Wednesday, June 3, 2020

ஓட்டைத் தோண்டி (A Leaking bucket)

ஓட்டைத் தோண்டி (A Leaking bucket)
- பாலசாண்டில்யன்
அதிகாலை எழுந்து அன்றைய பூஜை, யோகா, தியானம் இவற்றில் அமர்ந்து விட்டாலும், மனம் மட்டும் ஓரிடத்தில் நில்லாது அங்குமிங்கும் பறந்து திரிந்து கொண்டிருப்பதை அறிய முடிகிறது; இருப்பினும் கட்டுக்குள் வைக்க முடியவில்லை. இங்கே மனம் ஓர் ஓட்டைத் தோண்டி.
பிறருடன் மிகுந்த கனிவுடன், மரியாதையுடன் பேசுகிற நான் எனது சொந்தங்களுடன், குடும்பத்தாரிடம் மட்டும் கடுமையாகவும் முரட்டுத்தனமாகவும் நடந்து கொள்ளுகிறேன். (ஓட்டைத் தோண்டி)
வீட்டுக்கு வந்த விருந்தினரிடம் குழையப் பேசி, பாசம் பொழிந்து விட்டு அவர்கள் வீட்டை விட்டு கிளம்பியவுடன், அவர்களின் குறைகளை, தவறுகளை பெரிதுபடுத்திப் பேசுவேன் (ஓட்டைத் தோண்டி)
தினம் தினம் ஆன்மீக சொற்பொழிவுகள் கேட்கிறேன், பக்திப் பாடல்கள் கேட்கிறேன்,
பல சத்சங்க பொழிவுகளை கேட்கிறேன், சில சமூகப் பணிகளில் கூட பங்கேற்கிறேன். ஆனால் பழித்துப் பேசுகிறேன், பலரை அவமதிக்கிறேன், சாபம் இடுகிறேன். (ஓட்டைத் தோண்டி)
நிறைய பேருக்கு உதவுகிறேன். இன்னும் உதவிடவே எண்ணுகிறேன். ஆனால் அதில் எனக்கு என்ன பெருமை புகழ் கிடைக்கும் என்பதில் தான் மனம் கவனம் செலுத்துகிறது. (ஓட்டைத் தோண்டி)
கேட்காமலே பிறருக்கு யோசனைகள், புத்திமதிகள் அள்ளி வீசிடும் நான் அவற்றில் எதையுமே கடைபிடிக்கவில்லை. (ஓட்டைத் தோண்டி)
பக்தியுள்ள பலரை நிந்தனை செய்வது, வெறுப்புடன் அவதூறு பேசுவது எல்லாமே செய்யும் எனது எந்த கருத்தும் ஒன்றோடு ஒன்று ஒத்துப் போகவில்லை என்பதே உண்மை (ஓட்டைத் தோண்டி)
புறத்தோற்றத்தை வைத்து பிறரை ஏற இறங்கப் பார்த்து நான் எவ்வளவு உயர்ந்தவன் மற்றும் அறிவாளி தெரியுமா என்று மோசமாக எடை போடுகிறேன். (ஓட்டைத் தோண்டி)
அன்பொழுகப் பேசுவது போல பலரை கேலி செய்து மட்டம் தட்டுவது தான் எனது வழக்கம். (ஓட்டைத் தோண்டி)
பிறர் செய்யும் பெரிய செயல்களை எனது மிகச் சிறிய செயலோடு ஒப்பிட்டு
"இதெல்லாம் ஒரு வேலையா?" என்று தயங்காது குறை சொல்லுகிறேன்.
(ஓட்டைத் தோண்டி)
நான் எல்லாமே கற்றுக் கொண்டு
விட்டது போல பிறரை ஏன் நீங்கள்
இன்னும் இவற்றைக் கற்றுக் கொள்ளாது
இருக்கிறீர்கள் என்று கேட்டு அவமானப்படுத்துகிறேன். (ஓட்டைத் தோண்டி)
நான் செய்யும் சிறு சிறு மதிப்பில்லாத செயல்களைக் கூட பிறர் மனதார பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்த்து ஆத்திரமும் ஏமாற்றமும் அடைகிறேன். (ஓட்டைத் தோண்டி)
பாசமும் அன்பும் காட்டத்தெரியாத நான் எப்படி பாசம் காட்டுவது, எப்படி அன்பாக இருப்பது என்று பிறருக்கு வாய் கிழியப் பேசுகிறேன்.(ஓட்டைத் தோண்டி)
ஆன்மீக அறிவை, ஞானத்தை தினம் தினம் ஏதோ ஒரு வகையில் மிகவும் சிரமப்பட்டு வாழ்க்கை எனும் தொண்டியில் சேகரிக்கும் நான் அது எவ்வளவு ஓட்டைகள் நிறைந்தவை, அதில் இருந்து தினமுமே கசிவு ஏற்படுகிறது என்பதை கவனிக்கத் தவறியவனாகவே இருக்கிறேன்.
இது எனக்கு மட்டும் நேர்ந்தது அல்ல. நம்மில் மற்றவருக்கும் நேர்ந்திருக்கலாம். நமது ஓட்டையை நாம் கவனிப்பதில்லை என்பது தான் இங்கே மிக வலிமையான கருத்து.
ஓட்டைகள் ஒவ்வொன்றாக கண்டுபிடித்து அதனை அடைக்க
அடைக்கத் தான் நாம் வாழ்வில் காக்கப்பட்டவர் ஆக
மாறமுடியும்.
(எனக்கு வாட்ஸ்ஆப்பில் வந்த செய்தியை சற்று மொழிபெயர்த்து, சில சேர்த்து உங்களோடு இங்கே பகிர்ந்துள்ளேன்)

No comments:

Post a Comment