Saturday, August 17, 2013

A great serving arm of the God



வார்த்தைகள் செயல்கள் ஆகாது
- டாக்டர் பாலசாண்டில்யன்

ஸ்ரீ மாதா டிரஸ்ட் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திரு வி. கிருஷ்ணமுர்த்தி மற்றும் பொறுப்பாளர் D விஜயஸ்ரீ - இருவரின் சிறப்பு நேர்முகப் பேட்டி கடந்த 14 ஆகஸ்ட் அன்று காலை சன் டிவியில் "சூரிய வணக்கம்" நிகழ்ச்சியில் வெளியானது

பொதுவாக இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர்கள் அல்லது பிரபலங்கள் மட்டுமே வருவர். ஆனால் இது சற்று வித்தியாசமானது.
ஏழை புற்று நோயாளிகளுக்கு புகலிடம் தரும் தொண்டு நிறுவனம் பற்றிய இப்பேட்டி காண்பவரை வியந்து சிந்திக்க வைத்தது.
இந்த பேட்டியை எத்தனை பேர் காணத் தவறி இருப்பரோ என்ற எண்ணத்தில் - அதன் சாராம்சத்தை இங்கே நமது வாசகர்களுக்கு வழங்க விழைகிறேன். தனக்கென ஒரு வீடு, குடும்பம் இருந்தாலும் அதிக பட்ச நேரம் பிறருக்காக செலவு செய்யும் நபர்களை பற்றிய பேட்டி இது. வார்த்தைகள் செயல்கள் ஆகாது. விதைகள் கனிகள் ஆகாது. ஆன்மாவின் தேடல்கள் தேவைகள் மட்டும் நிறைவு தராது என்பது இந்த பேட்டியைப் படித்தால் உணரலாம்.
ஏழை புற்று நோயாளிகளுக்கு தாங்கும் வசதி, விலை இல்லா அருமை உணவு (மூன்று வேளையும்), மருத்துவ வசதி இவற்றை கடந்த 13 வருடங்களாக சென்னை மாநகரில் வழங்கி வரக்கூடிய ஒரே தர்ம ஸ்தாபனம் பற்றி உணர்வு பூர்வமாக ஒரு இளைஞரும் யுவதியும் பேட்டி கண்டனர்.
இந்த நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்று எப்படி தோன்றியது ?
# என்னுடன் பணி ஆற்றிய எனது உடன் பிறவா சகோதரி கான்செர் வந்து பட்ட அவஸ்தை தான் இதற்கு தொடக்கப் புள்ளி.
இந்த புகலிடம் மூலம் என்ன செய்கிறீர்கள் ?
# இது தான் என்று வரையறை வைத்துக் கொள்ளாமல் தங்க இடம் (நோயாளி, அவருடன் ஒரு உதவியாளர்), உணவு, மருந்து, மருத்துவர் உதவி, சேலை வேண்டும் என்றால் சேலை, இதர டெஸ்ட் எடுக்கும் செலவு, சிகிச்சை முடிந்து செல்லும் போது ஊர் போய் சேர கட்டணம் இல்லை என்றால் அது, அடுத்த மாதத்திற்கான மருந்து, ஏன் நோயாளிகளின் குழந்தைகளின் படிப்புக்கு ஆகும் செலவு  என தடை இன்றி அனைத்தும் செய்து வருகிறோம். இந்த நோயாளி சந்தோஷமாக இருக்க வேண்டும் அதற்கு என்ன தேவையோ அதைத் தருகிறோம்
 
