Wednesday, June 3, 2020

விருப்பம் போல் உழைத்து ஈட்டு

வீட்டிலிரு, விருப்பம் போல் உழைத்து ஈட்டு
- டாக்டர் பாலசாண்டில்யன்
இந்தியாவில் சுமார் 23 கோடிக்கும் மேலாக பலர் வேலை இழந்து இருக்கிறார்கள் இந்த கோவிட் லாக் டவுன் சமயத்தில்.
சரி, சிறு சிறு திறன்கள் உள்ளன. அதிக பணம் முதலீடு செய்ய முடியாது. இருப்பினும், ஏதாவது செய்து 'நிதி சுதந்திரம்' பெற்று நிம்மதியாக, மகிழ்ச்சியாக, துணிவுடன் வாழ சில யோசனைகள் இதோ :
1. உங்களுக்கு கொஞ்சம் தையல் தெரியும். வீட்டில் தையல் இயந்திரம் உள்ளது என்றால், நைட்டி தைக்கலாம். இன்று பெரும்பாலும் பெண்கள் அடைபட்ட சூழலில் வெளியே அதிகம் போகாத பொழுது நைட்டி தான் போடுகிறார்கள்.
2. தவிர, பழைய புடவைகளை துணிப்பைகளாக தைக்கலாம். மேலும், ஏற்கனவே இருக்கும் புடவையைக் கிழித்து அதற்கு மேட்சாக முகக்கவசம் தைக்கலாம். துணிப்பைகளில் நீங்கள் உங்கள் கற்பனை கூட்டி புதிய சில மாற்றங்களை கொண்டு வரலாம். அதற்கேற்ப விலை கிடைக்கும் என்பது உறுதி.
3. இன்றைய பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மிகவும் எளிமையாக மாறி விட்டன. உங்களுக்கு கேக் செய்யத் தெரியும், அதற்கு உங்கள் வீட்டில் மெஷின் இருக்கிறது என்றால், நிச்சயம் கேக் செய்து தரலாம். மேலும் 'அழகான 'கிரீட்டிங் கார்டு' செய்து கொடுக்கலாம்.
4. ஏற்கனவே இருக்கும் திறமை கொண்டு இளைஞர்களுக்கு டி ஷர்ட்டில் புதிய லோகோ தைத்து தரலாம்.
5. பலவிதமான பழங்கள் வைத்து 'கிப்ட்' கூடை ரெடி செய்து கொடுக்கலாம். முதியவர்களுக்கு கொடுத்து அனுப்பினால் 'எதிர்ப்பு சக்தி' பெருகும்.
6. இன்று பல கடைகள் திறந்து விட்டநிலையில், மணி, ஒயர் இவை வைத்து பொம்மைகள் செய்து பரிசளிக்கலாம். இவற்றை எப்படி செய்வது என்று 'ஆன்லைன்' வகுப்பு எடுத்து சொல்லித் தரலாம்.
7. புடவை, சுடிதார் இவற்றிற்கு எம்பிராய்டரி (கைவேலை) செய்து தரலாம்.
8. கிராபிக் டிசைன் தெரியும் என்றால், சில நிறுவனங்கள் இன்று ஆன்லைன் மூலம் வணிகம் செய்ய நினைக்கிறார்கள். அவர்களுக்கு முகநூல் அல்லது சமூக வலைத்தளங்களில் வெளியிட 'டிசைன் போஸ்டர்' செய்து தரலாம்
9. டிரஸ், ஜாக்கெட், கர்டைன், மற்றும் இதர விஷயங்களை சிலர் ஆல்டர் செய்ய நினைப்பர். அவை செய்து கொடுக்க இப்போது ஆட்கள் இல்லை என்பதால் அந்த வாய்ப்பு நமதே.
10. உங்களுக்கு யூனிபார்ம் தைக்க தெரிந்தால் இப்போது மக்களுக்கு தெரிவிக்க ஆரம்பியுங்கள். பள்ளி திறக்க இன்னும் சில நாட்கள் உள்ளன. நிச்சயம் உங்களுக்கு அந்த ஆர்டர் கிடைக்கும்.
11. வேலைக்கு செல்லும் பெற்றோர் இருக்கும் வீட்டுப் பிள்ளைகளின் புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகங்களுக்கு அட்டை போட்டுத் தரலாம்
12. உங்களுக்கு 'குக்கி' பிஸ்கட் செய்யத் தெரியும் என்றால் வீட்டில் செய்து அக்கம் பக்கத்தினருக்கு தரலாம். அதே போல வீட்டில் செய்த முறுக்கு, சிப்ஸ், போன்ற நொறுக்குத் தீனி செய்து விற்கலாம். இன்று எல்லோருமே கடைகளில் வாங்கினால் 'ரிஸ்க்' என்று தயங்குவது நமக்கு வாய்ப்பு.
13. ஹிந்தி, பிரெஞ்சு, ஜெர்மனி, ஜப்பனீஸ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உங்களுக்குப் புலமை உள்ளது என்றால் அதனை 'ஆன்லைன்' மூலம் சொல்லித் தரலாம்.
14. 'ஆன்லைன்' மூலம் பாட்டு சொல்லித் தரலாம்.
15. உங்களுக்கு 'டாலி' தெரியும், வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கிறது என்றால் சிறு வணிக நிறுவனங்களுக்கு கணக்கு எழுதித் தரலாம்.
16. வீட்டில் இருந்தபடி தமிழ் 'DTP' செய்வது, நூல்களுக்கு ப்ரூப் பார்த்துத் தருவது இவை செய்யலாம்.
17. ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழிபெயர்ப்பு செய்து தர முடியும் என்று அறிவிப்பு செய்து அந்த வேலைகளை எடுத்து செய்யலாம்.
18. அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டிற்கு பாதுகாப்பாக சென்று அங்கே முதியவர்கள் இருந்தால் அவர்களுக்கு கம்ப்யூட்டர், இணைய வழி சந்திப்பு, ஸ்கேன் செய்வது, பிரிண்ட் செய்வது எல்லாம் சொல்லித் தரலாம்.
19. உடல் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் உணவு வகைகள், பருப்பு பொடி, தேங்காய் பொடி, எள்ளுப்பொடி என்று செய்து விற்கலாம்.
20. மொட்டை மாடியில் யோகா மற்றும் உடற்பயிற்சி தகுந்த சமூக இடைவெளியுடன் கற்றுத் தரலாம்.
இப்படி எக்கச்சக்க யோசனைகள் உள்ளன.
இப்படி சிறு வணிக யோசனைகள் சொல்லியே ஆயிரம் இரண்டாயிரம் சம்பாதிப்பவர்கள் கூட உண்டு. இங்கே நான் உங்களுக்கு இந்த யோசனைகளை எனது பரிசாக வழங்கி மகிழ்கிறேன்.
உங்களுக்கு எது பொருந்தும் யோசியுங்கள். நேரம் உண்டு. திறமை உண்டு.
ஆனால் கையில் பணம் தான் இல்லை எனும் போது நிச்சயம் உங்கள் நம்பிக்கை, கைத்திறன் இரண்டுமே உங்களுக்கு கைகொடுக்கும். பயம் ஏன்?
துணிந்து இறங்குங்கள். கையில் பணத்துடன் எழுந்திருங்கள்.

No comments:

Post a Comment