேர் வெளியில் சென்று உணவு அருந்தாததால், பலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் அதிக பாதிப்பை தரவில்லை என்று வயிறு மற்றும் குடல் மருத்துவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

5. பிரபல நாளிதழ்கள், பத்திரிகைகள் ஆன்லைன் மூலம் கிடைப்பதால் அந்த செலவு குடும்பத்திற்கு மிச்சமாகி உள்ளது.

6. நிறைய பேர் வீட்டில் இருந்து வேலை செய்வதால், வீட்டு வேலையை பகிர்ந்து கொண்டு, சேர்ந்து உண்டு, சிரித்து மகிழ்ந்து இருப்பதுடன், வீட்டு வேலையையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

7. அலுவலங்களிலும் இது போல செக்யூரிட்டி, மின்சாரம், கான்டீன், போக்குவரத்து செலவு, இணைய செலவு, ஜெனெரேட்டர் செலவு, குடிநீர் செலவு, இப்படி பல செலவுகள் பெரும்பாலும் குறைந்து உள்ளன. உற்பத்தி மற்றும் விற்பனை நஷ்டம் ஏற்பட்டாலும் செலவு குறைவு என்பது ஓரளவுக்கு அவர்களுக்கு கை கொடுத்தள்ளது எனலாம்.

8. வீட்டில் வெளியே செல்லுவோர் எண்ணிக்கை அதிகம் என்பதால் துணி துவைக்கும் செலவு, நேரம் மிச்சமாகி உள்ளது. பெரும்பாலும் வீட்டில் இருக்கும் பொழுது அதற்கேற்ப உடைகள் அணிந்து கொள்ளுவதால் அவற்றை இஸ்திரி செய்வது, அதற்கு செலவு இவையும் குறைந்து உள்ளது கணிசமாக.

9. படாடோபமாக சில குடும்பங்களில் கோடை வாசஸ்தலங்களில் சென்று நேரம் கழிக்கும் விஷயம் இந்த ஆண்டு இல்லை என்பதால், அந்த பயணச் செலவு மிச்சமாகி உள்ளது.

10. பெரும்பாலான குடும்ப நிகழ்வுகள் மிக சிக்கனமாக நடத்த வேண்டிய கட்டாயம் இருந்ததால், நிறைய பேருக்கு அது சம்பந்தமான செலவு குறைந்துள்ளது.

இப்படி இன்னும் கூட இருக்கலாம் பல நன்மைகள். விடுபட்ட சில நன்மைகளை நீங்கள் கீழே தந்து தங்கள் கருத்தைப் பகிரலாம்.

No comments:

Post a Comment