புற்று நோய் எப்படி வருகிறது ?
# அதிக பட்சம் புகையிலை, மது உட்கொள்வதால், இது தவிர மன உளைச்சல், தவறான உணவுப் பழக்கம் (junk food) என்று சொல்லக் கூடிய பஜ்ஜி போண்டா போன்ற உணவு என பல காரணம் உண்டு
உங்கள் புகலிடத்தை  நோயாளிகள் எப்படி வந்து சேர்கிறார்கள் ?
# கான்செர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற வருகின்ற ஏழை மக்களை அவர்களே பரிந்துரை செய்து அனுப்புகிறார்கள். இது தவிர நம்மைப் பற்றி விளம்பரம், அல்லது வேறு வகையில் கேள்விப் பட்டவர்களும் வருகிறார்கள்
நமது அமைப்பின் சிறப்பு என்ன?
# புற்று நோய் வந்து அவஸ்தை படும் நோயாளிகள் தமது உறவினர்கள், மகன், மகள்களால் புறக்கணிக்கப் படுகிறார்கள். காரணம், தனக்கும் அது தொற்றிக் கொள்ளுமோ என்ற பயம். முதலில் அப்படிப்பட்ட பயத்தை கவுன்செலிங் செய்து உறவினர்களுக்கு புரிய வைக்கிறோம். அது மட்டும் அல்ல. சென்னையில் வந்து தங்கி சிகிச்சை பெற எல்லோராலும் - குறிப்பாக ஏழை நோயாளியால் நிச்சயம் முடியாது ...அவர்கள் வந்து தங்கி பாதுகாப்பாக இருந்து, சிகிச்சை பெற்று செல்ல வசதியாக இயங்குவதே எங்கள் காப்பகம். 30% பேர்களுக்கு குணப்படுத்த முடியாது . இனி சிகிச்சை கிடையாது ..வீட்டுக்கு கூட்டிப்  போங்கள் என்ற நிலை ஏற்படும் போது அவர்களை வீட்டுக்கு இட்டுச் செல்ல உறவினர்கள் தயங்குகிறார்கள். அதுவும் அவர்கள் இறப்பது உறுதி என்பதால் அவர்கள் கடைசிக் காலத்தில் அவர்கள் அன்பு, பாசம் மற்றும் வலி நிவாரணம் பெற்று பசியில்லாத வலியில்லாத நிலையில் மன நிம்மதியுடன் போக வேண்டும் என்பதை மனதில் கொண்டு அவர்களை கனிவோடு அணுகுகிறோம். அவர்கள் உறவினர்களையும் அணுக வைக்கிறோம். இப்படி கிட்டத்தட்ட 320,000 பேருக்கு இது வரை ஆவன செய்து உதவி உள்ளோம் . பிறர் துன்பம் நம் துன்பம் என்று மனதில் தோன்றிய காரணத்தால் பாங்குடன் உதவுகிறோம். அன்பு தருவது முதல் நோக்கம். அன்போடு அணுகுவது அடுத்த நோக்கம். இது People's project for people's care. மக்களில் ஒருவன் நான். மக்களுக்கு உதவுவது தான் இந்த அமைப்பின் கொள்கை.
டெர்மினல் கான்செர் நோயாளிகள் எப்படிக் கஷ்டப் படுகிறார்கள் ?
# அழிக்க முடியாத ஒழிக்க முடியாத இந்த தீவிர நோய் மூலம் கஷ்டப்படுவர்களுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் உதவ வேண்டும் என்று தீவிரமாக  இருக்கிறோம். அவர்கள் மிகுந்த வலிக்கு உள்ளாகிறார்கள். கத்துவார்கள், அழுவார்கள். தம்மை கொன்று விடுமாறு கெஞ்சுவார்கள். வாயில் புற்று நோய் என்றால் புழு வந்து வெளியே தெரியும். துர்நாற்றம் அடிக்கும். 10 அடி தூரம் வரை கூட யாராலும் நிற்க முடியாது. அப்போது குடும்பத்தாருக்கு கிலி ஏற்படுகிறது. அவர்களுக்கு மனித நேயத்தோடு கனிவும், பாசமும், நல வார்த்தையும் அளித்து ஆற்றுப் படுத்துகிறோம்.
இந்த மாதிரி தொடர்ந்து சேவை செய்ய பணம் வேண்டுமே அதற்கு என்ன செய்கிறீர்கள் ?
# கை ஏந்துகிறோம்...இருப்பவர்கள் மட்டுமல்ல. இல்லாதவர்களும், இளைஞர்கள், எல்லோரும் நிதி உதவி செய்கிறார்கள். இருப்பவர்களுக்கே சாப்பாடு போடுவானேன் ..பார்ட்டி, கொண்டாட்டம், கேளிக்கை தவிர்த்து பிறந்த நாள், திருமண நாள் போன்ற வாழ்வின் சிறந்த நாள்களில் எங்கள் அமைப்புக்கு உதவி செய்கிறார்கள். அரசின் உதவியை நிச்சயம் நாடாது private public contribution அடிப்படையில் செயல் படுகிறோம். அடுத்த வாரம் வரை பணம் உள்ளது. அடுத்து எங்காவது வரும். வருகிறது. இப்படித் தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
வேறு நோக்கம் என்ன ?
எனக்குப் பிறகு (எனக்கு ஏற்கனவே 70 வயது தாண்டி விட்டது) இதனை சரியாக நடத்திச் செல்ல சரியான நபர் தான் என் மகளைப் போன்ற விஜயஸ்ரீ. இந்த இளம் வயதில் மிகப் பொறுப்பாக, கனிவாக, உத்வேகத்தோடு செயல் பட்டு வருகிறார்.
அதனால் அடுத்து சென்னையை அடுத்த மணிமங்கலத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் 50,000 சதுர அடியில் மிக பிரம்மாண்ட வசதி தயார் ஆகிக் கொண்டு இருக்கிறது. ஒரு சதுர அடிக்கு 2500 ரூபாய் செலவு ஆகப் போகிறது ..இதனை நிறைய பேர் (50,000 பேர் ஆளுக்கு ஒரு சதுர அடி என்ற கணக்கில் )தமது பங்காக முன் வந்து மனமுவந்து நிதி வழங்கி இதனை ஒரு மக்கள் ப்ராஜெக்ட் ஆக இன்னும் நிறைய சங்கடப்படுபவர்கள் பயன் அடையும் வண்ணம் உருவாக்கும் பணி நடை பெற்று வருகிறது . இன்னும் இரண்டு ஆண்டுகளில் அது ரெடி. பிறகு இந்தியாவிலேயே மிகப் பெரிய கான்செர் தொண்டு நிறுவனமாக இது திகழும் என்பது திண்ணம் . இதனை செயல்படுத்திய பிறகே என் உயிர் பிரியும். இது நிச்சயம்.
அடுத்து என்ன ?
# சென்னை இந்திரா நகரில் முற்றிலும் இலவசமாக ஏழை மக்கள் பயன் பெரும் வகையில் ஒரு டயாலிசிஸ் சென்டர் உருவாக்கி வருகிறோம். இதில் பதிவுச் செலவு (registration fee also free)  கருணை தான் கருவின் நோக்கம். மனிதனுக்கும் மாட்டுக்கும் வித்தியாசம் உண்டு அல்லவா ...! அந்த அடிப்படையில் உற்றவருக்கு உதவுவது தான் இந்த உயிரின் துடிப்பு. திருமூலர் சொன்னது போல இன்முகமாய் பேசுவது கூட புண்ணியம் ...காசு பணம் கொடுப்பது மட்டும் அல்ல. ஒரு மாடு தன கன்றை நக்குவது போல...ஒரு நாய் தனது குட்டியை கொஞ்சி நக்குவது போல...!

1 comment: