Friday, August 30, 2013

Recent article about my daughter in the Web magazine

கல்விக்கு மாணவிகள் தான், ஆனால் கலைக்கு இவர்கள் ஆசிரியைகள்!


தங்கத்தில் இருந்து தகரம் வரை எந்த ஒரு பொருளில் அணிகலன்கள் செய்து அணிந்து கொண்டாலும் பெண்களுக்கு அழகு சேர்ப்பதாகத்தான் அவைகள் இருக்கும்.
அவைகளை உடைகளின் வண்ணங்கள், டிசைன்களுக்கு ஏற்றவாறு தாங்களே செய்து அணிந்து கொள்ளும்போது எவ்வளவு ஆனந்தம் தரும்?! அதுவும் அந்த அணிகலன்கள் சுற்று சூழல் பாதுகாப்பு உரியவையாக அமைந்து விட்டால்? பெருமைக்கும், மகிழ்ச்சிக்கும் சொல்லவா வேண்டும்!
சென்னை ஜிஆர் டிமஹாலக்ஷ்மி வித்யாலயா பள்ளியில் 10ம் வகுப்பில் படிக்கிறார் சுஹாசினி, 11ம் வகுப்பில் படிக்கிறார் சுபிக்ஷா. இவர்கள் இருவரும் சிறு பிராயத்தில் இருந்தே தோழிகளாம். இவர் செய்ய விரும்புவதை அவர் செய்ய விரும்புவது,இவர் அணிய விரும்புவதை அவர் அணிய விரும்புவது என்று, இருவரின் நட்பும் இணையான தண்டவாளம் போல பயணித்து வருகிறது.

 இருவரும் சுற்று சூழல் குறித்த ஒரு விழிப்புணர்வு பொருட்காட்சிக்கு சென்றிருந்த போது, அங்கு பேப்பரில் செய்யப்பட்டு இருந்த அணிகலன்களை பார்த்து ஆசைப்பட்டு விலை கேட்டு இருக்கிறார்கள். விலை மிகவும் அதிகமாக இருக்கவே, தாங்களே இந்த பேப்பர் அணிகலனகளை செய்தால் என்ன என்று யோசித்து, பின்பு சுபிக்ஷா, சுஹாசினி இருவரும் சேர்ந்து ஆலோசித்து, பேப்பர் அணிகலன்களை தாங்களே செய்வது என்று முடிவெடுத்து இருக்கிறார்கள்.
முதலில் இந்த அணிகலன்களை செய்வதற்கான டூல்ஸ் வாங்கி, தாங்களே முயற்சி செய்து, தங்களது உடைகளுக்கு மேட்சாக காதணிகள், கழுத்து அணிகலன்கள், ஹேர் பாண்ட் என்று வித விதமாக் போட்டுக் கொண்டு, விழாக்களுக்கு செல்ல, செண்டர் ஆப் அட்ராக்சன் என்று சொல்வார்களே அப்படித்தான் பிரபலம் ஆனார்கள் இவர்கள் இருவரும்.

பின்னர் நவராத்திரி கொலுவுக்கு, பிறந்தநாள் பரிசு பொருட்களுக்கு, வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு, விழாக்களுக்கு புடவைக்கு மேட்சாக பெண்கள் அணிந்து கொள்வதற்கு என்று இவர்களுக்கு ஆர்டர்கள் குவியத் தொடங்கின. இவர்கள் உழைப்பின் நேரமும் அதிகமானது.படிப்பிலும் இவர்கள் இருவரும் படுசுட்டிகள்.
 உடனடியாக ஆர்டர் செய்து கொடுக்க வேண்டும் என்றாலோ, அல்லது இருவரில் ஒருவர் விழா அல்லது டின்னருக்கு வெளியில் செல்ல வேண்டும் என்றாலோ. உடைகளுக்கு மேட்சாக உடனடியாக காதணிகள் தேவைப்பட்டால், ஆளுக்கொரு காதுக்கு அணி செய்வார்களாம். இப்படி இப்படி செய்ய வேண்டும் என்று வாயில் பேசிக்கொண்டு தனித் தனியாக அவர்கள் வீட்டில் செய்து வந்து, ஒன்று சேர்த்து பார்க்கும் பொது, இரு காதுகளுக்கும் கொஞ்சமும் வித்தியாசம் காண முடியாத அணிகலனாக அது காட்சி அளிக்கும் என்று விந்தையுடன் சொல்கிறார்கள், சுபிக்ஷாவின் பெற்றோர் பால சாண்டில்யன்,  சுகீர்த்தி மற்றும் சுஹாசினியின் தாயான ஸ்வர்ணலதா ஆகியோர்.

