Wednesday, June 17, 2020

மெத்தனம் ஆகாதடி கிளியே


மெத்தனம் ஆகாதடி கிளியே
- பாலசாண்டில்யன்
நாங்கள் படித்தவர்கள், நாங்கள் கடவுள் நம்பிக்கை மிகுந்தவர்கள், நாங்கள் சைவ உணவு உண்பவர்கள், ஏற்கனவே ஆச்சாரமாக இருப்பவர்கள் எங்களுக்கு எந்த நோயும் வராது என்கிற நிலை நேற்று சென்னை மேற்கு மாம்பலத்தில் வசிப்பவர்களுக்கு நல்ல பாடம் நடத்தியது கொரோனா.
நாங்கள் தினம் தினம்
1. வெங்கடேஸ்வரா போளி ஸ்டால் நிச்சயம் போய் நொறுக்குத் தீனி தின்போம்.
2. கீரை, காய்கறிகள் பிரெஷ் ஆகத் தான் வாங்குவோம்.
3. இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 250 ரூபாய் போடுவோம். 200 ரூபாய் எடுப்போம். அதற்கு பாஸ்புக் என்ட்ரி போட பாங்க் வரிசையில் நிற்போம்.
4. பன்னீர் சோடா குடித்து விட்டு, வெற்றிலை பாக்கு போட்டு கும்பலாக நின்று சில நிமிடங்கள் குசலம் விசாரித்து விட்டுத் தான் போவோம்.
5. பத்திரிகை, நாளிதழ், பால் என்று ஒவ்வொன்றாக வாங்க நூறு தடவை கடைகளுக்கு போவோம்.
6. பூ, தேங்காய், பழம், வாங்க போவோம்.
7. பிரெஷ் ஆக காபி பொடி வாங்கணும் இல்லை என்றால் வாசனை போய் விடும். அதனால் 100 அல்லது 200 கிராம் தான் வாங்குவோம்.
8. கோவில் மூடி இருந்தாலும் வாசல் வரை சென்று வணங்குவோம்
9. மருந்து கடைக்கு தினம் போவோம்
இப்படி மாம்பலத்தில் வசிப்பவர்கள் அடித்த லூட்டி கொஞ்சம் நெஞ்சம் கிடையாது. அதுவும் மாஸ்க் போட மாட்டோம். தனியாகப் போக மாட்டோம். இரண்டு மூன்று பேராகத் தான் போவோம்.
இதற்கெல்லாம் கிடைத்தது தக்க தண்டனை. அரசு 19 ஜூன் முதல் முழு ஊரடங்கு என்று சொன்னாலும், மேற்கு மாம்பலத்தில் ஒரே நாளில் கற்பனைக்கு எட்டாத நபர்களுக்கு நோய்த்தொற்று இருப்பதாக கண்டறிந்து உடனே அரசு நடவடிக்கை எடுத்து எல்லா கடைகள், எல்லா வீதிகள் காலை 11.30 மணிக்கே மூடி விட்டனர்.
இத்தனைக்கும் இந்தப் பகுதி கிராஜுவேட் (படித்தவர்கள்) தொகுதி என்று சொல்லுவர். படித்தவர்களே இப்படி மெத்தனமாக இருந்தால் மற்ற ஏழைகள், பாமர ஜனங்கள் இருக்கும் இடங்களில் எப்படி இருக்கும். நினைத்தால் அச்சமாகவும், வெட்கமாகவும் இருக்கிறது.
ஓர் அரசு என்ன செய்யும். மீண்டும் கவனமாக இருங்கள் என்று வலியுறுத்தும். ஆனால் மக்கள் கேட்காவிடின், ஆண்டவனால் கூட ஒன்றும் செய்ய முடியாது.
காலையில் இருப்பவர் மதியம் இல்லை என்று சிலர், அதுவும் மூத்தவர்கள் இறந்த சேதி கடந்த 10 நாட்களாக மேற்கு மாம்பலத்தில் நடந்து வருகிறது.
கண் கெட்ட பிறகு ஒன்றும் செய்ய முடியாது.
மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், தேவை இல்லாமல் வெளியே போகக் கூடாது, வீட்டிற்கு வந்தால் கை கால் கழுவ வேண்டும். கபசுர குடிநீர் குடிக்க வேண்டும், சுடுதண்ணீரில் உப்பு போட்டு தொண்டை கொப்பளிக்க வேண்டும், நீராவி பிடிக்க வேண்டும் என்று எல்லோருக்கும் புத்திமதி சொல்லும் நபர்கள் இப்படி நோயை வாங்கி நோயை பரப்பும் நிலை ஆனது மிகவும் வருத்தம் தரக்கூடியது என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது.
இனியேனும். கவனமாக இருந்தால் நல்லது. எல்லாம் அவன் செயல். நல்ல புத்தியை அவனே கொடுக்கட்டும். எல்லோரையும் காப்பாற்றட்டும்.

No comments:

Post a Comment