Monday, October 13, 2014

You cannot believe your own eyes

"நம்ம கண்ணை நம்மாலே நம்ப முடியல"
- டாக்டர் பாலசாண்டில்யன்
பள்ளித் தோழன் ஒருவனுக்கு கரும்பலகையில் எழுதி இருப்பது சரியாக தெரியவில்லை. அவன் ஒரு ஏழை மாணவன். மருத்துவம் பார்க்க வசதி இல்லை. கடவுள் விளையாட்டு. இவன் தந்தை ஒரு கண் மருத்துவர். தனது தந்தையிடம் தன் பள்ளித் தோழனுக்கு இலவச மருத்துவம் பார்க்குமாறு பணிக்கிறார். அவன் பார்வை பெறுகிறான். இவன் மனக் கண்களும் திறந்து கொள்கின்றன. ஓஹோ இது தான் எனது வாழ்வின் பணியோ என்று உணர்கிறான். அதன் பிறகு நடந்தவை எல்லாம் கனவு அல்ல நிஜம். தினம் தினம் உறங்கப் போகும் முன்பு மனத்திரையில் ஓடுகிறது," எத்தனை இன்று கண் மலர்ந்து உலகை கண்டனர் என் பணி மூலம்.." இந்த நினைப்பு இவரது நிம்மதியான உறக்கத்திற்கு முக்கிய காரணம். இவன் எப்படி இவர் ஆனார் என்பதைப் பார்ப்போமா ?

ஏப்ரல் 1960ம் ஆண்டு பிறந்த சிறுவன் தான் மோகன் ராஜன். இன்று இவர் அறியப்படுவது பேராசிரியர் டாக்டர் மோகன் ராஜன். இவரது நிறுவனத்தின் பெயர் ராஜன் கேர் ஆஸ்பிடல்.

"இயன்ற வரை பிறரது கண்ணீரைத் துடிப்பதுவே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். ஒரு வேளை இது இயலாமல் போகலாம். கண்ணீரும் துயரமும் இல்லாத நிலையே நமது பணியை நிறைவு செய்யும்" இந்த வாசகம் மறைந்த பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு சொன்னது. டாக்டர் ராஜன் மனதில் ஆழமாக பதிந்து போனது.

இன்று இந்தியாவின் தலை சிறந்த கண் மருத்துவர்களில் ஒருவராக திகழும் டாக்டர் மோகன் ராஜன் தனது 54 வயதில் மிக அரிய சாதனைகளைப் புரிந்து உள்ளார். மானுட சேவை இவரது உதிரத்தில் ஓடுகிறது என்றால் அது மிகையாகாது.

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவ மனையில் (உலகிலேயே இரண்டாவது பழமை வாய்ந்த கண் மருத்துவமனை) துணை இயக்குனராக பணியாற்றிய மறைந்த பேராசிரியர் டாக்டர் என். ராஜன் தான் இவர் தந்தை. அதனால் தானோ என்னவோ டாக்டர் மோகன் ராஜன் அவர்களும் அடிமட்ட இடத்தில வசிக்கும் ஏழைக்கும் சிறந்த அதே மருத்துவம் கிடைக்க வேண்டும் என்ற கோட்பாடு கடைபிடிக்கும் எண்ணம் உருவானது.

தனது ஆரம்ப கல்வி தனை வித்யோதயா பள்ளியில் முடித்து விட்டு பள்ளி உயர் கல்வியை பிரபல் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் மேற்கொண்டார். சிறு வயது முதற்கொண்டு மிகச் சிறப்பாக படிப்பதை இயல்பாக கொண்ட மோகன் ராஜன் அவர்கள் தானும் ஒரு டாக்டர் ஆக வேண்டும் என்று நிர்ணயம் செய்தது ஒன்றும் ஆச்சரியம் இல்லை தான்.

பெருமை வாய்ந்த மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் தனது MBBS படிப்பை சிறப்பு தகுதியுடன் முடித்து பிறகு சங்கர நேத்ராலயா கல்லூரியில் 1989 ஆம் ஆண்டு மிகச் சிறந்த கண் மருத்துவர் பட்டயப் படிப்புடன் வெளி வந்தார். பிறகு தனது மேற்படிப்புகளை UK மற்றும் அமெரிக்காவில் முடித்து 2010 ல் ஆய்வுப் பட்டமும் பெற்றார்.

