Sunday, May 11, 2014

Dakchaayani - the IRON lady



தாட்சாயணி தன்னம்பிக்கையின் மறு பெயர் !
- Dr.
பாலசாண்டில்யன்
கந்தையானாலும் கசக்கி கட்டு - இது பழைய சிந்தனை. ஆடையானால் அதனை அயன் செய்து கட்டு. யாருக்கும் பொறுமை, நேரம் நிச்சயம் இல்லை. தெருவிற்கு ஒரு அயன் வண்டி இருக்கிறது.

அங்கே நாம் துவைத்த துணிகளை கொண்டு தரலாம். அல்லது அவர்கள் வந்து பெற்றுச் செல்வார்கள். ஆனால் பட்டன் பிய்ந்து விடும். துணி மாறி விடும். கொணர்ந்து தரும் போது கசங்கி விடும். விலை உயர்ந்த துணிகளில் ஓட்டை விழுந்து விடும். எவ்வளவோ பிரச்சனை. நேரத்திற்கு கிடைக்காது...அது வேறு. எல்லாம் தாண்டி ஒரு துணிக்கு 5 முதல் 6 ரூபாய். இது நம் பக்கம்.
இந்த வேலையை செய்து தருபவர் பக்க கஷ்டங்கள்  என்ன தெரியுமா? வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை. தொடர்ந்து அயன் செய்தால் சூடு பட்டு வயிற்று வலி வருகிறது. எல்லோரும் உடனே கேட்கிறார்கள். காசு கடன் வைக்கிறார்கள். துணி கொடுப்பவர்கள் வாங்கி வைக்க இருப்பதில்லை. எப்போதும் குற்றம் குறை. இது மட்டுமா? மூச்சு விடக் கூட நேரம் இல்லை. ஒரு நாள் கூட ஓய்வு இல்லை. மழை பெய்தால் துணிகள் வராது. விடுமுறை நாட்களில் வேலை அதிகம்.
இப்படி கடை போட வீட்டு வாசலுக்கு அனுமதி. சரியான ஆட்கள். அவர்கள் குடித்து விட்டு வந்தாலும் கத்தாமல் வேலை வாங்க வேண்டும். தினம் தினம் அட்வான்ஸ் தர வேண்டும். திடீர் என வேலைக்கு வர மாட்டார்கள். மதியமே குடித்து விட்டு வருவார்கள். சொல்லாமல் கொள்ளாமல் வேலையை விட்டு நின்று விடுவார்கள். சில நல்ல துணிகளை பொசுக்கி விடுவார்கள். சிலதை சுட்டு (திருடி) விடுவார்கள். பத்து செய்து விட்டு பனிரெண்டு என வாதம் செய்வார்கள்.
இவ்வளவு சிக்கல்களை ஒரு பெண் எப்படி சமாளிக்க முடியும்? அதுவும் திருமணம் செய்து கொடுத்த பெண் வீட்டுக்கு திரும்ப வந்து விட்டாள். அவள் தையல் வேலை செய்து தன்னை காப்பாற்றிக் கொள்கிறாள். இவ்வளவு நாள் வேலை பார்த்த கணவர் தனது கெட்ட பழக்கங்களால் நோய்வாய் பட்டு இன்று படுத்த படுக்கையாய். சோறு ஆக்கி வைத்து விட்டு கையில் கொண்டு வந்து நாலு பேரை வைத்து வேலை வாங்க வேண்டும். வாடிக்கியாளர்கள் பிரச்சனைகளை சமாளிக்க வேண்டும். துணி வாங்கி வந்து, கொண்டு கொடுத்து, வேலை செய்பவர்களுக்கு டீ வாங்கிக் கொடுத்து, அட்வான்ஸ் கொடுத்து, சம்பளம் கொடுத்து, கடைக்கு தேவை ஆன கரி, கெரொசின் வாங்கி வைத்து ....எல்லாம் ஒண்டி ஆளாய்.
என்ன துன்பம் இருந்தாலும் அவற்றை வெளிக் காட்டிக் கொள்ளாமல் எப்போதும் சுறுசுறுப்பாக, சிரித்த முகமாக, உற்சாகமாக, கணக்கு வழக்குகளை வைத்துக் கொண்டு, மீந்து போன துணிகளை பத்திரப்படுத்தி மறு நாள் வேலை முடித்து ...சொல்ல எளிது. செய்ய மிக கடினம்....! இது தாட்சாயணியால் மட்டும் எப்படி முடிகிறது. ஒரு தொழில் முனைவர் போல செயல்படும் இவரை எப்படி பாராட்டுவது...! நினைத்து நினைத்துப் பார்க்கிறேன். வியந்து தான் போகிறேன். இவர் நீடு வாழ வேண்டும். இவர் துயரம் தீர வேண்டும். மற்றவர் மிடுக்காக இருக்க இவர் தன்னை கசக்கிக் கொள்கிறார். இவர் தன்னம்பிக்கைக்கு சல்யூட் வைக்க வேண்டும். இவர் போல ஒவ்வொரு தெருவிலும் இருந்தாலும் இவர் எனது மனம் கவர்ந்தவர்.
இவரைத் தொடர்பு கொண்டு வாழ்த்த உதவ : 9791184716

No comments:

Post a Comment