Friday, August 29, 2014

Where to find happiness

சந்தோஷம் இல்லாத பணக்கார பெண்மணி :

மிகவும் வருத்தத்துடன் உள்ளே நுழைந்தாள் அந்த பணக்காரப் பெண்மணி. வரச் சொல்லி ஒரு நாற்காலி இழுத்துப் போட்டார் அந்த மனநல ஆலோசகர்.
"சொல்லுங்கள் என்ன பிரச்சனை ? ஏன் இப்படி வருத்தமாக இருக்கிறீர்கள்?"
அந்த அம்மா சொன்னார் " என்னிடம் எல்லா வசதியும் இருக்கிறது. பணம் காசு பங்களா வேலைக்கு ஆள் ...ஆனால் நிம்மதி இல்லை. உறக்கம் இல்லை. அதனால் தான் உங்களைத் தேடி வந்தேன்"
மனநல ஆலோசகர் உடனே ப்ரியா என்ற  பெண்மணியை அழைத்தார்.
"ப்ரியா உங்கள் சொந்த கதையை இந்த அம்மாவிடம் பகிர்ந்து கொள்ள முடியுமா?"
ப்ரியா அமர்ந்து  பேச ஆரம்பித்தாள்.
"என் கணவர் திடீர் என மலேரியா காய்ச்சல் வந்து  இறந்து விட்டார். அடுத்த மூன்று மாதத்தில் ஒரு சாலை விபத்தில் எனது ஒரே மகனும் இறந்து விட்டான். எனது உலகம் அப்படியே ஸ்தம்பித்து விட்டது. பசி, தூக்கம் எதுவும் கிடையாது. கடவுள் மீது இருந்த நம்பிக்கை போனது. வாழ்வில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் போனேன்.
யாரிடமும் சிரித்து பேசுவதை மறந்து போனேன். ஒரு நாள் பலத்த மழை. என் வீட்டிற்குள் ஒரு பூனைக் குட்டி வந்தது. நடுக்கத்தில் இருந்த அதற்கு தட்டில் பால் வைத்தேன். வேக வேகமாக பருகிய பூனைக்குட்டி என் அருகில் வந்து தந்து காலால் என் பாதத்தை லேசாக சுரண்டியது. என்னைப் பார்த்து புன்னகைத்த மாதிரி இருந்தது. வெகு நாட்கள் கழித்து நான் புன்னகைத்தேன்."
அந்த பணக்கார அம்மா மிகவும் சுவாரஸ்யமாக கேட்டுக் கொண்டிருந்தார்.
ப்ரியா தொடர்ந்தாள் :
" ஒரு கணம் யோசித்தேன். சிறு உதவி பூனைக்குட்டிக்கு செய்த போது இவ்வளவு சந்தோஷம் கிடைத்துள்ளதே...! அடுத்த நாள் கொஞ்சம் பிஸ்கட் செய்து அக்கம் பக்க சிறுவர்களுக்கு கொடுத்தேன். அனைவர் முகத்திலும் சிரிப்பைப் பார்த்தேன். அன்று முதல் ஏதாவது ஒரு விதத்தில் சிறு சிறு உதவிகள் செய்ய முயற்சி செய்தேன். நன்கு சாப்பிட்டேன். தூங்கினேன். சந்தோஷப் பட்டேன்....அதுவும் பிறருக்கு உதவி செய்வதில் ஒரு நிம்மதி இருப்பதை அறிந்தேன். அந்த ரகசியம் தான் என்னை இப்போது வாழ வைத்துக் கொண்டிருக்கிறது"
ப்ரியா எழுந்து போனாள். அந்த பணக்கார பெண்மணியும் தான் மன நல ஆலோசகரின் கையில் இரண்டாயிரம் ரூபாய் வைத்து விட்டு.
அவர் புரிந்து கொண்ட செய்தி : சந்தோஷம் என்பது நமது மனதில், நம் கையில் தான் உள்ளது.

No comments:

Post a Comment