Wednesday, June 3, 2020

எரியாத அடுப்புகள் .

எரியாத அடுப்புகள் .
..- டாக்டர் பாலசாண்டில்யன் மனநல ஆலோசகர்/மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர்
தனது பிடியைத் தளர்த்திடும் அரசு. தனது பிடியை மேலும் இறுக்கும் கொடிய நுண்கிருமி...இந்த யுத்தம் சிந்துபாத் கதை போலத் தொடர்கிற நிலையில், பல(ர்) வீட்டில் இன்னும் அடுப்பு எரியவில்லை.
மிகவும் படித்த மருத்துவர்கள் (கண், பல், தோல், குழந்தை, எலும்பு போன்ற பல்வேறு மருத்துவர்கள் மற்றும் பல தனியார் மருத்துவ கிளினிக்கள் இன்னும் திறக்கப்படவில்லை. அவர்கள் எப்படியோ சமாளித்து விடுவார்கள் என்பது கூட ஒரு நம்பிக்கை தான்.
தவிர, ஆடிட்டர், ஆர்க்கிடெக்ட், சிவில் எஞ்சினியர், வணிக ஆலோசகர்கள், மெடிக்கல் ரெப்ரஸென்டேட்டிவ், இப்படி பல படித்த நிபுணர்கள் இன்னும் தமது தொழிலைத் தொடங்கவில்லை.
அது மட்டுமா ?
பூசாரிகள், சடங்கு செய்து தரும் வேத விற்பன்னர்கள்
கோவில் அர்ச்சகர்கள் (ஆயிரக்கணக்கில்), கோவில் வாசலில் கோவிலை மட்டுமே நம்பி இருக்கும் கடை வைத்திருப்பவர்கள், ஹோட்டலில் பணியாற்றும் சர்வர்கள், சூப்பர்வைசர்கள், துணிக்கடை ஊழியர்கள், ஓலா மற்றும் ஊபர் கார் ஓட்டுனர்கள், தனியார் பஸ் ஓட்டுநர்கள், (என்னைப்போன்ற) கார்பொரேட் நிறுவனங்களுக்கு பயிற்சி தருகிற நிபுணர்கள், இன்சூரன்ஸ் ஏஜெண்ட்ஸ், வங்கி சார்ந்த பல்வேறு விற்பனையாளர்கள், வீட்டில் இருந்து பணியாற்ற வழி இல்லாதவர்கள், பெரிய தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள், நிறுவன கான்டீன் ஊழியர்கள், ஹவுஸ் கீப்பிங் ஊழியர்கள், செக்யூரிட்டி ஊழியர்கள், நிறுவன ஊழியர்களை அலுவலகம் கொண்டு சேர்க்கும் பஸ் ஊழியர்கள், பெரிய மால்களில் இருக்கும் கடை ஊழியர்கள், திரையரங்க ஊழியர்கள், சினிமாவில் பணியாற்றும் ஆயிரக் கணக்கான பலதரப்பட்ட ஊழியர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள், இன்னும் திறக்கப்படாத பத்திரிகை ஊழியர்கள், பத்திரிகை ஏஜென்ட்கள், பெயிண்டர்கள், கார்பென்டர்கள், கேட்டரிங் தொழில் செய்பவர்கள், இசைக் கலைஞர்கள், ஜிம் வைத்திருப்பவர்கள், டிரைவிங் ஸ்கூல் வைத்திருப்பவர்கள், வீடு மனை விற்பவர்கள், துணி இஸ்திரி செய்பவர்கள், ட்ரைகிளீனிங் செய்யும் கடைக்காரர்கள், டிராவல் பிசினெஸ் செய்பவர்கள், ரிசார்ட் நடத்துபவர்கள், ஹாஸ்டல் வைத்து நடத்துபவர்கள், இப்படி இந்த லிஸ்ட் முடியவில்லை. என்னால் இதற்கு மேல் எழுத மனமும் இல்லை. இங்கே கிராமத்துப் பட்டியல் இல்லை.
இவர்கள் வீட்டில் எல்லாம் இன்னும் அடுப்பு எரியவில்லை.
இவர்கள் நடுத்தர, அல்லது சற்று கீழ் அல்லது மேல்/நடுத்தர வர்க்கம் எனலாம். இவர்களுக்கு எந்த உதவியோ, கடனோ, நிவாரணமோ யாரும் தரப்போவதில்லை.
தொடரும் லாக் டவுன், தொடர்ந்து எண்ணிக்கையில் ஏறிக்கொண்டே இருக்கும் கொரோனா நோயின் தாக்கம் என அச்சுறுத்தும் நிலை தொடர்கிறது.
மேலும், பலருக்கு சம்பளம் இல்லை, வேலை போகலாம், ஏற்கனவே ஊதிய உயர்வு இல்லை என்று கடிதம் வந்து விட்டது பலருக்கு.
இன்னும் கல்வியாண்டு தொடங்கவில்லை. படிக்கும் மாணவர்களின் நிலை என்ன?
படித்து முடிக்கவிருக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு நிறைவு வரை வேலை கிடைக்காது.
மிகவும் ஆபத்தான சூழல் நிலவுகிறது. பல புதிய திருடர்கள், குற்றவாளிகள், மனநோயாளிகள் உருவாக அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
வீட்டிலேயே இருந்து பலரின் உடற்பருமன், மற்றும் கட்டுக்குள் இல்லாத நீரிழுவு நோய் இப்படி மிரட்டும் சாத்தியங்கள்.
'தி எண்ட்' என்று போட்டால் திரைப்படம் முடியும். 'தொடரும்' என்று போட்டால் திரைத்தொடர் முடியும். இந்த லாக் டவுன் எப்போது முடியும்?
யாருக்கும் தெரியாது பதில். இது ஒரு புரியாத புதிர்.
வாழ்வா ? வாழ்வாதாரமா ? என்ற போராட்டத்தில் மக்கள் நிலை.
நோயின் இறுக்கமா? அரசின் தளர்வா? மக்களின் அஜாக்கிரதையா ?
பலர் தமது சொந்த ஊர் திரும்பத் துடிக்கிறார்கள், தவிக்கிறார்கள். பலர் பணி செய்யும் ஊருக்குத் திரும்பத் தவிக்கிறார்கள்.
யார் சொல்வது? பதில் யார் சொல்வது?
இன்னும் திறக்கப்படவிருக்கும் வழிபாட்டுத் தலங்கள், விமான நிலையங்கள், டாஸ்மாக் கடைகள் மேலும் கொரோனவை இரு கரம் கொண்டு அழைக்குமோ ?
கேள்விகள் மட்டுமே நம்மிடம். பதில் இறைவனிடம்.

No comments:

Post a Comment