தந்தையைப் போல இவரும் எளியவர்களுக்கு வைத்தியம் பார்க்க வேண்டும் என்ற குடும்ப எண்ணப்படி அரசுப் பணியில் இணைந்தார். தனது மனப் போக்கிற்கு அது சரியாக வராது போனதால் தந்தையின் சம்மதம் கூடப் பெறாமல் தனது வேலையை ராஜினாமா செய்தார். தந்தையின் தனியார் கிளினிக்கில் பணியாற்ற முடிவு செய்தார். அங்கே இவரது சேவைப் பசி தீர வழி இல்லை என்பதை உணர்ந்து தனக்குள் இருக்கும் தொழில் திறமை தனையும் கண்டறிந்து 1995 ஆம் ஆண்டு தனது தந்தையின் ஆசியில் பெற்ற தொகை கொண்டு உலகத் தரம் வாய்ந்த ராஜன் கண் மருத்துவமனை தனை நிறுவினார். அன்று தனது நெடுங்கால கனவு நிறைவேறியதாக எண்ணி மகிழ்ந்தார்.

6000 சதுர அடியில் ஒரு அறுவை சிகிச்சை அறை, 4 படுக்கை, 10 பணியாட்கள் என்று எளிய தொடக்கமாக தொடங்கிய இவரது வெற்றிப் பயணம் சரியாக செல்ல ஆரம்பித்தது. ஒரு நாளைக்கு 5 புற நோயாளிகள் மற்றும் ஒரு அறுவை சிகிச்சை என்று தான் ஆரம்பத்தில் இருந்தது.

இன்று கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தொடும் தருவாயில் எல்லாம் ஒரு மாயம் மந்திரம் போலத் தான் தெரிகிறது. தொடர்ந்த அயராத உழைப்பு, ஆர்வம், பொறுப்பணர்வு, சேவை மனப்பாங்கு, சரியான சிகிச்சை, நல்ல பெயர் அனைத்தின் காரணமாக 50,000 சதுர அடியில் மருத்துவமனை. ஆறு அறுவை சிகிச்சை வசதிகள். 40 படுக்கைகள். நான்கு இடங்களில் சென்டர்கள். 150 பணியாட்கள். சகல தொழில் நுட்பம் மற்றும் சர்வதேச தரத்தில் வசதிகளுடன் தினந்தோறும் 300 புற நோயாளிகள் வருகை, 25 அறுவை சிகிச்சை என்று சிறப்பாக செயல்படுகிறது இவரது மருத்துவமனை.

இது வரை 2200 கண் மருத்துவ முகாம்கள், 10 லட்சத்திற்கும் மேலாக கண் பரிசோதனை, ஒரு லட்சம் பேருக்கு காடராக்ட் அறுவை சிகிச்சை - அதுவும் இலவசமாக, மேலும் 2.6 லட்சம் பேருக்கு இலவச கண்ணாடியும் கடந்த 19 ஆண்டுகளில் வழங்கப் பட்டுள்ளது. இவரது மருத்துவர் ஆகும் முடிவு சரியானது என்று குடும்பத்தார், உறவினர், நண்பர்கள் எல்லோரும் உணர்ந்து பாராட்டுகின்றனர். இவரது படிப்பு எனும் போது MBBS தவிர, D.O,, Dip N.B., F.M.R.F., M.N.A.M.S., F.A.C.S., Doctor of Divinity என்று நீளுகிறது பட்டியல்.

கண் மருத்துவத்தில் இவர் செய்யாத சாதனைகள் இல்லை. தீர்க்காத கடின கண் நோய் இல்லை. அறுவை சிகிச்சை நிபுணர்கள் பட்டியலில் முன்னணி வரிசையில் இவரது பெயர் இருக்கிறது.

பள்ளி நாட்களில் கிரிக்கெட் மிகவும் பிடித்த விளையாட்டு. இன்று கோல்ப் மிக ஆர்வமாக விளையாடுகிறார்.

ஐந்து புத்தகங்கள் எழுதி உள்ள இவர் பிரபல ஆங்கில நாளிதழ் ஹிந்து பத்திரிகையில் பல கட்டுரைகள் எழுதி உள்ளார். சர்வதேச கருத்தரங்கங்களில் ஆய்வு கட்டுரைகள் பல முறை சமர்ப்பித்து உள்ளார்.

இவரது கண் மருத்துவ சேவை தனை பரவலாக்க துணை நின்ற அமைப்புகள் ரோட்டரி மற்றும் லயன்ஸ் கிளப், மார்வாடி யுவ சங்க், ஜெயின் டிரஸ்ட், சாய்க்ருபா டிரஸ்ட், நந்தலாலா சேவா சமிதி டிரஸ்ட், பாலவிஹார், ஷ்ரேயஸ் மற்றும் ஐஸ்வர்யா ஆகும்.

