Wednesday, May 14, 2014

Brigadier Durgabai - who served the country




கோலார் வயலில் விளைந்த சேவை விருட்சம்
- டாக்டர் பாலசாண்டில்யன்

கர்நாடகாவில் உள்ள கோலார் தங்கவயலில் 1930 ம் ஆண்டு அக்டோபர் மாதம் தோன்றி  12 ஆண்டுக்குப் பிறகு திண்டிவனத்திற்கு இடம் பெயர்த்து வைக்கப் பட்ட அற்புத மரக்கன்று மாபெரும் தேச சேவைக்கு தயாரானது.
சித்தப்பா உதவியுடன் உந்துதலுடன் வளரும் நேரம் காலரா நோய் வந்து அவஸ்தைக்கு உள்ளானார். கிட்டத்தட்ட நாலு நாள் நினைவு இல்லாமல் கிடந்த போது அயராது பாடுபட்டு டாக்டரும் நர்சுகளும் இவரைப் பார்த்துக் கொண்டு உயிர் மீட்டுத் தந்தனர். அந்த உள்மன பிரமிப்பு, சொல்லத் தெரியாத வேட்கை தானும் ஒரு மருத்துவர் ஆக வேண்டும் என்று நினைக்க வைத்தது. அன்றும் சரி இன்றும் சரி. ஆசை மட்டும் குறிக்கோள் மட்டும் ஒருவருக்கு இருந்தால் போதாது என்பது தான் நிதர்சனமும் வாழ்வின் கசப்பான உண்மையும். அதே போல அழுத்தும் குடும்ப பாரமும், கல்வியின் உயர் கட்டணங்களும் சேர்ந்து ஒரு மருத்துவர் ஆக ஆசைப்பட்டவரை சென்னை அரசு மருத்தவமனையில் மூன்று வருட நர்சிங் படிப்பு வரை தான் கொண்டு சேர்த்தது.
பிறகு எழும்பூர் மருத்துவமனையில் ஸ்டாப் நர்ஸ் ஆக வேலைக்கு சேர்ந்தார்.
அப்போது தான் அந்த எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. ஒரு பெண் ராணுவத்தில் சேர்வது என்பது 1950 களில் ஏற்புடையது அல்ல. குறிப்பாக விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்கள் எல்லாம் பஞ்சாப் மாநிலத்திலிருந்து தான் முன் வருகிறார்கள். நர்ஸ் பணிக்கு கேரளா மாநிலத்திலிருந்து நிறைய பெண்கள் வருவது வழக்கம். அந்த விதி விலக்குகளை உடைத்தெறிந்து ராணுவத்தில் நர்சிங் பணிக்கு ஆள் எடுப்பது கேள்விப்பட்டு விண்ணப்பித்தார். 1953 ம் ஆண்டு பெங்களூர் ராணுவ மருத்துவமனையில் லெப்டினெண்டாக நியமனம் ஆன முதல் தமிழ் பெண்மணி என்ற பெருமைக்கு உரியவர் தான் இன்று பிரபலமாக பிரிகேடியர் துர்காபாய் என்று அழைக்கப்படும் சேவையரசி  அவர்கள்.
எத்தனை பேர் இன்று ராணுவத்தில் சேர தயாராக உள்ளார்கள் அல்லது தனது குழந்தையை ராணுவத்தில் அனுப்ப தயாராக உள்ளார்கள். அப்படிப்பட்ட மரபு சார்ந்த சமூகத்தில் இந்திய ராணுவப் படையின் மருத்தவப் பிரிவில் தன்னை அர்பணித்துக் கொண்ட ஒரு சாகசப் பெண்மணி பிரிகேடியர் ஆவார்கள். 1962ல் இந்திய சீன போர், 1965 மற்றும் 1971ல் இந்திய பாகிஸ்தான் போர் இவற்றில் அளப்பரிய சேவை செய்த பெருமை மிகு தமிழ் பெண்மணி இவர் என்றால் மிகையாது.
ராணுவப் பணி சுலபமானது அல்ல. எல்லாமே புதுமை, கடுமை. மெஸ் சாப்பாடு, ஒழுக்கம், நேரம் தவறாமை, சீனியர்களிடம் பணிவு, அனைத்துமே வித்தியாசமான அணுகுமுறை. சங்கேத மொழி உண்டு. அது தெரியவில்லை என்றால் ராணுவ விடுதியை விட்டு வெளியே போக முடியாது. இந்த சங்கேத மொழி தினம் தினம் மாறும். எச்சரிக்கையாக இல்லை என்றால் உயிருக்கே கூட ஆபத்து.
