Sunday, May 11, 2014

Public Health Centre. Chennai 33



61 என்பது கட்டிடத்தின் வயது அல்ல...
அயராமல் செய்த சேவையின் அடையாளம் !
-         Dr. Balasandilyan, Life Member – PHC.
காலத்தின் ஏடுகளைக் கொஞ்சம் பின்னோக்கிப் புரட்டினால் கடந்த கால நினைவுகள்  நம் எல்லோரையும் தரை நிறுத்தும். நட்சத்திரத்தை தொட்டாலும் நாம் இருக்கும் தளம் தரையாக இருக்கும். அது நிச்சயம்.
கல்வி, உணவு, ஆரோக்கியம் மூன்றும் யாவருக்கும் இவ்வுலகில் இயலும் செலவில் இருக்கும் இடத்தருகில் கிடைக்க வேண்டும். ஆனால் பல ஆண்டுகளாக இது சாத்தியமாகவில்லை. இந்த எண்ணம் ஒரு தனி மனிதரை உறுத்திக் கொண்டு இருந்தது. பத்திரிகையாளர், ஆன்மீகவாதி, சமூக நல ஆர்வலர், தேசத்தை நேசிக்கும் காந்திய சிந்தனையாளர் என்ற அடிப்படையில் அவரால் சும்மா இருக்க முடியவில்லை. அந்த அளவிற்கு அவரிடம் எண்ணமும் திண்ணமும் இருந்தது. ஆனால் நிதி இல்லை.
மறைந்த திரு டி டி கிருஷ்ணமாச்சாரி, திரு ராஜாஜி, திரு காமராஜ், திரு ஆர் வெங்கட்ராமன் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பும் நட்பும் இருந்ததால் தனது கனவு நனவாகிட மேல மாம்பல (தற்போது மேற்கு மாம்பலம்) நடுத்தர வாசிகளுக்காக 1953 ஆம் ஆண்டு மிகச் சிறிய அளவில் தொடங்கப்பட்டது தான்  பப்ளிக் ஹெல்த் சென்டர் எனும் PHC.
அப்போதைய முதல்வர் திரு ராஜாஜி அவர்களால் (மக்களுக்காக மக்களால்) இந்த ஆரோக்கிய மையம் தொடங்கப் பட்டது.
இன்று இந்த நிறுவனம் ஆல் போல் வளர்ந்து மூன்றாவது தலைமுறை ஆர்வ ஊழியர்களை கொண்டு 16 கிரௌண்ட் இடத்தில்,  கட்டிடங்களில் 50 படுக்கை, 70 மருத்துவர்கள், 180 மருத்துவ மற்றும் மருத்துவம் அல்லாத ஊழியர்கள் கொண்டு மிகச் சிறப்பான சேவை ஆற்றி வரும் மையம் ஆக பப்ளிக் ஹெல்த் சென்டர் விளங்குகிறது.
மருத்துவச் செலவினங்களைப் பொறுத்தவரை, அரசு மருத்துவ மனைகளுக்கும், கார்ப்போரேட் மருத்துவ மனைகளுக்கும் இடைப்பட்ட நிலையில் இயங்கி வருகிறது இம்மையம் ! இங்கு அளிக்கப்படும் மருத்துவத்தின் மகத்துவம், ஈட்டும் இலாபத்தில் இல்லை - அதன் தனித்துவம், சேவை, தியாகம், எளிமை என்னும் தாரக மந்திரத்தின் பிரதிபலிப்பாக உள்ளது !
தினம் தினம் சுற்றுவட்டாரங்களிலிருந்து வந்து OP புற நோயாளி பிரிவில் பலன் பெறுவோர் பல நூறு பேர் எனலாம்.
எக்ஸ்ரே, இசிஜி, ஸ்கேன், என்டோஸ்கோப், டயாலிசிஸ், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, மூட்டு வலி, இதய நோய், மகப்பேறு, குழந்தை, தோல், நரம்பியல், கண், காது, மூக்கு, தொண்டை, நுரையீரல், பிளாஸ்டிக் சிகிச்சை, ஐசீயு, சிறுநீரக பிரச்சனை, பிசியோதெரபி, நீரிழிவு, பல் மருத்துவம், அவசர சிகிச்சை மற்றும் காசுவல்ட்டி பிரிவுகள் சிறப்பாக செயல்படுகின்றன.
மேற்சொன்ன அத்துணை பிரிவுகளிலும் மிக மிக குறைவான செலவில் அதி நவீனமான சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது தான் வியப்பூட்டும் செய்தி. இங்கு மாஸ்டர் ஹெல்த் செக் அப், இலவச தடுப்பு ஊசிகள், போலியோ சிகிச்சை, இலவச மருத்துவ முகாம்கள் அவ்வப்போது நடைபெறுகின்றன.
சிறு குழந்தைகள் தினம் தினம் எடுத்துக் கொள்ளும் சத்துணவுக் கஞ்சி மாவு சென்னையில் எங்குமே கிடைக்காத விலையில் வழங்கப் படுகிறது. அந்த உணவினை இந்த மையத்திலேயே பிரத்யேகமாக தயார் செய்து தர ஆட்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
