Wednesday, June 3, 2020

ஆன்லைன் வகுப்புகள்

ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு
அவசியமா ? அழுத்தமா ?
- டாக்டர் பாலசாண்டில்யன் (மனநல/கல்வி ஆலோசகர்)
நகரத்தின் சில முக்கிய கல்லூரிகள், மற்றும் சில பள்ளிகள் கொரோனா வார்டுகளாக மாறி விட்டன. வழக்கமாக இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் பள்ளிக்கூடங்கள் திறந்திருக்கும். கல்லூரிகளில் அட்மிஷன் தொடங்கியிருக்கும். எல்லா(ர்) வீட்டிலும் அந்தவொரு அட்மிஷன் பதற்றம் இருக்கும்.
இப்போது புதிய அட்மிஷன் என்பது கல்லூரிகளில் ஆகஸ்ட் வரை கிடையாது என்று ஏற்கனவே அறிவிப்பு வந்து விட்டது. இந்த நிலையில் ஏற்கனவே படிப்பில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு நிச்சயம் இந்த லாக் டவுன் சமயத்தில் பாடத்திட்டம் தனை உரிய காலத்தில் நிறைவு செய்ய ஒரே வழி இந்த ஆன்லைன் வகுப்புகள் தான்.
கல்லூரி மாணவர்களுக்கு நிச்சயம் குறைந்த பட்சம் நல்லதொரு மொபைல் போன் இருக்கும். ஆகையால் அவர்களுக்கு (கிராமம், டவுன் மற்றும் நகரங்களில் இருந்து) இது கடினமான விஷயம் அல்ல.
எங்கே அவர்களுக்கு அது சிரமமாக இருக்கும் என்று பார்த்தால், எல்லோர் வீட்டிலும் அன்லிமிடெட் WiFi இணைப்பு இருக்காது. அதே சமயம், மொபைல் இணைப்பில் பெரிய அளவு பணம் செலுத்தும் அளவு வீட்டு நிலைமை இல்லை. இது தான் நிதர்சனம். இருந்தாலும் வேறு வழியில்லை.
செமெஸ்டர் பரீட்சை கூட பிறகு நடத்திக் கொள்ளலாம். ஆனால் பிள்ளைகளின் வகுப்பு தொடர்ந்து தான் ஆக வேண்டும்.
இங்கே சிக்கல் என்னவென்றால் 10,11 மற்றும் 12 வகுப்புகளுக்கும் இப்படிப்பட்ட ஒரே வழி தான் உள்ளது. வேறு ஆப்ஷன் - விருப்பம் இல்லை என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். அப்போது தான் அடுத்த கல்வியாண்டில் எந்த சிரமமும் இல்லாது இருக்கும்.
இவர்களுக்கும் மேற்சொன்னது போல இணைய இணைப்புச் செலவு தான் பெருஞ்சிக்கலே. பலரின் குடும்பத்தில் வாழ்வாதாரம் என்பது அடிப்படை விஷயங்களுக்கு கூட கஷ்டப்படும் நிலை தான்.
என்னவொரு ஆச்சரியம் மட்டும் வினோதம் என்றால், LKG, UKG, போன்ற ஆரம்பப் படிப்பு படிக்கும் பிள்ளைகளுக்கும் இந்த ஆன்லைன் வகுப்புகள் மற்றும், மொபைல் வழி பாடங்கள், வீட்டுப் பாடங்கள் என்று தொந்தரவு சில தனியார் பள்ளிகளில் தொடங்கி விட்டது.
பெற்றோர் ஏற்கனவே அவர்கள் தம் அலுவலக வேலைகளை 'Work From Home' செய்து கொண்டு வீட்டு வேலைகளையும் செய்கிற நிலை கடந்த மூன்று மாதங்களாக தொடர்கின்றது. இப்போது பிள்ளைகளுக்கும் நல்லதொரு மொபைல் அல்லது லேப்டாப் கொடுக்க வேண்டிய கட்டாயம் அவர்களை எரிச்சல் அடையச் செய்து இருக்கிறது.
சின்னப் பிள்ளைகள் தாமே அந்த வகுப்பில் சேர்ந்தாலும், பெற்றோரும் அவர்களோடு இணைந்து படிக்க வேண்டும். இந்த கொரோனா பதற்றம் மற்றும் எரிச்சல் சமயத்தில் இந்த சிறு பிள்ளைகளின் ஆன்லைன் வகுப்பு என்பது நிச்சயம் தலைவேதனை தான் என்பதில் என்ன சந்தேகம்?
பிள்ளைகளைப் பொறுத்தவரை இது ஒரு விடுமுறை போல ஆனதால், அவர்களின் வழக்கமான ஒழுக்கம், சுறுசுறுப்பு எல்லாமே காணாமல் போய் விட்டது.
அவர்களும் இந்த அடைபட்ட நிலை, மற்றும் கோடைக்கால விடுமுறையை முழுமையாக மகிழ்வுடன் கொண்டாட முடியவில்லை.
அதிகபட்சம் நல்ல தூக்கம், படம் பார்ப்பது, அவ்வப்போது நொறுக்குத்தீனி இவை தவிர தமது தோழர்கள் தோழிகளை கூட சந்திக்க முடியவில்லை. நிறைய கோவிட் கட்டுப்பாடுகளில் அவர்களும் கடந்து திண்டாடுகிறார்கள் என்பது தான் உண்மை.
இந்த ஒரு சூழலில் ஆன்லைன் வகுப்பு என்பது 10,11,12 படிப்பவர்களுக்கு மற்றும் கல்லூரி படிப்பவர்களுக்கு மட்டும் என்று வைப்பது தான் சரியானதாக இருக்கும்.
பள்ளிச் சிறுவர்களை சற்று இந்த இறுக்கத்தில் தள்ளாது விடுவிப்பதே நல்லது என்பது எனது தாழ்மையான கருத்து.
கீழே உங்கள் கருத்துக்களை பின்னூட்டமாக வழங்குங்கள்.

No comments:

Post a Comment