நிறைய நிறைய அனுபவம் மறக்க முடியாது எளிதில். 1971ம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் போரின் போது கிழக்கு பிராந்திய ராணுவ மருத்துவப் பிரிவுக்கு மாற்றபட்ட நேரம். அடிபட்டு வருகிற ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க இவர் அனுப்பி வைக்கப் பட்டார். 60 படுக்கை உள்ள பழைய மருத்துவமனை 600 பேர் சிகிச்சை பெரும் அளவுக்கு மாற்றப்பட்டது. இருந்த பொருளையும் மூங்கிலையும், வைத்து மேஜை, தட்டிகள் செய்யப்பட்டன. எப்பொழுதும் பதட்டமான நிலையில் தான் வேலை பார்க்க வேண்டி இருக்கும்.
நர்சிங் தொழிலைப் பொறுத்த வரை நிறைய சகிப்புத்தனமை, பொறுமை, தைரியம் நிச்சயம் தேவை. இது தவிர வேலை செய்ய கால நேரம் கிடையாது. என்ன மருந்து எப்படிக் கொடுக்க வேண்டும்...மருத்துவர் கேட்கும் விவரங்கள் விரல் நுனியில் இருத்தல் மிக அவசியம். இவற்றை எல்லாம் நினைவு கூறும் பிரிகேடியர் இப்போது சென்னை மேற்கு மாம்பலம் பப்ளிக் ஹெல்த் சென்டரில் செயற்குழு உறுப்பினராக இருந்து பற்பல யோசனைகள் வழங்கி வருகிறார்.
1988 அக்டோபர் மாதம் ஓய்வு பெற்ற பிறகு தனக்குள் சிறு பிராய இலக்கிய நினைவுகள் மேலோங்க ஆரம்பித்ததன் காரணமாக தமிழ் நானூறு, உரத்த சிந்தனை இன்னும் பல சிற்றிதழ்களில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி வருகிறார். இது தவிர, அடியார் திருக்கூட்டம், புரசை திருநெறிக்கழகம், சைவ சித்தாந்தக் கழகம், அருள் ஞானப் பெருவெளி போன்ற பல்வேறு ஆன்மீக அமைப்புகளில் உறுப்பினராக இருந்து சேவை ஆற்றி வருகிறார்.
போர்களங்களில் போர்காலங்களில் சவங்களை மட்டுமே பார்க்க நேர்ந்த இவருக்கு சிவஸ்தலங்கள் நிறைய பார்க்கும் அரிய வாய்ப்பு ஏற்பட்டு பல இடங்களுக்கு இயன்ற வரை சென்று வருகிறார்.
வயது, கீழே விழுந்து கால் எலும்பு முறிவு ஏற்பட்டு நடக்க முடியா நிலை போன்ற இடர்பாடுகளை தாண்டி 84 வயதிலும் எவரையும் சாராமல் இருக்கிறார். இவருடைய சகோதரி கல்லூரி கல்வி இயக்ககத்தில் பிராந்திய இயக்குனராக பணியில் இருந்து காலம் ஆகி விட்டார். சகோதரர் டெலிக்ராப் அலுவலத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று இவருக்கு பெரும் துணையாக இருந்தார்.
1968ம் ஆண்டு தான் இந்திய அரசாங்கம் திருமணம் ஆனவர் ராணுவத்தில் இருக்கலாம் என்ற விதிமுறை மாற்றம் கொண்டு வந்தது. அப்போது இவர் வயது 38. அந்த வயதில் யார் தன்னை திருமணம் செய்து கொள்வார் என்று கடைசி வரை திருமணம் செய்து கொள்ளமால் முழுக்க முழுக்க தேச மற்றும் நேச சேவையில் மட்டுமே தன்னை அர்பணித்துக் கொண்ட இவரை எப்படி பாராட்டாமல் இருப்பது...?
தந்து ஓய்வு ஊதியத்தின் ஒரு பகுதியை கஷ்டப்படும் நபர்களின் கல்வி, மற்றும் மருத்துவ செலவுக்கு தந்து உதவுகிறார். ஆன்மீக அமைப்புகளுக்கும் தனது பங்கை வழங்கி வருகிறார். இவரை அழைத்துப் பாராட்ட தோன்றுகிறதா ?
9444303343 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவியுங்கள்.

No comments:

Post a Comment