இவரது சேவை மனப்பாங்கை தூண்டும் வண்ணம் ரோட்டரி கிளப் மெட்ராஸ் தி நகர் கண் வங்கி எனும் ஏற்பாட்டை தொடங்கி இது வரை 4500 பேருக்கு இலவச கண் பார்வை வழங்கப் பட்டுள்ளது. நாள் தோறும் இறக்கும் 100 பேரில் ஒரு 10 பேர் கண் தானம் செய்தாலே வெகு விரைவில் பலருக்கு கண் பார்வை வழங்கி பார்வை இல்லாதோர் பட்டியலின் எண்ணிக்கை தனை குறைக்கலாம் என்பது டாக்டர் மோகன் ராஜன் அவர்களின் நோக்கம் மற்றும் இலட்சியம்.

இவரது தன் முனைப்பால் இது வரை 50000 பேர்கள் தனது இறப்பிற்கு பிறகு கண் தானம் செய்ய முன்வந்துள்ளார்கள். இது பற்றிய விழிப்புணர்வு கூட்டங்கள் தமை இவர் அடிக்கடி நடத்தி வருகிறார்.

நீரிழுவு நோயினால் கண் பார்வை பாதிக்கப் பட்டோர்கள் இவர் மூலம் இது வரை 24000 குணமாகி இருக்கின்றனர். அதற்கான பிரத்யேக முகாம்கள் மட்டும் 115 முறை நடத்தி உள்ளார். பார்வை அற்றோர் இல்லாத இந்தியா ஒரு சாத்தியமற்ற வீண் கனவு அல்ல என்பது டாக்டர் மோகன் ராஜன் அவர்களின் கருத்து. அதற்கான முயற்சியில் அன்றாடம் பாடுபட்டு வருகிறார்.

பல வசதி படைத்த வர்த்தக நிறுவனங்கள் துணை கொண்டு சென்று அடைய முடியாத கிராமங்களுக்கு கண் மருத்துவ சேவை சென்றடைய "நேத்ர வாகன இலவச சேவை" எனும் அமைப்பை தொடங்கி உள்ளார்.

தனது இளமைக் கால தோழனை நினைவு கொண்டு பள்ளிகளில் அடிக்கடி இலவச கண் பரிசோதனை முகாம்கள் நடத்தி வருகிறார். பெற்றோருக்கு கண் பார்வை கோளாறுகள் குறித்த விழிப்புணர்வு கூட்டங்களும் நடத்துகிறார். இது வரை 4.8 லட்சம் மாணவர்களுக்கு இந்த முகாம் நடத்தப்பட்டுள்ளது.

வெகு விரைவில் திருச்சி, மதுரை, கோயமுத்தூர் போன்ற இடங்களிலும் இவரது மையங்கள் தொடங்கப் பட உள்ளன.

லயன்ஸ் கிளப் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது, சிறந்த டாக்டர் விருது (எம் ஜி ஆர் மருத்துவ பல்கலைக் கழகம் வழங்கியது), ரோட்டரி வழங்கிய பார் தி சேக் ஆப் ஹானர் விருது, என்று இவர் பெற்ற விருது பட்டியல் நீள்கிறது.

ரோட்டரி உட்பட பல்வேறு தொழில் சார்ந்த, மற்றும் மருத்துவம் சார்ந்த அமைப்புகளில் பெரிய பொறுப்புகளை வகிக்கிறார். இவரைப் பற்றிய செய்தி வராத பத்திரிகை மற்றும் ஊடகங்கள் கிடையாது எனலாம்.

பிறரை கண் விழிக்க வைத்திட இவர் கண் மூடாது, உறங்காது, அயராது உழைக்கிறார் என்பது வெறும் புகழ்ச்சி அல்ல...புருவம் உயர்த்தும் உண்மை. இவரது அரிய இந்த நற்பணி நாளும் பல்லாண்டு தொடர வேண்டும். பல்வேறு விருதுகள், பெருமைகள், பாராட்டுகள் இவரை வந்து சேர வேண்டும் என்று இலக்கியப்பீடம் திங்கள் இதழ் மனதார வாழ்த்துகிறது.


பலரை உலகம்  பார்க்க வைக்கும் இவரை உலகம் இன்னும் வியந்து பார்க்கட்டும்.

No comments:

Post a Comment