சிகிச்சை பெற்றிட வரும் மக்களை முறையாக வழி நடத்த தன் ஆர்வ ஊழியர்கள் பலர் செயல் படுகின்றனர். இந்த மையத்திற்கு லயன்ஸ், ரோட்டரி, இன்னெர் வீல் போன்ற அமைப்புகளும்,  TVS, TTK  போன்ற நிறுவனங்களும், தயாள குணம் உள்ள தனி நபர்கள் இந்த மையத்திற்கு தொடர்ந்து உதவி வருகின்றனர்.
நிதி உதவி தருபவர்களுக்கு 80G வருமான வரி விலக்கு உண்டு.
இந்த மருத்துவ மையத்தின் ஒரு பகுதியாக BVSN மூர்த்தி சென்டர் என்ற மையம் மூலம் மன நலம் குன்றிய, சிறப்புக் குழந்தைகளுக்கு பயிற்சியும், கல்வியும் அளிக்கப்படுகின்றன !
முதல்வரின் காப்பீட்டு திட்ட அடிப்படையிலும் இங்கே சிகிச்சை அளிக்கப் படுகிறது. குழந்தை பிறப்புக்கு லட்சங்கள் செலவாகும் இந்த நாட்களில் இங்கே சில ஆயிரங்களில் சிகிச்சை பெற முடியும். இதய நோய் அதிகமாக தாக்குகிற அண்மைக் காலங்களில் பணம் சம்பாதிப்பது  ஒன்றே குறிக்கோள் என செயல்படும் மருத்துவமனைகள் நடுவே வெகு குறைவான செலவில் மிகச் சிறந்த சிகிச்சை - அறுவை சிகிச்சை உட்பட - இங்கே தரப்படுகிறது.
மருந்து, கருவிகள், உபகரணங்கள், மின்சாரம், தண்ணீர், மனித வளம், பராமரிப்பு, என எல்லாமே வானளாவி நிற்கும் இச்சமயம் இன்னும் தொடர்ந்து மலிவு செலவில் மருத்துவ சேவை செய்வது மிக கடினம் என்று சொல்லவும் வேண்டுமா? இருந்தாலும் தொடங்கியவர் நோக்கம் மட்டுமே மனதில் கொண்டு ஒரு யாகம் போல தவம் போல செயல்படும் இந்த நிறுவனத்திற்கு MCS போலவே மனம் கொண்ட ஒரு சிறந்த தலைவர் கிடைத்திருக்கிறார். அவர் தான் டாக்டர் திரு  M.K .ஸ்ரீனிவாசன் அவர்கள். தான் செய்யும் பணிக்கு பணம் பெறாமல் அடிக்கடி தனது வங்கி இருப்பிலிருந்து மிகப் பெரிய தொகை தனையும் வழங்கி வருகிற வள்ளல் இவர். மிகச் சிறந்த உதாரணமாக திகழும் இவர் ஏற்கனவே கிட்டதட்ட 55 ஆண்டு மருத்துவ சேவை தனை நிறைவு செய்தவர்.
அண்மையில் 60 ஆண்டுகள் நிறைவு விழா கொண்டாடிய இந்த மையத்தின் நிறுவனர் மறைந்த திரு M C சுப்ரமணியம் அவர்கள் மறைந்த 21 ஆம் ஆண்டு நினைவு விழா இந்த மாத தொடக்கத்தில் மாண்புமிகு நீதியரசர் திரு ராமசுப்ரமணியம் அவர்கள் தலைமையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அவ்வமயம் சிறந்த ஊழியர்களுக்கு பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டது. ஆதரவு அற்ற பெண்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கப் பட்டன. ஒரு டையலிசிஸ் இயந்திரம் நன்கொடையாக பெறப்பட்டது.
மிகச் சிறந்த நரம்பியல் மற்றும் தோல் மருத்துவர் திரு டாக்டர் J பாஸ்கரன் இந்த மையத்தின் மருத்துவ மேற்பார்வையாளராக செயல்படுகிறார். இவரைப் போன்று அனுபவம் மிக்க நர்சுகள், ஆயாக்கள், லேப் டெக்னீஷியர்கள் இங்கே மிகச் சிறந்த பணி ஆற்றி வருகிறார்கள். முழு நிர்வாகமும் அனுபவம் மிக்க மூத்த தன் ஆர்வ
உறுப்பினர்களால் கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு வருகை தந்தவர்கள் பட்டியலில் எம்மெஸ் அம்மா, டி டி கே, டி டி வாசு, காமராஜ் அவர்கள், மஹா பெரியவா, ஜெய பிரகாஷ் நாராயண், சீ பீ ராமசாமி ஐயர், ராஜாஜி அவர்கள், கல்கி அவர்கள், ஆர்வீ அவர்கள் அடங்குவர்.
WHO நிறுவத்தின் பாராட்டு பெற்ற இந்த மையம் மேலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட நல்ல மனம் படைத்த கொடையாளர்களை எதிர் நோக்கி இருக்கிறது.
மேற்கு மாம்பலம், ஏரிக்கரை தெருவில் செயல்படும் இந்த மையத்தின் தொலைபேசி எண் : 24893172/24897008. வலை தளம் : www.phc-mc.org.
மேலும் விவரங்குளுக்கு இந்த மருத்துவ மையத்தின் கௌரவ செயலாளர் திரு சுப்ரமணியன் அவர்களை அணுகலாம்.


No comments:

Post a Comment