இவர்களின் திறமையை முக நூலில் பார்த்த நிறைய பேர் இவர்களிடம் இந்த தொழிலை கற்றுக் கொள்ள ஆசைப்பட்ட போதுதான், கல்விக்கு மாணவிகளான இவர்கள் கலைக்கு ஆசிரியைகளாகி இருக்கிறார்கள். பெற்றோர்களே வியக்கும் படி, இவர்கள் இருவரும் சேர்ந்து, கலையை பயிற்றுவித்தார்களாம்.
முதன் முதலில் அவரவர் தங்கள் அம்மாவிடம் தலா ரூபாய் 500 முதலீடு செய்த இவர்கள், அதை உடனடியாக சம்பாதித்து திருப்பியும் கொடுத்து விட்டார்களாம். எப்படி இந்த ஐடியா வந்தது என்று எதிர்கால பிசினெஸ் பெண்களான இவர்களிடம் கேட்டபோது,
அப்படியே பிசினெஸ் வாடை தொனிக்க பேசுகிறார்கள்."பெண்களுக்கு எப்போதுமே புதிது புதிதாக அணிந்து பார்க்க வேண்டும் என்பதில் ஆசை அதிகம். இந்த ஆசை எங்களுக்கும் இருந்ததால், இதில் ஈசியாக ஜெயிக்கலாம் என்று முதலில் ஐடியா வந்தது.

இதில் வித விதமாக செய்து அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றவுடன், இன்னும், இன்னும் என்று எங்களின் ஆர்வம் நிறைய கிரியேட்டிவிட்டி தேடலைக் கொடுத்தது. தினம், தினம் என்ன புதிமாதிரிகளை இதில் புகுத்தி புதுமையாக் எதையாவது உருவாக்கலாம் என்று யோசித்துக் கொண்டே இருப்போம். படிப்பிலும் நாங்கள் கவனத்தை செலுத்தி வருவதால், எங்களது பெற்றோர் எங்களை ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.
இந்த எக்கோ ஃபிரன்ட்லி என்று சொல்லப்படும், சுற்று சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். இதை நாம் உபயோகப்படுத்தும் கைப்பைகள்,வீட்டு உபயோகப் பொருட்கள் என்று அத்தனையிலும் புகுத்த ஆலோசித்து வருகிறோம்.

திருமண பெண்களுக்கான புடவைக்கு மேட்ச்சான நகைகள், மற்றும் அணிகலன்கள், தங்கம் போன்று, அதே நிறத்தில் ஜொலிக்கும் நகைகளை தயாரித்து கொடுக்க வேண்டும் என்பது எங்களின் அடுத்த முயற்சியாக இருக்கும்." என்று இருவரும் ஒரே நேர் கோட்டில் பிசகாமல் பேசுகிறார்கள். இவர்களுக்கு உறுதுணையாக இருந்து சில கிரியேட்டிவிட்டி ஐடியாக்களையும் தருவது சுபிக்ஷாவின் சகோதரி சுபாஷினி.
வெளிநாடுகளில் 16 வயது ஆகிவிட்டாலே பெண்களோ, ஆண்களோ சுயமாக சம்பாதிக்கத் தொடங்கி விடுகின்றனர். அந்த சம்பாத்தியத்தில்தான் படிக்கவும் செய்கின்றனர். மற்ற விஷயங்களில் அவர்களை முன்னோடிகளாக எடுத்துக் கொள்ளும் நமது மக்கள், படிக்கும் போதே பிள்ளைகள் நல்ல வழியில் சம்பாதிப்பதையும் இப்படி ஊக்குவிக்கலாம், அல்லது சொல்லித் தரலாமே!
வாழ்க இந்த பெண்கள், வளர்க இவர்களது கலைத்திறன்!
- 4தமிழ்மீடியாவுக்காக எழில்செல்வி, படங்கள் சூர்யா

No comments:

Post a Comment